என் மலர்
தமிழ்நாடு
கனமழை எச்சரிக்கை எதிரொலி- ஓ.பி.எஸ். நாளை நடத்த இருந்த கூட்டம் டிசம்பர் 7-ந்தேதிக்கு தள்ளி வைப்பு
- தொண்டர்களின் கருத்தை கேட்காமல் முன்னாள் அமைச்சர்கள் பேசிவிட்டு சென்று விடுவதாக அடிமட்ட நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
- ஓ.பன்னீர்செல்வம் விரைவில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க. உரிமை மீட்பு குழுவை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் அதன்பின் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமித்தார். அதன்பின் சென்னையில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் நடத்தப்பட்டது.
இதில் அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆரம்பத்தில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருந்த நிர்வாகிகள் ஆதரவு படிப்படியாக குறையத் தொடங்கியது.
இதனை நன்கு உணர்ந்த பலர் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு மேலாக ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டவில்லை. அவ்வப்போது நடைபெறும் விசேஷ நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டு தினந்தோறும் ஏதேனும் ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி சத்தம் இல்லாமல் முன்னாள் முதல்வர் ஜானகி எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடத்தி தொண்டர்களுக்கு உற்சாகமாக உரையாற்றினார்.
அதில் அ.தி.மு.க. தோல்வி அடையும் கட்சி அல்ல என்றும், 10 வருடம் தி.மு.க.வால் ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பதை உணர்ந்து வருகிற தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டுகோள் விடுத்து உள்ளார். ஆனால் 2 முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் இந்த நூற்றாண்டு விழா குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
குறிப்பாக ஜானகி-எம்.ஜி.ஆர் குறித்தும் பழைய வரலாறுகள் குறித்தும் அவர் அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இது அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தன்னிடம் உள்ள மற்ற நிர்வாகிகளும் கரைந்து வேறு முகாமிற்கு சென்று விடாமல் இருக்க மீண்டும் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் கூட்டி உள்ளார்.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதோடு, டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கான 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கையையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ளது. இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னையில் நடைபெறுவதாக இருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
இதற்கு பதிலாக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை அசோகா ஓட்டலில் உள்ள டாக்டர் கே.ஆர்.பி.எம். மகாலில் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தொண்டர்களின் கருத்தை கேட்காமல் முன்னாள் அமைச்சர்கள் பேசிவிட்டு சென்று விடுவதாக அடிமட்ட நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர். தொண்டர்களை உற்சாகப்படுத்த ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்று கூறும் மாவட்ட செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும் தங்களுக்கு நெருக்கமானவர்களை மடடுமே வளர்த்து விடுவதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு சில கூட்டங்களில் பிரிந்து சென்றவர்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகளை கவனித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் தொண்டர்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளும் வகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது தவிர தற்போது இரட்டை இலை சின்னம் குறித்த முக்கிய முடிவை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.