என் மலர்
உலகம்
தாய்லாந்து இசை திருவிழாவில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி-50 பேர் காயம்
- குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு இரு குழுக்களிடையே சண்டை.
- வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டவைகள் என்பது தெரிய வந்துள்ளது.
மணிலா:
தாய்லாந்தின் வடக்கு தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில் நள்ளிரவில் இசை திருவிழா நடந்தது.
இதில் சுமார் 9 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திடீரென்று குண்டு வெடித்தது. இதனால் திருவிழாவில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியானார்கள். 50 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்த பகுதி மியான்மர் எல்லைக்கு அருகே உள்ளது. அங்கு கிளர்ச்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே கே.என்.யூ என்ற கிளர்ச்சிக் குழுவினர் தங்களது எதிரிகும்பலுடன்' மோதலில் ஈடுபட்டதாகவும், அப்போது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை அந்த கிளர்ச்சி குழு மறுத்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சரின் செய்தித்தொடர்பாளர் தனதிப் சவாங்சாங் கூறும்போது, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு இரு குழுக்களிடையே சண்டை நடந்துள்ளது.
அந்த வெடிகுண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டவைகள் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று உள்ளூர் போலீசார் தெரிவித்தனர் என்றார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.