என் மலர்
புதுச்சேரி
கனமழை எச்சரிக்கையால் முன்கூட்டியே நெல் அறுவடை செய்யும் விவசாயிகள்
- இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.
- நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும்.
புதுச்சேரி:
புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் தாளடி நவரை பருவத்தில் சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
ஏ.டி.டி-51, என்.எல்.ஆர். ரக நெற்பயிர்களை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
பயிர்களில் கதிர்பிடித்து தற்போது நெல்மணிகள் வளர்ந்துள்ளன. அடுத்த ஒருவாரத்தில் அறுவடை செய்ய விவசாயிகள் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் பாகூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது.
23-ந் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அவ்வாறு பலத்த மழை பெய்தால் விளைந்த நெற்பயிர்கள் மடிந்து சேதமடையும்.
எனவே அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மற்றும் சற்று பசுமையாக உள்ள நெற்பயிர்களை விவசாயிகள் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். இருளஞ்சந்தை, குருவிநத்தம், கரிக்கலாம்பாக்கம் மற்றும் அதனையொட்டிய தமிழக பகுதியிலும் அறுவடை பணிகள் மும்முரமாக நடக்கிறது.
இதுகுறித்து பாகூர் பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, மழை பெய்து வருவதால் முன்கூட்டியே அறுவடை செய்தால் ஓரளவாது நஷ்டம் ஏற்படாமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் முன்கூட்டியே அறுவடை நடந்து வருகிறது.
ஏற்கனவே பெய்த மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால், செயின் போட்ட அறுவடை எந்திரம் மூலம் பணிகள் நடக்கிறது.
நெற்பயிர்கள் பசுமையாக பூ வைத்த நிலையில் உள்ள கதிர்களில் அண்மையில் பெய்த மழையால் பூச்சிகள் பாதிப்பு அதிகமாகும். இதனால் மகசூல் பாதிக்க வாய்ப்புள்ளதாக கூறினர்.