என் மலர்
உலகம்
நவாஸ் ஷெரீப் 21-ந்தேதி பாகிஸ்தான் திரும்புகிறார்
- இந்த ஆண்டு தொடக்கத்தில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.
- 4 ஆண்டுகளுக்கு பிறகு நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீப்புக்கு, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல கோர்ட்டு ஜாமின் வழங்கியது. இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்ற நவாஸ் ஷெரீப், அங்கு சிகிச்சை பெற்றார். ஜாமின் காலம் முடிந்தபிறகும் அவர் பாகிஸ்தான் திரும்பவில்லை. 2019-ம் ஆண்டு முதல் லண்டனிலேயே தங்கி விட்டார்.
இதற்கிடையே இந்த ஆண்டு தொடக்கத்தில் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் ஆனார்.
இதையடுத்து நவாஸ் ஷெரீப் லண்டனில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் நவாஸ் ஷெரீப் விரைவில் நாடு திரும்புவார் என்று தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் நவாஸ் ஷெரீப், லண்டனில் இருந்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் உம்ரா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
அதன்பின் துபாய்க்கு சென்று அங்கு 2 நாட்கள் தங்குகிறார். அங்கிருந்து வருகிற 21-ந்தேதி பாகிஸ்தானுக்கு புறப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, "நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார்" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் 4 ஆண்டுகளுக்கு பிறகு நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்ப உள்ளார்.