என் மலர்
தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்
- கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
- டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில் பார் உரிமம் வழங்கியது, மதுபானங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், என்ன குற்றச்சாட்டு? அதற்கான முகாந்திரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்து வழக்கை 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.
அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.
எனவே இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விலகல் முடிவை எடுத்துள்ளனர்.