search icon
என் மலர்tooltip icon

    தாய்லாந்து

    • அரிசி மானிய வழக்கில் சிறை தண்டனை பெற்றார் சின்வத்ரா
    • மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் சின்வத்ராவின் தண்டனையை 1 ஆண்டாக குறைத்தார்

    தென்கிழக்கு ஆசியாவில், இந்தோசீன தீபகற்பத்தில் உள்ள நாடு, தாய்லாந்து. இதன் தலைநகரம், பாங்காக் (Bangkok).

    தாய்லாந்தில், 2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்த தக்சின் சினவத்ரா (Thaksin Shinawatra) மீது அரிசி மானிய திட்டத்தில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் தக்சினுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க, தக்சின், 2008ல் தாய்லாந்தை விட்டு வெளியேறி, 15 ஆண்டுகள் அயல்நாடுகளில் தங்கி இருந்தார்.

    கடந்த 2023ல் மீண்டும் நாடு திரும்பினார்.

    தாயகம் திரும்பிய தக்சினுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், தக்சின் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் சிறையிலிருந்து 6 மாதங்கள் மருத்துவமனையிலேயே காவலில் வைக்கப்பட்டிருந்தார்.


    தக்சினின் உடல்நல குறைபாடு காரணமாக அவருக்கு விதிக்கப்பட்ட 8-ஆண்டுகால சிறை தண்டனையை, தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் (Maha Vajiralongkorn), 1 ஆண்டாக குறைத்தார்.

    இதனை தொடர்ந்து தக்சின் சினவத்ராவுக்கு சிறப்பு பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது.

    இதையடுத்து, தற்போது 76 வயதாகும் தக்சின் இன்று பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.

    பாங்காக் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த தக்சின் தனது காரில் புறப்பட்டு சென்றார். தக்சினை அவரது மகள் பெடோங்டார்ன் சினவத்ரா (Paetongtarn Shinawatra) வரவேற்று தங்கள் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.


    தக்சின், 2 முறை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார்.

    தாய்லாந்தில் நடைபெறும் பிரதமர் சிரெத்தா தவிசின் (Srettha Thavisin) தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு, தக்சின் குடும்பத்தார் பின்புலமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியவரின் மூக்கிலும், வாயிலும் இருந்தும் ரத்தம் அதிகமாக வெளியேறியது
    • சிபிஆர் முறையில் சுவாச மீட்புக்கு மருத்துவரும் பணியாளர்களும் முயன்றனர்

    கடந்த வியாழன் அன்று, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து ஜெர்மனியின் மியூனிச் (Munich) நகருக்கு புறப்பட்டு சென்ற ஒரு லுஃப்தான்சா (Lufthansa) விமானத்தில் 63 வயதான ஒரு பயணி, தன் மனைவியுடன் பயணித்தார்.

    அந்த முதியவர் விமானத்தில் ஏறும் போதே வேகவேகமாக சுவாசித்து கொண்டு, வியர்வை குளியலில் உள்ளே நுழைந்தார்.

    சிறிது நேரத்தில் விமானம் புறப்பட்டது.

    அப்போது அந்த முதியவரின் மூக்கில் இருந்தும் வாயில் இருந்தும் திடீரென லிட்டர் கணக்கில் ரத்தம் வழிய தொடங்கியது.

    அவரது மனைவி உதவி கேட்டு கூக்குரலிட்டார். அதிகமாக ரத்தம் கொட்டுவதை கண்ட சக பயணிகளும் கூச்சலிட்டதில் உடனிருந்த சில பயணிகள் அவருக்கு உதவ முன் வந்தனர். ஒரு சிலர், அவரது நாடி துடிப்பை பரிசோதித்தனர். 

    ரத்தம் வெளியேறுவது நிற்காமல், அந்த ஜெட் விமானத்தில் அந்த பயணியின் இருக்கைக்கு அருகே உள்ள உட்புற சுவர்களில் ரத்தம் பீய்ச்சி அடித்தது.

    அதை தொடர்ந்து அவர் மயக்க நிலைக்கு சென்றார்.

