என் மலர்
தமிழ்நாடு

திருமயம் கல்குவாரிகளில் நடந்த சுங்க அதிகாரிகள் சோதனை நிறைவு

- கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி ஸ்கூட்டரில் சென்ற சென்றபோது மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
- அரசு அனுமதித்த அளவை விட கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதா? என அளவீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). அ.தி.மு.க. பிரமுகரும், சமூக ஆர்வலருமான இவர் திருமயம் அருகே துளையானூர் பகுதியில் இயங்கி வந்த கல் குவாரிகளில் சட்ட விரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக போராடி வந்தார். மேலும் அதிகாரிகளிடம் புகார் அளித்து, நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி ஸ்கூட்டரில் சென்ற சென்றபோது மினி லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் 2 கல்குவாரி அதிபர்கள் பின்னணியில் கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டது.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து லாரி ஏற்றி கொலை செய்த மினி லாரி உரிமையாளர் திருமயம் முருகானந்தம் (56),
அவருக்கு உதவியாக செயல்பட்ட மினி லாரி டிரைவர் காசிநாதன்(45), துளையானூர் கல்குவாரி உரிமையாளர் ராசு( 54), அவரது மகன் தினேஷ் (28) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மற்றொரு கல்குவாரி உரிமையாளர் ராமையா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர் கொலை வழக்கு அதிரடியாக சி.பி.சி.ஐ.டி.க்கு நேற்று மாற்றப்பட்டது. இதற்கான உத்தரவை டி.ஜி.பி.சங்கர் ஜிவால் பிறப்பித்தார்.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார் இன்று விசாரணையை தொடங்குகிறார்கள்.கொலை நடந்த இடத்தை முதலில் ஆய்வு செய்கிறார்கள்.
பின்னர் திருமயம் காவல் நிலையத்தில் வழக்கு விவரங்களை கேட்டறிந்து விசாரணையை தொடர் வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது இதற்கிடையே புகாருக்குள்ளான ராசு மற்றும் ராமையா கல்குவாரிகளில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்த ஆய்வு நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இந்த ஆய்வு நேற்று பிற்பகல் நிறைவடைந்தது இதில் முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு அனுமதித்த அளவை விட கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதா? என அளவீடு செய்யப்பட்டு உள்ளது.
நவீன ட்ரோன் மூலம் இந்த சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.