என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • 26 சதவீத பரஸ்பர வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
    • ஜூலை 8 ஆம் தேதியுடன் மீண்டும் வரி அமலுக்கு வர உள்ளது.

    இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரிகளைத் தவிர்ப்பதற்காக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முதல் நாடாக இந்தியா மாறக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

    அமெரிக்காவிலிருந்து இந்திய ஏற்றுமதிகள் மீதான 26 சதவீத பரஸ்பர வரி தற்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 8 ஆம் தேதியுடன் மீண்டும் வரி அமலுக்கு வர உள்ளது.

    இந்நிலையில் ஸ்காட் பெசன்ட் பேசியதாவது, "இந்தியாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முடிவை எட்ட உள்ளன.

    இந்தியாவுடன் குறைந்த எண்ணிக்கையில்தான் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்ளது. இந்தியா தன்னிச்சையாக ரூபாய் மதிப்பை மாற்றியமைப்பதில்லை. எனவே இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது அமெரிக்காவுக்கும் மிக எளிதான விஷயமாகவே உள்ளது. வரி விதிப்பு விஷயத்தில் பிற நாடுகளும் இதேபோல நடந்து கொள்ள வேண்டும் என்று அதிபா் டிரம்ப் என்று விரும்புகிறாா்" என்று தெரிவித்தார். 

    • பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
    • பஹல்காம் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

    வாஷிங்டன்:

    ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் வன்முறை சம்பவங்கள் நடப்பது இயல்பாகி விட்டது.

    காஷ்மீரில் உள்ள சுற்றுலா பகுதிகளான ஸ்ரீநகர், குல்மார்க், பஹல்காம் ஆகிய இடங்களிலும் தாக்குதல்கள் நடக்கின்றன.

    ஆகவே, அமெரிக்கர்கள் யாரும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு செல்ல வேண்டாம். (கிழக்கு லடாக் மற்றும் அதன் தலைநகரான லேவுக்கு செல்ல விலக்கு அளிக்கப்படுகிறது).

    மேலும், துப்பாக்கி சண்டை நடக்க வாய்ப்புள்ளதால், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

    • கீவ் மீதான ரஷியாவின் தாக்குதல் எனக்கு வருத்தம் அளிக்கிறது.
    • இது தேவையில்லாதது. மேலும் மிகவும் மோசமான நேரம்.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 3 வருடங்கள் நிறைவடைந்து 4ஆவது வருடமாக நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ரஷியாவிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கா, தற்போது உக்ரைனுடன் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில் தற்போது 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷியா பயங்கர வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குலில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

    சமீபத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்திய மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய அதிபர் புதினுக்கு சாதகமாக செயல்பட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    இந்த நிலையில் கீவ் மீதான தாக்குதலை தொடர்ந்து புதினை டொனால்டு டிரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

    கீவ் மீதான ரஷியாவின் தாக்குதல் எனக்கு வருத்தம் அளிக்கிறது. இது தேவையில்லாதது. மேலும் மிகவும் மோசமான நேரம். புதின், நிறுத்துங்கள்..! வாரத்திற்கு 5 ஆயிரம் வீரர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை முடிக்கலாம்..!

    இவ்வாறு டிரம்ப் தனது TRUTH சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • ஃபவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்கிறார்.
    • பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ஃபவாத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    26 பேரின் உயிரைக் குடித்த காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் இந்தி வாணி கபூர் நடிக்கும் 'அபிர் குலால்' படத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.

    இந்தப் படம்  மே 9, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 'அபிர் குலால்' இரண்டு நாடுகளின் எல்லைகளைக் கடக்கும் ஒரு காதல் கதையை மையமிட்டு எடுக்கப்பட்ட படம்.

    இந்தப் படத்தில் ஃபவாத் கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வாணி கபூர் நடிக்கிறார். இது தவிர, சோனி ரஸ்தான், ஃபரிதா ஜலால், லிசா ஹேடன் மற்றும் ராகுல் வோஹ்ரா ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஆர்த்தி எஸ். பக்ரி இயக்கியுள்ளார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் மற்றும் அவரின் 'அபிர் குலால்' படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல்கள் எழுந்துள்ளன.

    மேற்கு இந்திய திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு மற்றும் இந்திய மற்றும் தொலைக்காட்சி இயக்குநர்கள் சங்கமும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிடையே பஹல்காம் தாக்குதலுக்கு நடிகர் ஃபவாத் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

    • அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக டாட்ஜ் என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.
    • அதன் செயல் தலைவராக டெஸ்லா நிறுவன அதிபரான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'டாட்ஜ்' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது.

    அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவன அதிபருமான எலான் மஸ்க் பொறுப்பு வகித்து வந்தார். தொடர்ந்து நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரும் விதமாக பல அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.

    அரசு ஊழியர்கள் பணியை விட்டு நீக்குதல், அரசு செலவுகளைக் குறைத்தல் உள்ளிட்டவற்றில் மஸ்க் தலைமையிலான 'டாட்ஜ்' துறை தீவிரமாக ஈடுபட்டது. இதனால் அரசுக்கு ஒருநாள் செலவில் இருந்து ரூ.34 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டது.

