என் மலர்
நைஜர்
- பள்ளிக்கூட நிகழ்ச்சியில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
- இந்த நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
அபுஜா:
நைஜீரியா நாட்டின் ஓயோ மாகாணம் பசொரன் நகரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கூடத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் ஆண்டு நிறைவையொட்டி அந்தப் பள்ளிக்கூடத்தில் நேற்று கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க மாணவ, மாணவியரின் குடும்பத்தினரும் வந்திருந்தனர். நிகழ்ச்சியின்போது பரிசு பொருட்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் நிகழ்ச்சியைக் காணவும், பரிசுப்பொருட்களை வாங்கவும் பள்ளிக்கூடத்தில் கூட்டம் குவிந்தது. எதிர்பாராத விதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- வடக்கு நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
- இதில் ஆற்றில் விழுந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகளைக் காணவில்லை.
நைஜர்:
நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கிச் சென்ற அந்த படகில் 200-க்கும் அதிகமானோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த பயணிகள் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர்.
தகவலறிந்து உள்ளூரைச் சேர்ந்த டைவிங் குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பேரிடர் மேலாண்மை நிறுவன மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
இந்நிலையில், மீட்பு பணியின்போது 27 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்றும், மாயமான 100 பேரின் நிலை என்ன என்றும் தெரியவில்லை. மாயமானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விசாரணையில், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதால் படகு கவிழ்ந்திருக்கலாம் என தெரிய வந்தது.
- மாலி எல்லை அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
- தபடோல் பகுதியில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொணடனர்.
நியாமி:
ஆப்பிரிக்க நாடான நைஜரில் கடந்த ஜூலை மாதம் அதிபர் முகமது பாசும் சிறைபிடிக்கப்பட்டார். அதுமுதல் அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அண்டை நாடான மாலி எல்லை அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்குள்ள தபடோல் பகுதியில் ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொணடனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 29 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் இருவர் படுகாயம் அடைந்ததாக நைஜர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அதிபர் பதவியில் இருந்து முகமது பாசுவை அகற்றி விட்டு நைஜரில் ராணுவ ஆட்சி வந்தது.
- அறிவிப்புக்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
நைஜர்:
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் இதற்கு முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு நைஜர் சுதந்திர நாடாக உருவெடுத்தது.
இருந்தபோதிலும் நைஜர் நாட்டில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வந்தது. தனது நாட்டின் ராணுவ வீரர்கள் 1500 பேரை பிரான்ஸ் நைஜரில் நிலை நிறுத்தி இருந்தது. பிரான்சுக்கு ஆதரவாக அந்நாட்டு அதிபர் முகமது பாசும் இருந்து வந்தார். இந்நிலையில் அவருக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் திரும்பியது. அதிபர் பதவியில் இருந்து முகமது பாசுவை அகற்றி விட்டு நைஜரில் ராணுவ ஆட்சி வந்தது.
இந்நிலையில் அந்த நாட்டில் நிறுத்தப்பட்டு இருந்த 1500 வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்து உள்ளார். அவரின் இந்த அறிவிப்புக்கு நைஜர் ராணுவ ஆட்சியாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
- அப்துரஹ்மானே சியானி தன்னைத்தானே புது அதிபராக அறிவித்துக் கொண்டார்
- நைஜர் ஜன்தாவை ஆட்சியாளர்களாகவே நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்கிறது பிரான்ஸ்
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜர். இதன் தலைநகர் நியாமே.
இங்கு அதிபராக இருந்த மொகமெட் பசோம் (Mohamed Bazoum), ஜன்தா (junta) எனப்படும் ராணுவ குழு நடத்திய சிறு கிளர்ச்சியால் கடந்த ஜூலை 26 அன்று பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
இவருக்கு பதிலாக கிளர்ச்சியாளர்கள் அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி (Abdourahamane Tchiani) தன்னைத்தானே புது அதிபராக அறிவித்து கொண்டு ஆட்சியில் அமர்ந்தார்.
முன்னாள் அதிபரும் அவர் குடும்பத்தினரும் சிறை வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன. அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஜன்தா அமைப்பு 21 பேர்களை கொண்ட ஒரு புதிய அமைச்சரவையையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான எகோவாஸ் (ECOWAS) இந்த ஆட்சி மாற்றத்தை அங்கீகரிக்கவில்லை. மீண்டும் பசோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டுமென்று ஜன்தா அமைப்பிற்கு எகோவாஸ் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், இதற்கு ஜன்தா பணியவில்லை.
