என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லிபியா
- அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் 12 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கெய்ரோ:
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்தப் பயணத்தின்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், எகிப்தை சேர்ந்த 13 பேர் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக படகில் மத்திய தரைக்கடல் வழியாக நேற்று ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.
லிபியா அருகே 60 கிலோமீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படகில் பயணித்த 12 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த லிபியா கடற்படையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு நபரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்த 12 அகதிகளின் உடல்களை மீட்டனர். இதுதொடர்பாக லிபியா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- பாதுகாப்பு பிரச்சனையால் லிபியாவில் செயல்பட்டு வந்த தூதரகத்தை இந்திய அரசு மூடியது.
- மூடப்பட்ட இந்திய தூதரகம் 5 ஆண்டுக்குப் பிறகு திரிபோலியில் மீண்டும் திறக்கப்பட்டது.
திரிபோலி:
லிபியா நாட்டில் கிளர்ச்சியாளர்களின் போராட்டம், ராணுவத்தின் அடக்குமுறை தாக்குதல் என போர்க்களமாக காட்சி அளித்தது. அங்கு சிக்கித் தவித்த 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பாதுகாப்பு பிரச்சனை காரணமாக லிபியாவில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகத்தை கடந்த 2019-ம் ஆண்டில் இந்திய அரசு மூடியது.
இந்நிலையில், லிபியா தலைநகர் திரிபோலியில் மூடப்பட்ட இந்திய தூதரகம் 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
லிபியா குடிமக்களுக்கு விசா வழங்குதல் மற்றும் இந்திய வெளிநாட்டினருக்கான வேலை நிலைமைகளை சரிபார்த்தல் உள்ளிட்டவை இந்த தூதரகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகிவிட்டனர்.
- அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.
டொர்னா:
லிபியா நாட்டில் சமீபத்தில் புயல் , மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெர்னாவில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த 2 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி 11 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் இந்த 2 அணைகள் உடைந்தது தொடர்பாக நீர் வளத்துறையை சேர்ந்த 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 7 பேர் முன்னாள் அதிகாரிகள். ஒருவர் தற்போது பணியாற்றி வருகிறார். இவர்களின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்ததாக கூறி 8 பேரும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு சட்ட மந்திரி தெரிவித்துள்ளார்.
- டேனியல் புயல் காரணமாக அணை உடைந்து வெள்ளம் நகருக்குள் புகுந்தது
- 2015ல் சவுதி அரேபியாவில் திஹாமா கஹ்டான் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது
வட ஆப்பிரிக்காவில் மத்திய தரைகடல் பகுதியில் உள்ள நாடு லிபியா. இந்நாட்டில் செப்டம்பர் 10 அன்று டேனியல் எனும் புயல் தாக்கியதில் அங்குள்ள முக்கிய அணைகள் உடைந்தது. இதன் காரணமாக அந்நாட்டில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் விளைவாக பெரும் உயிர்சேதம் ஏற்பட்டது. பலியானவர்களின் எண்ணிக்கை இதுவரை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அதில் லிபியாவின் வெள்ளப்பெருக்கு குறித்தும் உயிர்சேதம் குறித்தும் ஒரு குறுஞ்செய்தியும் உடன் பதிவிடப்பட்டிருந்தது.
ஆய்வில், இந்த வீடியோ தவறானது என தெரிய வந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ, 2015ல் சவுதி அரேபியாவில் திஹாமா கஹ்டான் பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கின் போது எடுக்கப்பட்டது. இதனை லிபியா வெள்ள சேதத்துடன் இணைத்து செய்தியை திரித்து வெளியிட்டுள்ளனர்.
இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
- லிபியா வெள்ளத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்
- தற்போது 3,958 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது
வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பழமையான இரண்டு அணைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் பலி எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன்பின் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை திருத்தி ஐ.நா. வெளியிட்டுள்ளது. ஐ.நா.வுக்கான மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி, "3,958 பேர் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக 11,300 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது திருத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் 9 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஃபர்ஹான் ஹக், "உலக சுகாதார அமைப்புடன் இணைந்து சரியான எண்ணிக்கை வெளிப்படுத்த இருக்கிறோம்'' என்றார்.
