என் மலர்
தமிழ்நாடு

நடப்பாண்டில் 2,545 ரேசன் கடைகளுக்கு புதிதாக கட்டிடங்கள் கட்டப்படுகின்றன- சட்டசபையில் அமைச்சர் பதில்
- திருப்பூர் காளிபாளையத்தில் முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
- அரூர் செட்டிப்பட்டி ஊராட்சியில் மின்தேவை பூர்த்தி செய்ய தற்போது உள்ள துணைமின் நிலையமே போதுமானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை:
தமிழக சட்டசபை கடந்த 14-ந்தேதி பட்ஜெட் உரையுடன் தொடங்கியது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இன்றும் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அவை தொடங்கியதும், கேள்விகளும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் விவரம்:-
ரேசன் கடை புகார் பெட்டி மூலம் எத்தனை புகார்கள் வந்துள்ளன, மக்களுக்கு தெரியுமாறு புகார் பெட்டி வைக்க வேண்டும் என உறுப்பினர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், தி.மு.க. ஆட்சியில் ரேசன் கடைகளில் புகார் பதிவேடுகள் மூலம் 97,535, புகார் பெட்டி மூலம் 875 புகார்கள் வந்துள்ளன. புகார் பதிவேடு பெட்டிகளை மக்களுக்கு தெரியும் வகையில் வைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என்றார். மேலும், ரேசன் கடைகளில் கைரேகை வைப்பத்தில் சிக்கல் இருந்தால், புகாரை உடனுக்குடன் சரிசெய்கிறோம். மேலும் ரேசன் கடைகளில் Brod Band சேவைகளை தடையின்றி விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவு கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 34,902 ரேசன் கடைகளில் 6,218 கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. நடப்பாண்டில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அசோக்குமார் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
திருப்பூர் காளிபாளையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா என எம்.எல்.ஏ. விஜயகுமார் கேள்வி எழுப்பினார். திருப்பூர் காளிபாளையத்தில் முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனிடையே, மதுரை திருமங்கலத்தில் புதிதாக பெரிய பேருந்து நிலையம் கட்டித் தரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரூர் செட்டிப்பட்டி ஊராட்சியில் மின்தேவை பூர்த்தி செய்ய தற்போது உள்ள துணைமின் நிலையமே போதுமானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.