search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரிப்பு- டிரம்ப் ஆதரவாளர்கள் அதிர்ச்சி
    X

    கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரிப்பு- டிரம்ப் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

    • அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
    • அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையை கமலா ஹாரிஸ் தொடங்கினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டிரம்ப் உடனான விவாதத்தின் போது பேச தடுமாறியது மற்றும் உடல் நிலை காரணமாக அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று சொந்த கட்சியினரே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்றவேண்டும் என ஜனநாயக கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர்.

    இதையடுத்து அதிபர் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் தெரிவித்தார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசை முன்மொழிவதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

    இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையை கமலா ஹாரிஸ் தொடங்கினார். அவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக பலர் ஆதரிக்கத் தொடங்கியதும், அமெரிக்காவின் தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது.


    பிரசாரத்தை தொடங்கிய ஒருவார காலத்தில் கமலா ஹாரிஸ் தேர்தல் நிதியாக 200 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1674 கோடி) தொகையை திரட்டியுள்ளார்.

    இந்த நிதியை வழங்கியுள்ளவர்களில் 66 சதவீதம் பேர் முதல் முறையாக நன்கொடை அளிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த கருத்துக் கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும் டிரம்ப் 42 சதவீத ஆதரவும் பெற்றுள்ளனர். நாளுக்கு நாள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

    இந்த கருத்துக்கணிப்பு டொனால்ட் டிரம்புக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    போட்டி நிறைந்த மாகாணங்களில் மிக சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.

    Next Story
    ×