என் மலர்
தமிழ்நாடு

சிறைவாசி நலனுக்காக தி.மு.க. அரசு செயல்படுகிறது- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

- சிறைவாசிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகிறது.
- விடுதலை பெற்ற சிறை வாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பில் விடுதலை பெற்ற 750 முன்னாள் சிறை வாசிகளுக்கு ரூ.3.75 கோடி உதவி தொகை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடந்தது.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உதவி தொகையை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சிறைவாசிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுகிறது. அசைவ உணவு, சத்தான உணவு வழங்கப்படுகிறது. சிறைவாசிகளுக்கு உதவி செய்வதில் தமிழக அரசு முன் மாதிரியாக திகழ்கிறது.
அவர்களது நலனில் அக்கறை கொண்டு இந்த அரசு செயல்படுகிறது. சிறைக் கூடங்களை தண்டனை இடமாக பார்க்கவில்லை. அது சீர்திருத்த இடமாக பார்க்கப்படுகிறது. விடுதலை பெற்ற சிறை வாசிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சிறைவாசிகளுக்கான நலச்சங்கம் இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமே இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
சிறைவாசிகள் கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும். இந்த நிதியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். நம்பிக்கையுடன் செல்லுங்கள். புதிய உலகத்தை பாருங்கள்.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அமைச்சர்கள் எஸ். ரகுபதி, பி.கே.சேகர்பாபு , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், உயர் அதிகாரிகள் தீரஜ் குமார், மகேஷ்வர் தயாள், கனகராஜ், முருகேசன் மற்றும் சிறை மீண்டோர் நலச் சங்க கவுரவ பொருளாளர் ஞானேஸ்வரன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.