என் மலர்
தமிழ்நாடு
மத்திய அரசை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு நாளை முற்றுகை போராட்டம்- செல்வப்பெருந்தகை
- பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
- கவர்னர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பாக அதானி உள்ளிட்டோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மணிப்பூர் கலவரத்தை அடக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்க்காதது குறித்தும் விவாதிப்பதற்காக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உரிய விதிப்படி அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
நாட்டை உலுக்குகிற முக்கியமான பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியினர் அனுமதி மறுத்ததை கண்டித்து நாடு முழுவதும் மாநிலங்களில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவதென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது.
அதன்படி, நாளை (18-ந்தேதி) காலை 10 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் எனது தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.