    சுமார் அரை மணி நேரம், விமான பணியாளர்களும், அங்கு இருந்த மருத்துவர் ஒருவரும், அவருக்கு "இதய-நுரையீரல் புத்துயிர் சிகிச்சை" (CPR) வழிமுறையை கையாண்டு சுவாச மீட்புக்கு முயற்சித்தனர்.

    ஆனால், சிகிச்சை முறைகள் பலனளிக்காமல், அந்த முதியவர் உயிரிழந்தார்.

    விமான கேப்டன் அவர் உயிரிழந்ததை அறிவித்ததும், விமானத்தில் சோகமான அமைதி நிலவியது.

    இதையடுத்து விமானம், தாய்லாந்திற்கு திருப்பப்பட்டது.

    அந்த முதியவரின் மனைவி, பெரும் சோகத்திற்கு இடையே அனைத்து விதமான சட்டபூர்வ வழிமுறைகளையும், தனியொருவராக கையாண்டது பார்ப்பவரின் மனதை நெகிழ செய்தது.

    இது குறித்து லுஃப்தான்சா விமான நிறுவனம், "அனைத்துவிதமான உதவிகளும் வழங்கப்பட்டும் அந்த முதியவர் உயிரிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. அவரது உறவினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். எதிர்பாராதவிதமாக சக பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்" என அறிவித்தது.

    • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடந்தது.
    • இதில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.

    பாங்காக்:

    தாய்லாந்து மாஸ்டர்ஸ் சூப்பர் 300 பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.

    இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, தாய்லாந்து வீராங்கனை சுபநிடா கேட்தாங்குடன் மோதினார்.

    இதில் அஷ்மிதா சாலிஹா 13-21, 12-21 என்ற செட் கணக்கில் சுபநிடா கேட்தாங்கிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    • பில்டிங், ஆன்டெனா, ஸ்பான், எர்த் ஆகியவற்றின் சுருக்கமே பேஸ் எனப்படும்
    • அதிக பயனர்கள் ரசிப்பதன் மூலம் ஒரு சிலர் வருவாய் ஈட்டுகின்றனர்

    வீரசாகச விளையாட்டுக்களில், நிலையாக நிற்கும் உயரமான பொருட்கள் அல்லது கட்டிடங்களில் இருந்து பாராசூட் உதவியுடன் கீழே குதித்து சாதனை செய்வது, "பேஸ் ஜம்பிங்" (BASE jumping) எனப்படும்.

    பில்டிங், ஆன்டெனா, ஸ்பான் (பாலங்கள்), எர்த் (மலைகள்) ஆகியவற்றின் சுருக்கமே "பேஸ்" எனப்படும்.

    சமூக வலைதளங்களின் வளர்ச்சியால், பேஸ் ஜம்பிங்க் விளையாட்டில் உயிரை பணயம் வைத்து ஈடுபடுவதும், அந்த வீடியோ காட்சிகளை தங்களின் சமூக வலைதள கணக்கில் வெளியிட்டு பயனர்களின் பாராட்டுகளை அதிக அளவில் பெறுவதும் அதிகரித்து வருகிறது.

    இது ஒரு சிலருக்கு வருவாய் ஈட்டும் வழியாகவும் இருந்து வருகிறது.

    இந்நிலையில், தாய்லாந்தின் பட்டயா (Pattaya) கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் 29 தள அபார்ட்மென்டிலிருந்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 33-வயதான நபர் பேஸ் ஜம்பிங் விளையாட்டில் ஈடுபட்டார்.

    அந்த கட்டிடத்தின் மேல் மாடிக்கு தனது நண்பர்களுடனும், பாராசூட் மற்றும் பிற தேவையான உபகரணங்களுடனும் சென்றார். அவரது சாகசத்தை நண்பர்கள் படம் பிடிக்க உடன் சென்றனர்.

    அவர்கள் வீடியோ எடுக்க தொடங்கிய நிலையில், அந்த நபர் பாராசூட்டுடன் கீழே குதித்தார்.

    ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் கீழே குதித்து தரையை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அவரது பாராசூட் செயல்படவில்லை. இதனால், அவர் அங்கிருந்த ஒரு மரத்தில் விழுந்து, பின் அதிலிருந்தும் கீழே தரையில் விழுந்தார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவத்தை நேரில் கண்ட சிலர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.


    அங்கு திறக்காத நிலையில் ஒரு நீல நிற பாராசூட்டையும், அந்த நபரின் சடலத்தையும் கண்டனர்.

    முதற்கட்ட விசாரணையில், அந்த நபரின் பெயர் நேதி ஓடின்சன் என்பதும், அவரின் சமூக வலைதளங்களை ஆராய்ந்ததில் அவர் இது போன்ற பாராசூட் விளையாட்டுக்களில் அனுபவமிக்க நபர் என்பதும் தெரிய வந்துள்ளது.

    தாய்லாந்து காவல்துறையினர் மேற்கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 3 வருடங்களுக்கு முன் ஃபேஸ்புக் கணக்கில் கருத்து பதிவிட்டிருந்தார்
    • முதலில் திரகோட்டிற்கு 28 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது

    தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ளது, சியாங் ராய் (Chiang Rai) பிராந்தியம். அங்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் அரச குடும்பத்தை சேர்ந்தவருக்கும் ஆட்சியமைப்பில் பங்கு உண்டு.

    தற்போது மஹா வஜிரலாங்கோர்ன் (Maha Vajiralongkorn) அரசராக உள்ளார்.

    இப்பிராந்தியத்தில் ஆடைகள் விற்பனை தொழில் புரிந்து வந்தவர், மோங்கோல் திரகோட் (Mongkol Thirakot).

    திரகோட், 3 வருடங்களுக்கு முன் தனது ஃபேஸ்புக் கணக்கில், அந்நாட்டின் அரச பரம்பரை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார்.

    அரச குடும்பத்தை குறித்த அவதூறு பரப்புதல் "லெஸ் மெஜஸ்டெ" (lese majeste) எனும் குற்றமாக அந்நாட்டில் கருதப்பட்டு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    திரகோட் மீது இக்குற்றப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அங்கு அவருக்கு 28 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டது.

    இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தார், திரகோட்.

    மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், திரகோட்டிற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 28 வருட தண்டனையுடன், மேலும் 22 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டு, அவரது தண்டனை காலம் 50 வருடமாக அதிகரிக்கப்பட்டது.

    திரகோட்டின் விமர்சனம் குறித்த முழு விவரங்கள் தற்போது தெரியவில்லை. ஆனால், அவர் பதிவிட்டிருந்த ஓவ்வொரு விமர்சனத்திற்கும் தண்டனை அதிகரிக்கப்பட்டு, தற்போது 50 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

    கருத்து சுதந்திரத்திற்கு எதிராக கருதப்படும் "லெஸ் மெஜஸ்டெ" சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டாலும், அதை மாற்றவோ, நீக்கவோ முயன்றால் நாட்டின் அரசியலமைப்பு சிதைந்து விடும் என அந்நாட்டின் பழமைவாதிகள் அச்சுறுத்தி வருகின்றனர்.

    • தாய்லாந்தில் பட்டாசு ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் 23 தொழிலாளர்கள் தீயில் சிக்கி பலியாகினர்.

    பாங்காக்:

    சீன புத்தாண்டு அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளதால் தாய்லாந்து பட்டாசுகளுக்கு தேவை அதிகம் உள்ளது. இதனால் தாய்லாந்து பட்டாசு ஆலைகள் இறுதிக்கட்ட தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தாய்லாந்தின் சுபன் பூரி மாகாணத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசு ஆலை இடிந்து முற்றிலுமாக தரைமட்டமானது. அந்த இடமே கரும்புகையால் சூழப்பட்டது. அப்போது 30 ஊழியர்கள் வரை பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    தகவலறிந்து தேசிய பேரிடர் தடுப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் 23 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள் துண்டு துண்டுகளாக சிதறியதால் அடையாளம் காண்பதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 ஊழியர்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது என தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
    • தாய்லாந்தில் போதைப் பொருள் சட்டங்கள் கடந்த சில ஆண்டாக தாராளமயம் ஆக்கப்பட்டிருந்தது.

