search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    17 மணி நேர பயணம்... பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
    X

    17 மணி நேர பயணம்... பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்

    • போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
    • 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்கவுள்ளார்.

    வாஷிங்டன்:

    விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்காவின் புதிய அரசு முயற்சி செய்தது.

    இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் ரஷிய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் இருந்தனர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து, க்ரு டிராகன் விண்கலத்துக்கு சென்றனர். அவர்களுடன் இங்கிருந்த சென்ற விண்வெளி வீரர்களும் பயணிக்கிறார்கள்.

    இது தொடர்பாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், வானிலை சீராக இருந்தால் க்ரு டிராகன் விண்கலம் புளோரிடா கடல் பகுதியை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த டிராகன் விண்கலம், புளோரிட கடற்பரப்பை நோக்கி நெருங்கியது.

    தரையிறங்கும் டிராகன் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை மீட்க தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் குழு வந்துள்ளனர்.

    17 மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடாவில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் தரையிறங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பினார்.

    Next Story
    ×