என் மலர்
தமிழ்நாடு

வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
- வக்பு சட்டமானது 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
- எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள்.
சென்னை:
மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை செய்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:-
வேற்றுமையில் ஒற்றுமை கண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் வாழும் நாடு இந்திய நாடு. பல்வேறு இனங்கள், மொழிகள், மதங்கள், வழிபாட்டு நம்பிக்கைகள், பண்பாடுகள் இருப்பினும் அனைவரும் இந்திய நாட்டு மக்கள் என்ற உண்மை உணர்வோடு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இத்தகைய நாட்டை ஆளும் அரசும் இத்தகைய உணர்வைக் கொண்ட அரசாகத்தான் செயல்பட வேண்டும். ஆனால் ஒன்றியத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசானது, தனது செயல்பாடுகள் அனைத்தையும் ஒருவிதமான உள்நோக்கம் கொண்டதாகச் செய்து வருகிறது. எதைச் செய்தாலும் குறிப்பிட்ட தரப்பை வஞ்சிக்கும் வகையில் தான் திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.
குடியுரிமைத் திருத்தச் சட்டமானது சிறுபான்மை இசுலாமிய மக்களையும், இலங்கைத் தமிழர்களையும் வஞ்சித்தது. இந்தியைத் திணித்து இந்தி பேசாத மாநிலங்களை வஞ்சிக்கிறது. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை நிதி நெருக்கடி மூலமாக வஞ்சிக்கிறது.
சமூகநீதிக்கு எதிரான அவர்களது செயல்பாடுகள் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சிக்கிறது. நீட் மற்றும் தேசிய கல்விக் கொள்கையானது அடித்தட்டு மக்களைப் பாதிப்பதாக அமைந்திருப்பதை அனைவரும் அறிவோம். இந்த வரிசையில் கொண்டு வரப்படும் வக்பு சட்டத் திருத்தமானது சிறுபான்மை இசுலாமிய இன மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கான தீர்மானத்தை இம்மாமன்றத்தில் நான் முன்மொழிய இருக்கிறேன் என்பதை முன்னுரையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வக்பு சட்டமானது 1954-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தில் 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் இன்றைய ஒன்றிய பா.ஜ.க. கூட்டணி அரசு சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான முன்வரைவினைக் கடந்த 8-8-2024 அன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாகவும், மத உரிமைகளைப் பாதிப்பதாகவும் ஒன்றிய அரசின் சட்டத் திருத்தங்கள் இருந்ததால் அதனை தி.மு.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்த்தோம்.
எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பாராளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு இதனை அனுப்பினார்கள். இந்தச் சட்டத்தை நாம் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வக்பு சட்டத்தைத் திருத்துவதன் மூலமாக ஏற்படும் மோசமான விளைவுகள் சிலவற்றை இம்மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.
வக்பு சட்டத்தை ஒன்றிய அரசு திருத்த நினைக்கிறது. இதன் மூலம் மத்திய வக்பு கவுன்சில் மற்றும் மாநில வக்பு வாரியங்களின் கட்டமைப்பு மாற்றப்பட்டு, அரசாங்கத்தின் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இது வக்பு நிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும்.
அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்பு சொத்து, இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்பு சொத்தாகக் கருதப்படாது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துக்களை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்பு அறிவிக்க முடியும் என்று கட்டுப்படுத்துகிறது. இது முஸ்லிம் அல்லாதவர்களால் உருவாக்கப்பட்ட வக்புகளைச் செல்லாதது என்று ஆக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
இசுலாமிய மக்களில் இரண்டு குறிப்பிட்ட வகுப்பினருக்குத் தனி சொத்து வாரியம் உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
மாநில வக்பு வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்கும் தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநில வக்பு வாரியங்களில் இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமென்று இந்தச் சட்டம் கட்டாயப்படுத்துகிறது. இது முஸ்லிம்களின் மத நிர்வாகத்தில் அரசு தலையிடுவதாகும்.
வக்பு சட்டத்தின் பிரிவு 40-ஐ நீக்குவது வக்பு வாரியத்தின் சொத்து அடையாள அதிகாரத்தை அகற்றி, அதை அரசுக்கு மாற்றுகிறது. இது அரசியலமைப்பின் பிரிவு 26-ன் கீழ் மத சுதந்திரத்தை மீறுவது ஆகும்.
வக்பு பயனர் என்ற பிரிவை நீக்கத் திட்ட மிட்டுள்ளார்கள். நீண்ட காலப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை இது அகற்றுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக உள்ளது.
லிமிட்டேஷன் ஆக்ட் என்று சொல்லப்படும் காலவரையறைச் சட்டம் வக்பு சொத்துகளுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது.
அறநிலையங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்கள் இனி வக்பு என கருதப்பட மாட்டாது. இந்தப் பிரிவுகள் முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனை ஒன்றிய அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை.
இந்த அடிப்படையில் வக்பு நிர்வாகத்தில் அரசின் தலையீட்டை அதிகரிப்பதாக ஒன்றிய அரசின் சட்டத் திருத்தம் அமைந்துள்ளது. இது சிறுபான்மை இசுலாமிய மக்களின் மத உரிமைகளை பாதிப்பதாகவும் இருக்கிறது.
இதனை பாராளுமன்றக் கூட்டுக் குழுவிடம் 30.9.2024 அன்று தமிழ்நாடு அரசு தெளிவாகச் சொல்லி இருக்கிறது. பாராளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்ற தி.மு.க. உறுப்பினர்களான முன்னாள் அமைச்சரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவும் கடுமையாகத் தங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க. மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் திருத்தங்களை பாராளுமன்றக் கூட்டுக் குழு நிராகரித்து இருக்கிறது. பாராளுமன்றக் கூட்டுக் குழுவின் முடிவுகளுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலும் வழங்கிவிட்டது. இந்த நிலையில் வக்பு திருத்தச் சட்டமானது எந்த நேரத்திலும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம். இசுலாமிய மக்களை வஞ்சிக்கும் இச்சட்டத்துக்கு எதிரான நமது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசிய அவசரம் என்று நான் கருதுகிறேன்.
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான, மத சுதந்திரத்தை நிராகரிக்கும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான, வக்பு நோக்கத்துக்கு எதிரான, நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணான, குழப்பமான, தேவையற்ற, பல்வேறு பிரிவுகள் வக்பு திருத்தச் சட்டத்தில் இருக்கின்றன.
இந்தத் திருத்தச் சட்டமானது வக்பு அமைப்பையே காலப்போக்கில் செயல்பட விடாமல் முடக்கிவிடும். எனவே நாம் இதனை எதிர்க்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
மதநல்லிணக்கம்-அனைவருக்குமான அரசு என்ற இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறிவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
இந்தியத் திருநாட்டில் மத நல்லிணக்கத்துடன் அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து மக்களுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறது. அதைப் பேணிக் காக்கும் கடமை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு உள்ளது.
ஆனால் அதற்கு மாறாக, சிறுபான்மையின இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில், 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தினைத் திருத்துவதற்குக் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசு மக்களவையில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்டத்திருத்த முன்வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்ற தீர்மானத்தை நான் முன்மொழிந்து அமைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதையடுத்து அரசின் தனித் தீரமானம் மீது அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசினார்கள். அதன் பிறகு தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசை எதிர்த்து கொண்டு வரப்பட்ட அரசின் தனித் தீர்மானத்துக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.