என் மலர்
தாய்லாந்து
- 22-ந் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்.
- சீன கப்பல் அமைதி, நட்புறவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளது.
பாங்காக் :
சீன உளவு கப்பல் 'யுவான் வாங்-5' இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி நேற்று முன்தினம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பலில், 750 கி.மீ. தூரம் வரை உள்ள இடங்களை கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
எனவே, கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்கள், ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் மற்றும் தென் இந்தியாவில் உள்ள இந்திய ராணுவ நிலையங்களை சீன உளவு கப்பல் கண்காணித்து பாதுகாப்பு ரகசியங்களை சேகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதுதொடர்பான கவலைகளை இந்தியா தெரிவித்ததால், கப்பலின் வருகையை தள்ளிவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக்கொண்டது. அதனால், கடந்த 11-ந் தேதி வரவேண்டிய கப்பல், தாமதமாக 16-ந் தேதி வந்து சேர்ந்தது.
இலங்கையின் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள், கப்பலின் தானியங்கி அடையாள சாதனத்தை இயக்க நிலையில் வைத்திருக்க வேண்டும், இலங்கை கடல் பகுதியில் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைகளை இலங்கை அரசு விதித்து இருப்பதாக தெரிகிறது.
22-ந் தேதி வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும்.
இந்தநிலையில், இந்தியா-தாய்லாந்து கூட்டு ஆணைய கூட்டத்தில் பங்கேற்பதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றுள்ள மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம், சீன உளவு கப்பல் வருகை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-
அண்டை நாட்டில் நடக்கும் விஷயங்கள், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால், அதில் கவனம் செலுத்துவோம்.
இந்தியாவின் நலன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வையும் மிக மிக உன்னிப்பாக கண்காணிப்போம். இதை ஏற்கனவே எங்கள் செய்தித்தொடர்பாளர் சொல்லி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, சீன உளவு கப்பலின் கேப்டன் ஜாங் ஹாங்வாங் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
சீன கப்பல் அமைதி, நட்புறவு பயணமாக இலங்கைக்கு வந்துள்ளது. எரிபொருள் நிரப்புவதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும். பன்னாட்டு கப்பல்கள் வந்து செல்லும் சர்வதேச துறைமுகம் என்ற முறையில், சர்வதேச நடைமுறைப்படி, தேவையான உதவிகளை இந்த துறைமுகம் அளிக்கும் என்று நம்புகிறோம்.
சீன கப்பலின் வருகையால், விண்வெளி அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சீனா-இலங்கை இடையிலான தொடர்பு வலுப்படும். இரு நாடுகளின் மக்கள் இடையிலான நட்புறவு மேலும் வளரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான்சன் லியு கூறியதாவது:-
இலங்கை அரசும், இலங்கை துறைமுக ஆணையமும் அனுமதிக்கும் பன்னாட்டு கப்பல்களை இந்த துறைமுகம் வரவேற்று வருகிறது. கடந்த மாதம் வரை, நூற்றுக்கணக்கான எண்ணெய், எரிவாயு கப்பல்கள், சுற்றுலா கப்பல்கள். படகுகள் ஆகியவை வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோத்தபய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார்.
- கோத்தபய ராஜபக்சே தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.
பாங்காக் :
அரசியல் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார்.
சிங்கப்பூரில் கோத்தபயவுக்கான அனுமதி காலம் நேற்று முன்தினம் முடிந்தநிலையில், அவரது வேண்டுகோளை ஏற்று தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. அதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒரு தனி விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, பாங்காக்கில் உள்ள ராணுவ விமான தளத்தில் வந்து இறங்கினார். அவருடன் மேலும் 3 பேர் வந்தனர்.
கோத்தபய முதலில் புகெட் நகரில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்க முடிவு செய்திருந்தார். ஆனால் அதுகுறித்த தகவல் கசியக்கூடும் என்பதால் அந்த திட்டம் மாற்றப்பட்டது. பாங்காக் ராணுவ விமான தளத்தில் இருந்து, பெயர் வெளியிடப்படாத ஓட்டலுக்கு கோத்தபய ராஜபக்சே அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு, சாதாரண உடையில் உள்ள தாய்லாந்து சிறப்பு பிரிவு போலீசார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி, ஓட்டலிலேயே தங்கியிருக்கும்படியும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் கோத்தபயவை தாய்லாந்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
- இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்து சென்றடைந்தார்.
- அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் தாய்லாந்து அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பாங்காங்:
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் புரட்சியாக உருவெடுத்தது. நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்த நிலையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றார். அங்கிருந்தபடி பதவியை ராஜினாமா செய்தார். சிங்கப்பூரில் கோத்தபய தங்கி இருப்பதற்கான சமூக வருகை அனுமதி காலம் முடிவடைந்தது.
இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து நேற்று வெளியேறினார். அவருக்கு வழங்கப்பட்ட சமூக வருகை அனுமதி காலாவதியானதால் வெளியேறியதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.
தற்காலிகமாகத் தாய்லாந்தில் தங்க அனுமதியளித்துள்ள அந்நாட்டு அரசு, அவர் 90 நாட்கள் தங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளோம், அதற்குள் அவர் வேறு ஒரு நாட்டில் புகலிடம் தேடிக்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
- 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
- பலியானவர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
தாய்லாந்தில் இரவு விடுதியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர்.
பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்ற இடத்தில் உள்ள இரவு விடுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
பெரும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், பீதியடைந்த மக்கள் விடுதியைவிட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேறிய காட்சி வெளியானது. இந்நிலையில், 3 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இறந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும ஒன்பது ஆண்கள் எனவும், இவரர்கள் அனைவரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.