என் மலர்
தமிழ்நாடு

2026-ல் இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டி... ஒன்று த.வெ.க. இன்னொன்று தி.மு.க. - விஜய்
- எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது.
- அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய சுதந்திரப் போராட்ட வீர மங்கைகளை கட்சியின் கொள்கை தலைவர்களாக அறிவித்த முதல் அரசியல் கட்சி தமிழக வெற்றிக்கழகம் என்று தெரிவிப்பதை பெருமையுடன் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
இப்படி ஒரு ஆழமான நம்பிக்கையுடன் வரும் 2026-ல் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை கொண்டு வந்து மக்கள் சக்தியின் உதவியுடன் மக்கள் விரும்பும் ஒரு நல்லரசை அமைப்பதில் உறுதியாக இருப்பதால், அதை தடுப்பதற்கு என்று ஒரு சிலர் பகல் கனவு காண்பார்கள் இல்லையா?
அவர்களுக்கு சொல்லிக்கொள்வது ஒன்றுதான். காற்று, மழை, வெயில், இயற்கையை யாரால் கட்டுப்படுத்த முடியும். யாரால் தடுக்க முடியும். எல்லாம் கடவுளால் உருவாக்கப்பட்டது. அப்படித்தான் எம் மக்களுக்கான அரசியலையும் யாராலும் தடுக்க முடியாது.
அரசியல் சூறாவளியும், தேர்தல் சுனாமியையும் தடுப்பார் எவர். அப்படிதான் எம் மக்களுக்கான அரசியலையும் அந்த வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு ஒரு நாளும் மெய்ப்படாது.
வில்லியம் பிளேக்-ன் சில வார்த்தைகள். யார் வேண்டுமானாலும் வருவாங்க.. யார் வேண்டுமானாலும் போவாங்க.. ஆனால் நான் முன்னோக்கி போய்க்கொண்டே இருப்பேன்.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்
என்ற குறளுக்கேற்ப, ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலை செய்தால் பூவுலகம் முழுவதையும் வேண்டினாலும் அது கைவசப்படும் என்ற திருக்குறளுடன் என் நன்றி உரையை நிறைவு செய்கிறேன்.
பார்த்துக்கொண்டே இருங்கள். அடுத்த வருடம் இதுவரை தமிழ்நாடு சந்திக்காத ஒரு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்று TVK ஒன்று DMK. நம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்," என்று கூறினார்.