நைஜரில் அமைதியான முறையில் ஜனநாயக ஆட்சியை மீண்டும் கொண்டு வர அமெரிக்கா உட்பட பல நாடுகள் முயற்சித்தன. ஆனால் அவையும் தோல்வியில் முடிந்தது.
ஆகஸ்ட் 18 அன்று, "முடிவில்லாத பேச்சுவார்த்தையை ஜன்தா அமைப்புடன் நடத்த முடியாது. தேதி அறிவிக்காமல் ஒரு முக்கிய நாளில் ராணுவ ரீதியாக நைஜரில் ஜனநாயகத்தை மலரச் செய்வோம்" என எகோவாஸ் அமைப்பு அறிவித்தது.
இந்த எச்சரிக்கையையும் ஜன்தா அலட்சியப்படுத்தியது.
இந்நிலையில் தற்போதைய நைஜர் அரசு, பிரான்ஸ், ஜெர்மனி, நைஜீரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த தூதர்கள், நைஜர் நாட்டை விட்டு 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளது.
"நைஜர் ஜன்தாவை ஆட்சியாளர்களாகவே நாங்கள் அங்கீகரிக்கவில்லை" என பிரான்ஸ் நாடு உடனடியாக பதிலளித்தது.
தொடர்ந்து நடக்கும் ரஷிய - உக்ரைன் போரினால் சரிந்து வரும் உலக பொருளாதாரம், மற்றொரு போர் நைஜரில் ஏற்பட்டால் மேலும் பாதிப்படையலாம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- நைஜரில் தற்போது ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
- மனைவி மற்றும் மகனுடன் அதிபர் பசோம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாடிகன்:
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நாடு நைஜர். அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.
பாதுகாப்பின்மை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி கடந்த ஜூலை 26-ம் தேதி ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் அதிபர் பசோம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
அதிபர் பசோம், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தலைநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். நைஜரில் ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்ததாக அந்நாட்டு ராணுவம் அரசு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தது. ராணுவத்தின் இந்தச் செயலுக்கு ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.
இதற்கிடையே, நைஜரின் புதிய ராணுவ ஆட்சிக்கும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான எகோவாஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த வார இறுதியில் நடந்த பேச்சுக்கள் சிறிதளவு முன்னேற்றத்தை அளித்துள்ளது என கூறப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.
மேலும், அனைவரின் நலனுக்காகவும் கூடிய விரைவில் அமைதியான தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
- முகமது பசோம் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்
- ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என எகோவாஸ் எச்சரித்திருக்கிறது
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர்.
அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.
பாதுகாப்பின்மையை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி ஜூலை 26-ம் தேதி ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பசோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
நாட்டின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் எனும் ஒரு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி (Abdourahamane Tchiani) என்பவர் புதிய அதிபராக பதவியேற்றார்.
ராணுவ அமைப்பு பதவி விலகி, பசோம் மீண்டும் பதவியில் அமர வைக்கப்படவில்லை என்றால் கூட்டு ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான எகோவாஸ் (ECOWAS) அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து அந்நாட்டின் தலைநகரமான நியாமே (Niamey) நகரில் உள்ள குடிமக்கள் அங்கு தற்போது ஆளும் ராணுவ அமைப்பில் பல்லாயிரக்கணக்கில் தன்னார்வலர்களை சேர்த்து கொள்ள அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
எகோவாஸ் எடுக்க கூடிய ராணுவ நடவடிக்கையில் இருந்து தாய்நாட்டை காக்கும் வகையில் போரிடவும், மருத்துவ உதவிகள் செய்யவும், தொழில்நுட்ப மற்றும் போக்குவரத்து செயல்பாடுகளில் உதவவும், பெருமளவில் தன்னார்வலர்கள் தங்களை பதிவு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.
இதன்படி 18 வயதை கடந்த எவரும் தானாக முன்வந்து சேவை செய்ய விரும்பினால் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
- அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் நைஜர் தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு 2 மணி நேரம் நடைபெற்றது
- நைஜருக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படும் என அமெரிக்கா திட்டவட்டம்
மேற்கு ஆப்பிரிக்காவின் பெரிய நாடு நைஜர்.
