என் மலர்
உலகம்
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டலால் இந்து கோவில் தூதரக நிகழ்ச்சி ரத்து
- இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து.
- வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து நடவடிக்கை
கனடாவில் காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோவில் முன்பு போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவிலுக்குள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய தூதரகம் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தது.
இந்த நிலையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டலால் பிராம்ப்டனில் உள்ள திரிவேணி கோவிலில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 17-ந்தேதி இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து சமூக உறுப்பினர்களிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கனடாவில் உள்ள இந்துக் கோவில்களுக்கு வருவதை கனேடியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வது மிகவும் வருத்தமளிக்கிறது.
திரிவேணி கோவிலுக்கு எதிராக பரப்பப்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யவும், கனேடிய இந்து சமூகம் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் போலீசாரை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள இந்து கோவில்களில், வருகிற 16,17-ந்தேதிகளில் இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் அமைப்பு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக, கனடா எம்.பி., சந்தன் ஆர்யா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.