    பாங்காங்:

    தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப் பொருள் சட்டங்கள் கடந்த சில ஆண்டாக தாராளமயம் ஆக்கப்பட்டிருந்தது.

    கஞ்சா வைத்திருந்தால் அபராதமும், சிறைவாசமும் விதிக்கப்படலாம். தனிநபர்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மருத்துவத்துக்காக கஞ்சாவை பயன்படுத்துவதை சட்டப்படி அங்கீகரித்த முதல் ஆசிய நாடு தாய்லாந்துதான். இதற்கான அனுமதி கடந்த 2018ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

    இந்நிலையில், தாய்லாந்தின் புதிய அரசாங்கம் பொழுதுபோக்கு பயன்பாட்டிற்காக கஞ்சாவை தடை செய்ய அழுத்தம் கொடுக்கிறது; ஆனாலும், மருத்துவ நோக்கங்களுக்காக அதனைப் பயன்படுத்த அனுமதித்துள்ளது

    தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பட்டியலில் இருந்து தாய்லாந்து சில ஆண்டுக்கு முன் கஞ்சாவை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தகவல்.

    தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து பேருந்து ஒன்று 49 பேருடன் பிரச்சாவ் கிரி கான் மாகாணத்திற்கு சென்றுக் கொண்டிருந்தது.

    அப்போது ஹாட் வனாக்கார்ன் தேசிய பூங்கா அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் வேகமாக மோதியது.

    இதில், பேருந்தில் இருந்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், " பேருந்து ஓட்டுனர் தூங்கியதே விபத்துக்கான காரணம் என தெரிகிறது. விபத்தில் உயிர் பிழைத்த பேருந்து ஓட்டுனருக்கு ரத்த மாதிரி சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிகிறோம்.

    உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் தாய்லாந்து, பர்மா மற்றும் வீராபெட் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    • விடுவிக்கப்பட்ட செய்தி அரசுக்கு கிடைத்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெட்டா தவிசின் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
    • தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதற்கிடையே பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.

    இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது. இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்பந்தப்படி பிணைக்கைதிகளை விடுதலை செய்யப்பட்டுள்ளது.

    இதில், முதற்கட்டமாக தாய்லாந்தை சேர்ந்த 12 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 

    இதனை, காசாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 12 பேர் விடுவிக்கப்பட்ட செய்தி அரசுக்கு கிடைத்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெட்டா தவிசின் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

    தொடர்ந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 13 பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதற்கட்டமாக மொத்தம் 25 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, இஸ்ரேல் வசம் உள்ள 7 ஆயிரம் கைதிகளில் 39 பேரை இன்று இரவு விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களில் 150 கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளது.

    தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    அடுத்த 3 நாட்களில் மேலும் 37 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 5 கோடி பயனர்களுக்கு வங்கி கணக்கில் 10 ஆயிரம் பஹ்ட் செலுத்தப்படும்
    • பல பில்லியன் டாலர்கள் செலவாகும் என்பதால் பொருளாதார நிபுணர்கள் எதிர்த்தனர்

    தாய்லாந்து நாட்டின் கரன்சி பஹ்ட் (baht) என்றழைக்கப்படும். அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ளதால், பஹ்ட், மதிப்பிழந்து வருகிறது.

    நாட்டின் நிதிநிலைமையை மீண்டும் சீராக்க, 61 வயதான தாய்லாந்து பிரதமர் ஸ்ரெத்தா தவிசின் (Srettha Thavisin) பல முயற்சிகளை எடுக்க உள்ளார். அதில் ஒன்றாக அந்நாட்டு மக்கள் 5 கோடி பேருக்கு "டிஜிட்டல் வாலட் ப்ரோக்ராம்" (Digital Wallet Program) எனும் திட்டத்தின்படி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும், 10,000 பஹ்ட் - ரூ.23,323.76 ($280) - மின்னணு முறையில் செலுத்தவிருக்கிறார்.

