என் மலர்
ஐக்கிய அரபு அமீரகம்
- விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார்.
- விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.
ஐக்கிய அரபு நாட்டின் அபுதாபிக்கு சிறிய ரக கிளைடர் விமானம் ஒன்று சென்றது. ஒற்றை என்ஜின் கொண்ட இந்த விமானம் தரை இறங்கும்போது என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. எனவே விமானி விமானத்தை தலைநகரில் உள்ள தனியார் விமான நிலையத்தில் தரை இறக்குவதற்கு பதில் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிராண்ட் பகுதியில் தரை இறக்கினார்.
அப்போது விமானம் அங்குள்ள வாகன நிறுத்த பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் இறக்கை பகுதி சேதமானது.
இந்த விபத்தில் விமானி லேசான காயங்களுடன் உயிர்தப்பியதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். விமானத்தில் வேறு யாரும் பயணிகள் இருந்தார்களா? என்ற தகவலை அவர்கள் வெளியிடவில்லை.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமானம் விபத்துக்குள்ளானதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக யாரும் வதந்தி பரப்ப கூடாது எனவும் அவர்கள் எச்சரித்து உள்ளனர்.
துபாயில் இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் விமான விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானார்கள்
- அபுதாபியின் முதல் இந்து கோயிலின் இடத்தை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார்
- இந்த கோயில் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படுகிறது.
அபுதாபி:
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 3 நாள் பயணமாக வளைகுடா நாட்டிற்கு நேற்று சென்றார். அங்கு அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோயிலின் முதல் இடத்தைப் பார்வையிட்டார். கோயிலைக் கட்டுவதில் இந்தியர்களின் முயற்சிகளையும் பாராட்டினார்.
இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விநாயக சதுர்த்தி அன்று அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்துக் கோயிலுக்குச் சென்றதற்கு ஆசீர்வதிக்கப்பட்டேன். விரைவான முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, சம்பந்தப்பட்ட அனைவரின் பக்தியையும் ஆழ்ந்து பாராட்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.
மேலும், அந்நாட்டு வெளியுறவு மந்திரி ஷேக் அப்துல்லா பின் சயீத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் மந்திரி ஜெய்சங்கர், இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அபுதாபியில் அமையவுள்ள இந்தக் கோயில் சுமார் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படும். இந்திய கோவில் கைவினைஞர்களால் பணிகள் நடைபெற உள்ளன. மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்துக் கற்கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் மற்றும் 3வது இடத்தை பாகிஸ்தான் வீரர்கள் பிடித்தனர்.
- இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 19வது இடம் கிடைத்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலை வெளியிடப்பட்டது. அதில், 818 புள்ளிகளுடன் பாகிஸ்தானின் பாபர் ஆசம் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் 805 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 3-வது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு 19வது இடம் கிடைத்துள்ளது.
ஐசிசி டி20 சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹெசல்வுட் 792 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்காவின் பத்ரைஸ் ஷம்சி 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 3-வது இடத்திலும், உள்ளனர்.
644 புள்ளிகளுடன் இந்திய வீரர் புவனேஸ்குமார் 9 வது இடத்தை பிடித்தார். யுவேந்திர சாகல் 22வது இடத்திலும், ஹர்சல் படேல் 28 வது இடத்திலும், பும்ரா 34வது இடத்திலும், ரவி பிஷ்னாஸ் 44 இடத்திலும் உள்ளனர்.
டி20 போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் 267 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 2-வது இடத்திலும், இங்கிலாந்தின் மொயீன் அலி 3-வது இடத்திலும், உள்ளனர். இந்த பட்டியலில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு 13வது இடம் கிடைத்துள்ளது.
- ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி இந்தியா திரும்பும் வழியில் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.
- விமான நிலையத்தில் பிரதமர் மோடியை யுஏஇ அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யான் நேரில் வந்து கட்டியணைத்து வரவேற்றார்.
அபுதாபி:
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ஷேக் கலிபா கடந்த மே 13-ம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தார். இந்தியாவும் ஒரு நாள் துக்கம் அனுசரித்தது.
இதற்கிடையே, ஜெர்மனியின் எல்மாவ் நகரில் நடைபெற்ற ஜி-7 நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
மாநாடு நிறைவடைந்ததும் அங்கிருந்து கிளம்பி, இந்தியா வரும் வழியில் பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.
அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரகத்தின் தற்போதைய அதிபர் ஷேக் முகம்மது பின் சையது அல் நஹ்யான் வரவேற்றார். இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். அப்போது அமீரகத்தின் முன்னாள் அதிபர் ஷேக் கலீபா பின் ஜாயித் அல் நஹ்யானின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டார். அவரை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
- ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தேவையான கோதுமை அனுப்பப்படும் என்று இந்தியா தெரிவித்தது.
- சர்வதேச நிலவரங்களால் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கருதி ஐக்கிய அரபு அமீரகம் நடவடிக்கை
துபாய்:
கோதுமை உற்பத்தியில், உலகில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. பல்வேறு நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்து வருகிறது.
இதற்கிடையே விளைச்சல் குறைவு, உள்நாட்டு தேவை ஆகியவற்றால் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த மே 13-ந்தேதி முதல் இந்தியா தடை விதித்தது.
இதற்கிடையே தனி ஒப்பந்தம் செய்து வர்த்தகம் மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு வழக்கம்போல் கோதுமை ஏற்றுமதி செய்யப்படும் என்று தடை உத்தரவில் இந்தியா திருத்தம் செய்தது. அதன்படி ஒருங்கிணைந்த பொருளாதார நல்லுறவு வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தேவையான கோதுமை அனுப்பப்படும் என்று இந்தியா தெரிவித்தது.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்யும் ஐக்கிய அரபு அமீரகம், உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
சர்வதேச நிலவரங்களால் வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை கருதி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 4 மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. உள்நாட்டு தேவையை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மே 13-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த கோதுமை, கோதுமை மாவு ஆகியவற்றை உரிய ஆவணங்களை அளித்து ஏற்றுமதி செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
- கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பி இருக்கிறது.
துபாய்:
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியதை தொடர்ந்து, ஐக்கிய அமீரகத்துக்கு ரஷியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது தடைபட்டது. இந்த நிலையில், கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவிற்கு பதிலாக இந்தியாவை நம்பி இருக்கிறது. இந்நிலையில் கடந்த மே 13-ஆம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் தூதரக வழிகளில் இந்திய அரசிடம் கோதுமையை ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்தன. இருப்பினும், அத்தகைய கோரிக்கைகளை மதிப்பீடு செய்ய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு இன்னும் முடிவு செய்யவில்லை
இந்நிலையில் மே 13-ஆம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இந்தியாவில் உற்பத்தியாகும் கோதுமையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அந்நாடு தடை விதித்துள்ளது. அவ்வாறு ஏற்றுமதி செய்ய விரும்பும் அமீரக நாட்டு நிறுவனங்கள், அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அமைச்சகத்திடம் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.