என் மலர்
உலகம்

பாட் ரைடர், மரியா ஜாகரோவா
உக்ரைனுக்கு அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கும் அமெரிக்கா- ரஷியா எச்சரிக்கை
- உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம், அமெரிக்கா போரில் பங்கேற்றுள்ளதாக புகார்.
- உக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுத உதவி, ரஷிய படையை இலக்காக கொண்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷிய தொடுத்துள்ள போர் 10வது மாதமாக நடந்து வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா அதி நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதாக ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலமும், அதன் வீரர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமும் அமெரிக்கா இந்த போரில் பங்கேற்றுள்ளதாக கூறினார்.
நிலத்திலிருந்து இலக்கை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் பேட்ரியாட் தடுப்பு ஏவுகணை போன்ற பாதுகாப்பு அமைப்புகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் நோக்கங்கள் பற்றிய அறிக்கை உண்மை என நிரூபிக்கப்பட்டால், அது ரஷியாவிற்கு எதிரான மற்றொரு ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக மாறும் என்று கூறினார்.
உக்ரைனுக்கு வழங்கப்பட்ட எந்த ஆயுத உதவியும், ரஷிய படைகளையே இலக்காக கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் ரஷியாவின் எச்சரிக்கைய நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜெனரல் பாட் ரைடர், உக்ரைனுக்கு நாங்கள் வழங்கும் பாதுகாப்பு உதவி குறித்து ரஷியாவின் கருத்துக்களை ஏற்று கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.