ஆனால், லிபியாவின் செஞ்சிலுவை சங்கம், வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் அதிகப்படியான உயிர்ப்பலி எண்ணிக்கையை ஐ.நா.வுக்கு வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மிகவும் பாதிப்புக்கு உள்ளான டெர்னாவில் 1,20,000 மக்கள் வசித்து வருகின்றனர். ஒட்டுமொத்த நகரமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். அல்லது சேற்றில் சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியானது.
ரஷியா நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட உதவிகளை செய்துள்ளது. இத்தாலி கப்பற்படைக்கு சொந்தமான கப்பலை அனுப்பியுள்ளது. அதில் தற்காலிக கூடாரம் அமைப்பதற்கான பொருட்கள், தண்ணீர் குழாய், டிராக்டர் போன்றவற்றை அனுப்பி வைத்துள்ளது.
- டேனியல் புயலால் லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
- வெள்ளத்தில் சிக்கிய ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என அதிகாரிகள் கூறினர்.
திரிபோலி:
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது. இதனால் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
கனமழையில் மற்றும் நீர் தேங்கியதில் 2 அணைகள் திடீரென வெடித்தன. இதில் சிக்கி மக்களில் பலர் உயிரிழந்தனர். பல்வேறு பாலங்களும் சேதமடைந்து விட்டன. அணை உடைந்ததில் நீர் ஊருக்குள் புகுந்தன. இதில், பல கிராமங்களுக்குள் நீர் சூழ்ந்துள்ளது. டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், லிபியா வெள்ளத்தில் சிக்கி 18,000 முதல் 20,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை டெர்னா நகர மேயர் வெளியிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
- புயல் காரணமாக பெய்த கனமழையால் அணைகள் நிரம்பி உடைந்ததால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது.
- கடும் வேகத்தில் வந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகரித்தது.
திரிபோலி:
லிபியா நாட்டை 'டேனியல்' சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. மத்திய தரை கடலில் உருவான அந்த புயல், லிபியாவின் கிழக்கு பகுதியை பந்தாடியது. புயல் காரணமாக கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பின.
டெர்னா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உள்பட இரண்டு அணைகள் உடைந்தன. இதனால் டெர்னா நகரங்களுக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது. இதில் வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். பெரும்பாலானோர் வெள்ளத்துடன் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டனர். அதேபோல் சூசா, பாய்தா, மார்ஜ் உள்பட பல நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருப்பது தெரிய வந்தது.
லிபியாவின் கிழக்கு பகுதியை நிர்வகித்து வரும் அரசு தரப்பில் நேற்று கூறும்போது, 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாகவும், 6 ஆயிரம் பேரை காணவில்லை என்றும் தெரிவித்து இருந்தது. அப்பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கனமழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது. இதுவரை 10 ஆயிரம் பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிழக்கு லிபியா உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமது அபு கூறும்போது, "டெர்னாவில் மட்டும் பலி எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது" என்றார்.
டெர்னா நகரம் பேரழிவை சந்தித்து உள்ளது. அங்கு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. வீடுகள் அனைத்தும் உருக்குலைந்து போய் உள்ளது.
புயல் காரணமாக பெய்த கனமழையால் அணைகள் நிரம்பி உடைந்ததால் வெள்ளம் ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தை எதிர்பார்க்காத மக்கள் சுதாரிப்பதற்குள் அதில் சிக்கி கொண்டனர்.
கடும் வேகத்தில் வந்த வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதால் பலி எண்ணிக்கை அதிகரித்தது.
- அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- டெர்னா நகரில் 2 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கானோரை காணவில்லை
திரிபோலி:
வட ஆப்பிரிக்க நாடான லிபியா, மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் மத்திய தரைக்கடலில் உருவான 'டேனியல்' என்று பெயரிடப் பட்ட சூறாவளி புயல், லிபியாவில் கிழக்கு பகுதியை கடுமையாக தாக்கியது.
அங்குள்ள கடற்கரை நகரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஊருக்குள் வெள்ளம் புகுந்து ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. வீடு, வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. டெர்னா, சூசா, பாய்தா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட நகரங்களில் புயலின் தாக்கம் கடுமையாக உள்ளது. குறிப்பாக டெர்னா நகரில் பெரும் இழப்பு ஏற்பட் டுள்ளது. அந்த நகரம் பேரழிவு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லிபியா கிழக்கு பகுதியில் புயல், கனமழை, வெள்ளத்தில் சிக்கி 2 ஆயிரம் பேர் பலியாகி உள்ளதாக பிரதமர் ஒசாமா ஹமாட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "டெர்னா நகரில் 2 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது. ஆயிரக்கணக்கானோரை காணவில்லை" என்றார்.
மேலும் ஆயுதப்படைகளின் செய்தித்தொடர்பாளர் அஷ்மத் அல்-மோஸ்மரி கூறும்போது, "5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை காணாமல் போய் உள்ளனர்" என்று கூறினார்.
கனமழை காரணமாக இரண்டு அணைகள் நிரம்பி இடிந்து விழுந்துள்ளது. இதனால் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் ஏராளமான வீடுகள் தண்ணீரில் மூழ்கின. பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதனால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
பல கடலோர நகரங்களில் பெரும் பகுதிகள் அழிந்துள்ளன. இந்த பேரழிவு காரணமாக 3 நாட்கள் துக்கம் அனுசரித்து நாடு முழுவதும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
உள்நாட்டு போர் நடந்து வரும் லிபியாவில் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும், மேற்கு பகுதியை வெளிநாட்டு ஆதரவு பெற்ற அரசும் நிர்வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
- லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
- நீதி மந்திரி தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
லிபியா நாட்டின் வெளியுறவுத் துறையின் பெண் மந்திரியாக இருப்பவர் நஜ்லா அல்-மங்குஷ். இவர் சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை மந்திரி கோஹனை சந்தித்து பேசினார். இது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். இதில் லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
இதற்கு லிபியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண் மந்திரி நஜ்லாவை சஸ்பெண்டு செய்து பிரதமர் அப்துல் ஹமித உத்தரவிட்டுள்ளார். நீதி மந்திரி தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான லிபிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ரோமில் நடந்தது ஒரு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக லிபியாவின் நிலைப்பாட்டை மந்திரி மீண்டும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பை ஒரு பேச்சுவார்த்தைக்காக முன்வைக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று கூறியுள்ளது.
- லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
- இந்த மோதலில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.
டிரிபோலி:
வட ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இங்கு உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு படைகளுக்கும் கலிபா ஹப்டர் தலைமையிலான கிளர்ச்சி படையினருக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஹைதம் தஜோரியின் திரிபோலி விடுதலை பிரிவு கிளர்ச்சியாளர்களுக்கும் அப்தில் கானி அல் கில்கி தலைமையிலான கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே தலைநகர் திரிபோலியில் நேற்று திடீரென மோதல் வெடித்தது. இந்த மோதலின் போது துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பல்வேறு கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், லிபியாவில் நடந்து வரும் மோதலில் பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 159 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
- அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் லிபியா பாராளுமன்றத்தை சூறையாடினர்.
- பாராளுமன்ற தீ வைப்பு சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
டாப்ரக்:
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அதிபர் கடாஃபியின் மறைவுக்குப் பிறகு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, டாப்ரக் நகரில் உள்ள லிபிய பாராளுமன்றத்தைச் சூறையாடிய மக்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், லிபிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்