என் மலர்
தமிழ்நாடு
பலத்த மழையால் சிக்னல் கோளாறு- தென் மாவட்ட ரெயில்கள் தாமதம்
- எழும்பூர் நோக்கி வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் சிக்கியது.
- மழையால் பாதுகாப்பு கருதி ரெயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை உள்பட வட மாவட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் நீண்ட தூர செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்னைக்கு தாமதமாக வந்தன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, திருவனந்தபுரம், மதுரை, திருச்செந்தூர், செங்கோட்டை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிகாலையில் விழுப்புரத்தை நெருங்கின.
அங்கிருந்து சென்னை வரும் வழி முழுவதும் பலத்த மழை பெய்ததால் ரெயில்கள் குறித்த வேகத்தில் இயக்க முடியவில்லை. ஒருசில இடஙக்ளில் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனால் ரெயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன.
எழும்பூர் நோக்கி வந்த கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் முதலில் சிக்கியது. விழுப்புரம் அருகே அந்த ரெயில் நின்றதால் அதனை தொடர்ந்து வந்த எல்லா ரெயில்களும் ஒவ்வொரு ரெயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.
இதனால் அதிகாலை 3 மணிக்கு எழும்பூர் வந்து சேர வேண்டிய கொல்லம் எக்ஸ்பிரஸ் ஒருமணி நேரம் தாமதமாக வந்தது. அதனை தொடர்ந்து சேலம் எக்ஸ்பிரஸ், பாண்டியன், பொதிகை, ராமேசுவரம், சோழன், நெல்லை உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்து சேர்ந்தன. மழையால் பாதுகாப்பு கருதி ரெயில்கள் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.