    இதற்கு பயனாளியாக தகுதி பெற விரும்பும் குடிமக்கள், மாதம் 70,000 பஹ்ட்டிற்கு குறைவாக வருமானம் ஈட்ட வேண்டும்; 5 லட்சம் பஹ்ட்டிற்கு குறைவாக வங்கியில் இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

    முன்னர் 16 வயதிற்கு மேற்பட்ட 5 கோடியே 60 லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாக இருந்த டிஜிட்டல் வாலட் திட்டத்தின் பயனர்கள் எண்ணிக்கை, சற்று குறைக்கப்பட்டு 5 கோடி பேர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அடுத்த வருட மே மாதம் முதல் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

    மொத்தம் 14 பில்லியன் அமெரிக்க டாலர் இத்திட்டத்திற்காக தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

    "இந்த திட்டத்தால் நன்மையை விட தீமையே அதிகம் விளையும்" என அந்நாட்டின் பொருளாதார நிபுணர்களும் முன்னாள் வங்கி உயரதிகாரிகளும் எச்சரித்ததை பிரதமர் ஸ்வெத்தா பொருட்படுத்தவில்லை.

    இதற்கான சிறப்பு மசோதாக்கள் அடுத்த வருடம் தாய்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

    தனது இந்த முயற்சி, நாட்டின் நலிவுற்ற பொருளாதாரத்தை மேலே கொண்டு வர உதவும் என பிரதமர் ஸ்ரெத்தா உறுதியாக நம்புகிறார். பிரதமர் ஸ்ரெத்தா, நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் அதிபராக விளங்கிய பெரும் கோடீசுவரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இலவசமாக மக்களில் பெரும்பகுதியினருக்கு பணம் வழங்குவது குறித்த சாதக-பாதகங்கள் இந்தியாவிலும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த பழக்கம் அயல் நாடுகளிலும் தொடங்கி விட்டதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • தாய்லாந்தில் லாரிமீது சரக்கு ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்தக் கோர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் முவாங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் தொழிலாளர்கள் பலர் பயணித்தனர்.

    அந்த லாரி ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த சரக்கு ரெயில் லாரிமீது மோதியது. இந்தக் கோர விபத்தில் 3 பெண்கள், 5 ஆண்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தோர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஸ்டீல் வெல்டிங் செயல்பாட்டின்போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழையே காரணம்.
    • குண்டுவெடிப்பின் எதிரொலியால் ஏராளமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதம்.

    தாய்லாந்தில் தெற்கு மாகாணமான நாராதிவாட்டில் உள்ள சுங்கை கோலோக் நகரில் அமைந்துள்ள பட்டாசுக் கிடங்கில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    அங்குள்ள கட்டிடத்தின் கட்டுமான பணியின்போது வெல்டிங் செய்ததால் ஏற்பட்ட பிழை காரணமாக பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நாராதிவாட் கவர்னர் சனன் பொங்கக்சோர்ன் கூறுகையில், "சுங்கை கோலோக்கில் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்த கிடங்கில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. சமீபத்திய எண்ணிக்கையின்படி ஒன்பது பேர் இறந்துள்ளனர். 115 பேர் காயமடைந்துள்ளனர்.

    தற்போது தீ கட்டுக்குள் உள்ளது. கட்டிடம் கட்டப்பட்டு வருவதால், ஸ்டீல் வெல்டிங் செயல்பாட்டின்போது ஏற்பட்ட தொழில்நுட்பப் பிழையே காரணம் என்று முதற்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது" என்றார்.

    இதுதொடர்பாக அந்நாட்டின் ஊடகங்களில் வெளியான காட்சிகளில், காற்றில் பெரும் புகை மூட்டம் எழுவதையும், குண்டுவெடிப்பின் எதிரொலியால் ஏராளமான கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்கள் மோசமாக சேதமடைந்ததையும் காட்டியது.

    ×