அந்நாட்டில் ஜூலை 29-ம் தேதி நடைபெற்ற ஒரு ராணுவ புரட்சி மூலம் அங்கு பதவியில் இருந்த அதிபர் மொஹமத் பாஸோம் மாற்றப்பட்டு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி ஆட்சியை கைப்பற்றி தன்னை புதிய அதிபராக அறிவித்து கொண்டார்.
இந்த புதிய ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில் நைஜர் நாட்டின் தலைநகர் நியாமே நகரில், புதிய ஆட்சியின் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க பிரதிநிதிகள் சென்றனர்.
ஆனால், இந்த பிரதிநிதிகளை தற்போது அமைந்திருக்கும் புதிய ஆட்சியின் அதிபரும், ராணுவ அமைப்பின் தலைவருமான அப்துரஹ்மானே சியானி சந்திக்கவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு துணை நின்ற 3 ராணுவ அதிகாரிகளும், அமெரிக்காவிடம் பயிற்சி பெற்றவரும், ராணுவ அமைப்பின் ஜெனரலுமான மூஸா ஸலாவ் பார்மோ (Gen. Moussa Salaou Barmou) ஆகியோர் மட்டுமே இச்சந்திப்பில் பங்கேற்றனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு அமெரிக்க அரசாங்கத்தின் துணை செயலாளர் விக்டோரியா நியூலாண்ட் தெரிவித்திருப்பதாவது:-
ஆட்சியை கைப்பற்றியிருக்கும் ராணுவ அமைப்பின் தலைவர்கள் எங்களை ஜனநாயகமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த முன்னாள் நைஜர் அதிபரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அவர் வீட்டு காவலில் இருப்பதாக நினைக்கிறோம். மீண்டும் மக்களாட்சிக்கு திரும்புவதற்கு அமெரிக்காவின் கோரிக்கைகளையும், அழுத்தங்களையும் இந்த கிளர்ச்சியாளர்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.
நைஜர் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கெதிராக செயல்படும் அவர்களின் வழிமுறையில் அவர்கள் தெளிவாக தொடர இருக்கிறார்கள். எங்கள் பேச்சுவார்த்தை மிகவும் வெளிப்படையாக இருந்தாலும் சில நேரங்களில் முன்னோக்கி எடுத்துச் செல்வதில் கடினமாக இருந்தது.
ஜனநாயகம் மீண்டும் திரும்பவில்லை என்றால் நைஜர் நாட்டிற்கு அமெரிக்கா வழங்கி வரும் உதவிகள் நிறுத்தப்படும் என தெரிவித்தோம். முன்னாள் அதிபர் மொஹமத் பாஸோம், அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோரின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த எங்கள் அச்சங்களை தெரிவித்தோம்.
நாங்கள் புரிந்து கொண்ட வரையில் ரஷியாவின் ராணுவ மற்றும் கூலிப்படையாக செயல்படும் வாக்னர் அமைப்பின் உதவியை பெற்றால் அதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையாக இருக்கும் என புதிய ஆட்சியாளர்கள் நன்கு அறிந்துள்ளனர். எனவே அதை அவர்கள் கோரமாட்டார்கள்.
இவ்வாறு விக்டோரியா தெரிவித்தார்.
- நைஜரில் மொஹம்மத் பஸோம் அதிபராக பதவி வகித்து வந்தார்
- நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என்கிறது சியானி அரசாங்கம்
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர்.
அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக மொஹம்மத் பஸோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.
பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம் காட்டி, ஜூலை 26 அன்று ராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது. இதில் பஸோம் அதிபர் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
நாட்டின் பாதுகாப்பிற்கான தேசிய கவுன்சில் எனும் ஒரு ராணுவ அமைப்பின் தலைவர் அப்துரஹ்மானே சியானி என்பவர் புதிய அதிபராக பதவியேற்றார்.
ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு, மீண்டும் பஸோம் பதவியில் அமர்த்தப்பட வேண்டும் என சியானிக்கு நேற்று இரவு வரை கெடு விதித்திருந்தது. இதற்காக தேவைப்பட்டால் ராணுவ பலத்தை பிரயோகிப்போம் எனவும் எச்சரித்திருந்தது.
