என் மலர்
தமிழ்நாடு
2 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 15-ந்தேதி கள ஆய்வு
- 2 மாவட்ட பயனாளிகள் 10 ஆயிரம் பேருக்கு ரூ. 70 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகிறார்.
- பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100 பேர் கலந்து கொள்கிறார்கள்.
அரியலூர்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கடந்த 5, 6-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் கள ஆய்வை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9,10-ந்தேதிகளில் விருதுநகரில் கள ஆய்வு செய்தார். இதன் தொடர்ச்சியாக வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்து முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக நாளை மறுநாள்(14-ந்தேதி) மாலை அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார். பின்னர் கார் மூலம் புறப்பட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கோண்டம் பொதுப்பணித்துறை பயணியர் விடுதிக்கு சென்று இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மறுநாள் (15-ந்தேதி) காலை 10 மணியளவில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் 131 ஏக்கர் பரப்பளவில், ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சிப்காட் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் திருமானூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாரணவாசி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தமிழக அரசின் ஊட்டச்சத்து உறுதித் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தினை தமிழ்நாட்டில் முதன் முதலாக இங்கு தொடங்கி வைப்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு செந்துறை சாலை கொல்லாபுரம் கிராமத்துக்கு செல்கிறார். அங்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மேடையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் முடிவுற்ற அரசு திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 2 மாவட்ட பயனாளிகள் 10 ஆயிரம் பேருக்கு ரூ. 70 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகிறார்.
அதன் பின்னர் மதியம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு புறப்பட்டு செல்கிறார். பாலக்கரையில் உள்ள முன்னாள் மத்திய மந்திரி ராசா அலுவலகத்தில் மதிய உணவு சாப்பிட்டு சற்று நேரம் ஓய்வெடுக்கிறார்.
அதன் பின்னர் மாலை 4 மணி அளவில் துரை மங்கலம் சாலை வழியாக பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள பூமனம் திருமண மண்டபத்தில் நடைபெறும் திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
இதில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் 100 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கார் மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்று அங்கிருந்து விமான மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முன்னதாக பெரம்பலூர் வருகை தரும் முதலமைச்சருக்கு மாவட்ட திமுக சார்பில் மேலமாத்தூர் பகுதியிலும், வேப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் குன்னம் பகுதியிலும், பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் நான்கு ரோடு ஆகிய பகுதிகளிலும் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. மனோகர் ஆகியோர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கொல்லாபுரத்தில் விழா நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்கள். பொதுப்பணித் துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் விழா மேடை அமைப்பு குறித்து கேட்டறிந்தார்கள்.
தொடர்ந்து பெரம்பலூர் பூமணம் திருமண மண்டபம் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ராசா அலுவலகம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அரியலூர் செல்வராஜ், பெரம்பலூர் ஆதர்ஷ் பசேராவுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
அரியலூர் மாவட்ட நிகழ்ச்சிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பெர்ம்பலூரில் முதலமைச்சர் வரவேற்பு மற்றும் கலந்தாய்வு கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி ராசா தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.