என் மலர்
உலகம்

விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது அசந்து தூங்கிய விமானிகள்

- விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை தரை இறக்குவதற்கான தகவல் விமானிகளுக்கு அனுப்பப்பட்டது.
- அந்த அழைப்பை விமானிகள் இருவரும் எடுத்து பேசவில்லை. பல முறை அழைத்தபோதும், அந்த அழைப்புக்கு விமானிகளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
அடிஸ்அபாபா:
சூடானில் இருந்து எத்தியோப்பியா நாட்டின் அடிஸ் அபாபா சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த 15-ந் தேதி போயிங் விமானம் ஒன்று புறப்பட்டது.
விமானத்தை இயக்கும் பணியில் 2 பைலட்டுகள் இருந்தனர். அபாபா சர்வதேச விமான நிலையத்தை விமானம் நெருங்கும் போது விமானம் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்தை தரை இறக்குவதற்கான தகவல் விமானிகளுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அந்த அழைப்பை விமானிகள் இருவரும் எடுத்து பேசவில்லை. பல முறை அழைத்தபோதும், அந்த அழைப்புக்கு விமானிகளிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.
அதன்பின்பு தான் விமானிகள் இருவரும், விமானத்தை தானியங்கி கருவிகளுடன் இயக்கிவிட்டு, விமானிகள் அறையில் அசந்து தூங்கி கொண்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானத்தை பத்திரமாக தரை இறக்க ஏற்பாடு செய்தனர். அதன்படி விமானம் எச்சரிக்கை மணி அடித்தபடி ஓடுபாதையை நெருங்கிய போது, அலாரத்தின் தொடர் சத்தத்தால் விமானிகள் விழித்து கொண்டனர்.
அதன்பிறகு அவர்கள் பத்திரமாக விமானத்தை தரை இறக்கினர். சுமார் 25 நிமிட தாமதத்திற்கு பிறகு விமானம் தரை இறங்கியது. விமானம் வானத்தில் பறந்தபோது விமானிகள் அசந்து தூங்கிய விவகாரம் குறித்து அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.