ஆனால், இந்த அச்சுறுத்தலை பொருட்படுத்தாத சியானி அரசாங்கம், நாட்டை பாதுகாத்து கொள்ள தங்களால் முடியும் என கூறியது.
இந்நிலையில் இந்த புதிய அரசாங்கம், அண்டை நாடுகளிடமிருந்து தாக்குதல் வரும் ஆபத்து உள்ளதாக கூறி, நைஜர் மீதான வான்வழி போக்குவரத்தை தேதி குறிப்பிடாமல் தடை செய்துள்ளது. இதனை மீறும் விதமாக போக்குவரத்து மேற்கொள்ளும் விமானங்களுக்கு உடனடியாக பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
தற்போது அந்நாட்டின் வான்பரப்பில் எந்த விமான போக்குவரத்தும் நடைபெறவில்லை. அந்நாட்டை நோக்கி சென்ற விமானங்கள் இந்த தடையுத்தரவை அடுத்து வேறு வான்வழி பாதையில் மாற்றப்பட்டன.
அண்டை நாடுகளான மாலி மற்றும் பர்கினா ஃபாஸோ புதிய நைஜர் அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. தேவைப்பட்டால், ரஷியாவிடம் ராணுவ உதவியை நைஜர் கோரலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
- ராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே டிசியானி தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றினார்.
- தேர்தலுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதாக உறுதி அளித்துள்ளார்.
நியாமி:
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ராணுவ ஜெனரல் அப்துல்ரஹ்மானே டிசியானி தேசிய தொலைக்காட்சியில் உரையாற்றியபோது கூறியதாவது:-
நைஜர் மக்கள் மீது சொல்ல முடியாத துன்பங்களை ஏற்படுத்தவும், நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் விரும்பும் அனைவரையும் தோற்கடிக்க ஒட்டுமொத்த மக்களையும் ஒற்றுமைக்காக நாங்கள் அழைக்கிறோம். எங்களது உள்நாட்டு விவகாரத்தில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகங்கள் தலையிட வேண்டாம். தேர்தலுக்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவ புரட்சியை அடுத்து நைஜருக்கு மின் வினியோகத்தை அண்டை நாடான நைஜீரியா நிறுத்தியுள்ளது.
- ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவாக உள்ளவர்கள், ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தை நோக்கி கும்பலாக சென்றனர்.
- கும்பல் தீ வைத்ததில் ஆளுங்கட்சி அலுவலகம் கொழுந்துவிட்டு எரிந்தது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு அதிபர் முகமது பாசும் தலைமையிலான அரசை கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்களை துப்பாக்கி சூடு நடத்தி ராணுவம் விரட்டியடித்தது.
இந்த நிலையில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆதரவாக உள்ளவர்கள், ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தை நோக்கி கும்பலாக சென்றனர். அவர்களை பார்த்ததும் கட்சி அலுவலகத்தில் இருந்து தொண்டர்கள் அங்கிருந்து ஓடினர். பின்னர் அக்கும்பல் ஆளுங்கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்தது. இதையடுத்து அந்த கும்பலை கலைக்க போலீசார் புகை குண்டுகளை வீசினர். அந்த கும்பல் தீ வைத்ததில் ஆளுங்கட்சி அலுவலகம் கொழுந்துவிட்டு எரிந்தது. அங்கிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
- நைஜரில் ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றினர்.
- நைஜரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
நியாமி:
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் திடீரென ராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றி, அதிபர் முகமது பாசுமை சிறைபிடித்தனர்.
நைஜர் அதிபர் முகமது பாசும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டார் என மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் புதன்கிழமை பிற்பகுதியில் தோன்றிய வீரர்கள் குழு கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நைஜரில் உள்ள அனைத்து நிறுவனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன என ராணுவ வீரர்கள் தேசிய தொலைக்காட்சியில் அறிவித்துள்ளனர்.
அதிபருக்கு ஆதரவாக தலைநகர் நியாமியில் திரளான மக்கள் வீதிகளில் இறங்கினர். ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்த வீரர்கள் எதிர்ப்பை சமாளிக்க துப்பாக்கிச் சூடு நடத்தினர்.ஆனாலும் நகரம் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தது.
ஆப்பிரிக்க ஒன்றியம், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.