search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    புருனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
    X

    புருனே மன்னருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

    • பிரதமர் மோடியை மன்னரும், அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர்.
    • பிரதமர் மோடி இன்று புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பந்தர் செரி பெகவான்:

    பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான புருனே நாட்டுக்கு நேற்று சென்றார். இதன்மூலம் புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

    இரு நாடுகள் இடையே தூதரக உறவு தொடங்கப் பட்டு 40-வது ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி இப்பயணத்தை மேற்கொண்டார்.

    தலைநகர் பண்டார் செரி பெகவானில் பிரதமர் மோடியை பட்டத்து இளவரசரும், மூத்த அமைச்சருமான ஹாஜி அல்-முஹ்தாதி பில்லா வரவேற்றார். புருனேவில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியர்கள், பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர். புருனேயில் உள்ள புகழ்பெற்ற ஒமர் அலி சைபுடியன் மசூதிக்கு மோடி சென்றார்.

    பிரதமர் மோடி இன்று புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியா-பிரதமர் மோடி சந்திப்பு உலகின் மிகப்பெரிய அரண்மனையான இஸ்தானா நூருல் இமான் அரண்மனையில் நடந்தது. மோடியை மன்னரும், அவரது குடும்பத்தினரும் வரவேற்றனர்.

    இரு தலைவர்களும் பாதுகாப்பு, விண்வெளி தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இதில் மோடி பேசும்போது, உங்கள்(மன்னர்) அன்பான வார்த்தைகள், அன்பான வரவேற்பு, விருந்தோம்பல் ஆகியவற்றிற்காக உங்களுக்கும் முழு அரச குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 140 கோடி இந்தியர்கள் சார்பாக 40-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்களுக்கும் புருனே மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நமக்கு பல நூற்றாண்டுகள் பழமையான கலாச்சார உறவுகள் உள்ளன. நமது நட்பின் அடிப்படையே நமது பண்பாட்டு பாரம்பரியம்தான். உங்கள் தலைமையின் கீழ் நமது உறவுகள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன.

    எனது 3-வது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் உங்களுடன் எதிர்காலத்தைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு நமது இருதரப்பு கூட்டுறவின் 40-வது ஆண்டு விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியான நிகழ்வு.

    இந்தியாவின் கிழக்கு கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் விஷன் ஆகியவற்றில் புருனே ஒரு முக்கிய பங்காளியாக இருப்பது எங்களுக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதமாகும் என்றார்.

    பின்னர் பிரதமர் மோடிக்கு மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியா மதிய விருந்து அளித்தார். இதில் வித விதமான உணவுகள் பரிமாறப்பட்டது.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, புருனே மன்னர் ஹாஜி ஹசனல் போல்கியாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களது பேச்சுவார்த்தை பரந்த அளவில் இருந்தன. நமது நாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை உள்ளடக்கியது.

    வர்த்தக உறவுகள், வர்த்தக இணைப்புகள் மற்றும் மக்களிடையே பரிமாற்றம் ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்தப் போகிறோம் என்று தெரிவித்தார்.

    பிரதமர் மோடியும் புருனே மன்னரும் முதன்முறையாக 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் மியான்மரில் நடந்த 25-வது ஆசியான் உச்சி மாநாட்டிலும், 2017-ம் ஆண்டு மணிலாவில் நடந்த கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும் சந்தித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதமர் மோடி தனது புருனே பயணத்தை முடித்துக்கொண்டு சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அங்கு இந்தியர்களை சந்தித்து பேசுகிறார். பின்னர் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதிக்கிறார்கள். இந்த சந்திப்பின்போது மோடிக்கு லாரன்ஸ் வோங் விருந்து அளிக்கிறார்.

    Next Story
    ×