என் மலர்
உலகம்
Video : ஜமைக்காவில் கொள்ளை கும்பல் துப்பாக்கிச்சூடு- நெல்லை வாலிபர் உயிரிழப்பு
- விக்னேசின் உடல் சொந்த ஊருக்கு வர 1 வாரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
- கொள்ளையர்கள் அங்கிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர்.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் விக்னேஷ் (வயது 31). பட்டதாரியான இவர் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்தார்.
நேற்று அதிகாலையில் அந்த சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை கும்பல் புகுந்த நடத்திய தாக்குதலில் விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் செல்போனில் விக்னேஷ் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விக்னேஷ் உடலை பத்திரமாக நெல்லைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் வந்து கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.
மேலும் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் ராமகிருஷ்ணன், கவுன்சிலர் சுதா மூர்த்தி உள்ளிட்டோரும் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டில் அவரது உடலை நெல்லைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விக்னேசின் உடல் சொந்த ஊருக்கு வர 1 வாரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே ஜமைக்கா சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து கொள்ளை கும்பலை போலீசார் தேடி வரும் நிலையில், அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. அந்த காட்சியில், சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பெண்மணி பொருட்கள் வாங்கி கொண்டு இருக்கிறார். அப்போது அங்கு திடீரென 3 பேர் கும்பல் துப்பாக்கியுடன் புகுந்துள்ளது.
முகமூடி அணிந்தபடி வந்த அந்த கும்பலை பார்த்ததும், கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த விக்னேஷ் உள்ளிட்ட 3 பேரும், அந்த பெண்மணியும் தரையில் குனிந்தபடி நிற்கின்றனர். உடனே கொள்ளையர்கள் அங்கிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயன்றனர்.
அப்போது கடை ஊழியர்களில் ஒருவரை காலிலும், மற்றொருவரை இடுப்பிலும் சுடுகின்றனர். விக்னேசையும் அந்த கும்பல் சுட்டுவிட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. தற்போது அந்த கொள்ளை கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டின் அதிர்ச்சியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
A teenager from #Tirunelveli was killed and two others were injured in a shooting at a supermarket in #Jamaica. ! Vignesh, a youth from Meenakshipuram, Tirunelveli Junction in #TamilNadu, was shot dead in #Jamaica. CCTV footage of the shooting at the supermarket where he worked… pic.twitter.com/vgWzvPUT2Z
— Saravanan (@Saranjournalist) December 19, 2024