என் மலர்
தமிழ்நாடு
தி.மு.க. ஆட்சியில் கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாகி விட்டது- பிரேமலதா குற்றச்சாட்டு
- கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார்.
- இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்ற மக்களின் கேள்விக்கு இந்த அரசு பதில் தர வேண்டும்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரும் சட்டவிரோத கல் குவாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடியவருமான ஜெகபர் அலி இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாக கனிம வள கொள்ளையர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வந்தார். இந்த விசாரணையில் ஜெகபர் அலி விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது தெரிய வந்ததால் குவாரி உரிமையாளர் உட்பட 4 பேரை திருமயம் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தி.மு.க. ஆட்சியில் இது போன்ற கொலைகள் நடப்பது சர்வசாதாரணமாக விட்டது. சமூக ஆர்வலராக ஒருவர் கனிமவள கொள்ளை நடப்பதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யாததால் அவர் திட்டமிட்டு லாரி ஏற்றி கொலை செய்த உண்மை நிலை விசாரணையில் வெளியே வந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி விசாரணை செய்ய வேண்டும். உண்மைக்காக குரல் கொடுத்த ஒருவரை கொலை செய்தது எந்த விதத்தில் நியாயம்? இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்ற மக்களின் கேள்விக்கு இந்த அரசு பதில் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.