    இதற்கிடையே, டிரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கின. நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 சதவீதம் வரை டெஸ்லாவின் லாபம் குறைந்தது.

    இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதைக் குறைத்து கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்றார்.

    அடுத்த மாதத்துக்குள் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறி விடுவேன் என சூசகமாக தெரிவித்துள்ளார்.

    • டெல்டா விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் ஃபளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தீ பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விமானத்தில் இருந்த 300 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது
    • நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம்

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பாஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ராகுல் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது மிகவும் தெளிவாகத் தெரிகிறது,  இந்த அமைப்பில் ஏதோ தவறு இருப்பதும் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. நான் இதை பலமுறை கூறியுள்ளேன். மகாராஷ்டிராவில் வயது வந்தர்வர்கள் எண்ணிக்கையை விட மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் அதிகமானோர் வாக்களித்தனர்.

    மாலை 5:30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கியது. மாலை 5:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது நடக்க இயலாது.

    ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கு போட்டு பார்த்தல், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்றிருப்பார்கள் என்று அர்த்தம், ஆனால் இது நடக்கவில்லை.

    நாங்கள் அவர்களிடம் வீடியோ பதிவுகளை கேட்டபோது, அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையும் மாற்றினர். அதனால் இப்போது வீடியோ பதிவுகளை கேட்க எங்களுக்கு அனுமதி இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • அதிபர் டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறது.
    • அவரது நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார்.

    அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தின

    இவரது இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர்.

    அப்போது அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்ற அவர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    • காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி அமெரிக்காவின் பாஸ்டன் நகரை சென்றடைந்தார்.
    • அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி 21 மற்றும் 22-ம் தேதிகளில் அமெரிக்கா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரோட் தீவில் அமைந்துள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் ராகுல் காந்தி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களையும் சந்திக்கிறார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு ராகுல் காந்தி தனது அமெரிக்க பயணத்தின்போது டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஜார்ஜ் டவுன் பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நேற்று பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் போனில் உரையாடினார்.
    • அமெரிக்காவுடனான கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது.

    உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க், டொனால்டு டிரம்ப் உடைய அரசின் செயல்திறன் துறை தலைவராக உள்ளார். தனது ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றை இந்திய சந்தைகளுக்கு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர ஆவலுடன் உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் போனில் உரையாடிய நிலையில், இந்தியா வருவதற்கான தனது விருப்பத்தை இன்று மஸ்க் வெளிப்படுத்தியுள்ளார்.

    "பிரதமர் மோடியுடன் பேசுவது ஒரு மரியாதை. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகை தர நான் ஆவலுடன் உள்ளேன்!" என்று மஸ்க் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

    மஸ்க் உடன் பேசியது குறித்து மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,"எலான் மஸ்க் உடன் பேசினேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் வாஷிங்டன் டிசியில் எங்கள் சந்திப்பில் நிகழ்ந்து போலவே, நாங்கள் தொழில்நுட்பம் மற்றும் புதுமைத் துறைகளில் ஒத்துழைப்புக்கான மகத்தான ஆற்றலைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.

    இந்த துறைகளில் அமெரிக்காவுடனான கூட்டாண்மையை முன்னேற்றுவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது" என்று தெரிவித்தார்.

      

    • பஞ்சாபின் காவல் நிலையங்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அதற்கு பொறுப்பேற்றார்.
    • பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் செயல்பட்டார்.

    பஞ்சாபில் கடந்த 5 மாதங்களாக நடந்த 14 வெடிகுண்டுத் தாக்குதலில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது செய்யப்ட்டுள்ளார்.

    ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங், பஞ்சாபின் காவல் நிலையங்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அதற்கு சமூக வலைத்தளத்தில் பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது.

    நவம்பர் 2024 முதல் அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையங்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார். அவர் குறித்த தகவலுக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

    பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பப்பர் கல்சா இன்டர்நேஷனலுடன் இணைந்து ஹேப்பி பாசியா பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

    தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள ஹேப்பி சிங் ICE (குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு) காவலில் உள்ளார். 

    • எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர்
    • ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.

    ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் 100 சதவீதம் சாத்தியமாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

    ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகள் மீது ஆரம்பத்தில் 20 சதவீத வரி விதித்து பின்னர் 90 நாட்களுக்கு அதை தாற்காலிகமாக நிறுத்தினார் டிரம்ப்.

    இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) வெள்ளை மாளிகையில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடனான சந்திப்பைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

    மெலோனியை சந்தித்தது குறித்து பேசிய அவர், "எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். உலகின் உண்மையான தலைவர்களில் ஒருவர். நாங்கள் ஒன்றாகவும் நாடுகளாகவும் நல்ல உறவைக் கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் 100% ஒரு வர்த்தக ஒப்பந்தம் இருக்கும் என்றும் ஆனால் அது ஒரு நியாயமான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

    ×