என் மலர்
புதுச்சேரி
கட்சியில் இருந்து வெளியேறிய பிரமுகர்களுக்கு காங்கிரஸ் தூது
- 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால், எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியவில்லை.
- பல்வேறு தொகுதிகளில் காங்கிரசார் வெளியேறியதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சுதந்திரம் பெற்ற காலம் முதல் நீண்ட காலமாக காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்து வருகிறது.
இதனால் காங்கிரசின் கோட்டை என புதுவை கருதப்பட்டது. 2016-ம் ஆண்டு தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 15 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
ஆனால் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் 2021-ல் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் தோல்வியை தழுவினர். 2 தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றதால், எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியவில்லை.
இதற்கு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தின் இறுதியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பிரமுகர்கள் வெளியேறி பா.ஜனதா மற்றும் என்.ஆர். காங்கிரசில் இணைந்தனர்.
தற்போது பா.ஜனதாவில் உள்ள அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி முக்கிய பிரபலங்கள் காங்கிரசை சேர்ந்தவர்கள்தான். சமீபத்தில் பா.ஜனதாவின் தலைவராக செல்வகணபதி எம்.பி. பொறுப்பெற்றார்.
அவர் புதிய நிர்வாகிகளை கட்சியில் நியமித்து வருகிறார். இதில் பா.ஜனதாவுக்கு மாறிய காங்கிரசாருக்கு பதவிகள் கிடைக்கவில்லை. இது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் பல்வேறு தொகுதிகளில் காங்கிரசார் வெளியேறியதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது தேர்தல் பணிகளை பாதிக்கும் என கருதப்படு கிறது.
இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள வைத்திலிங்கம் எம்.பி. கட்சியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஒரு கட்டமாக கட்சியிலிருந்து வெளியேறிய காங்கிரசாரை மீண்டும் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக பா.ஜனதா, என்.ஆர். காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகளை காங்கிரஸ் பக்கம் இழுக்க தூது விட்டு வருகின்றனர்.