என் மலர்
தமிழ்நாடு
எஸ்.பி. வேலுமணி- நயினார் நாகேந்திரன் 'திடீர்' சந்திப்பு ஏன்? பரபரப்பு தகவல்கள்
- அரசியல் நிமித்தமான சந்திப்பு என்பது நிச்சயம் கிடையாது
- எஸ்.பி. வேலுமணிக்கு அ.தி.மு.க. கறையுடன் கூடிய சால்வையை நயினார் நாகேந்திரன் அணிவித்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
நெல்லை:
வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் மன நிலையை அறியும் விதமாக கட்சியின் மூத்த முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் கள ஆய்வு குழுக்களை அமைத்தார். அந்த குழுக்கள் மாவட்டம் வாரியாக சென்று கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று நெல்லை மாநகர் மற்றும் புறநகரில் கள ஆய்வு கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி பங்கேற்றார்.
மாநகர் மாவட்டத்தில் கூட்டம் முடிந்ததும் வேலுமணி, நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் பாளை பெருமாள்புரத்தில் உள்ள பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரனை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றார்.
அப்போது அவரை மலர்ந்த முகத்துடன் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். மேலும் எஸ்.பி. வேலுமணிக்கு அ.தி.மு.க. கறையுடன் கூடிய சால்வையை நயினார் நாகேந்திரன் அணிவித்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
பின்னர் இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் வீட்டில் அமர்ந்து சிறிது நேரம் பேசினர். தொடர்ந்து தனது இல்ல திருமண அழைப்பிதழை நயினார் நாகேந்திரனிடம் வழங்கிவிட்டு எஸ்.பி. வேலுமணி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பாஜக-அ.தி.மு.க. கூட்டணி முறிந்த நிலையில், இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துவிட்டார்.
இந்தநிலையில் கட்சியின் சீனியர்களில் ஒருவரான எஸ்.பி. வேலுமணி. பாஜக தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரனை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்து இருப்பது பேசு பொருளாகி உள்ளது.
அவர்கள் 2 பேரும் என்ன பேசி இருப்பார்கள்? ஏற்கனவே கூட்டணியில் விரிசல் விழுந்துள்ள நிலையில் இவர்களது சந்திப்பு என்பது பாஜக-அ.தி.மு.க. கூட்டணிக்கான முன்னோட்டமா? இந்த சந்திப்பால் பாஜக- அ.தி.மு.க. இடையே மீண்டும் உறவு மலர்கிறதா? என பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் 2 பேரும் என்ன பேசி கொண்டார்கள் என்பதை அறிய நயினார் நாகேந்திரனை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்க வில்லை. அவரது மகன் நயினார் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தனிப்பட்ட முறையில் எனது அப்பாவும், எஸ்.பி. வேலுமணியும் மிகவும் பரிட்சயமானவர்கள். நண்பர்கள். எஸ்.பி. வேலுமணி அவரது இல்ல திருமண விழா அழைப்பிதழை கொடுப்பதற்காக எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். இதில் அரசியல் நிமித்தமான சந்திப்பு என்பது நிச்சயம் கிடையாது. அவர்கள் இருவரும் 5 நிமிடம் மட்டுமே பேசினர்.
தொடர்ந்து டீ சாப்பிட்டு விட்டு சென்றுவிட்டார். எங்கள் வீட்டிலும் எல்லாரும் இருந்தோம். அ.தி.மு.க.விலும் முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். இந்த சந்திப்பில் அரசியல் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.