என் மலர்
உலகம்

இந்தோனேஷியாவில் பலத்த மழை- நிலச்சரிவில் சிக்கி இதுவரை 11 பேர் பலி
- பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
- இந்தோனேஷியாவை போல பக்கத்து நாடான மலேசியாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.
இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் அங்குள்ள நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. தொடர் மழையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.
தொடர் மழை காரணமாக இந்தோனேஷியாவில் உள்ள பல தீவுகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதில் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமானது. ரியாசு தீவில் நிலச்சரிவில் வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்ததால் அதில் சிக்கி பெண்கள் உள்பட 11 பேர் இறந்து விட்டனர்.
50க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்களது கதி என்னவென்று தெரியவில்லை. பலர் மண்ணுக்குள் புதைந்து இருக்கலாம் என தெரிகிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் அங்கு முடுக்கிவிடப்பட்டு உள்ளன.
பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. ஏராளமான பொதுமக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தோனேஷியாவை போல பக்கத்து நாடான மலேசியாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. ரோடுகளில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுவதால் பொது மக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மலேசியாவில் நேற்று மழைக்கு 4 பேர் பலியாகிவிட்டனர்.