என் மலர்
புதுச்சேரி
மோடி ஆட்சியில் அரசு தேர்வுகள் முறையாக நடைபெறவில்லை- நாராயணசாமி குற்றச்சாட்டு
- நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல், பித்தலாட்டம் நடந்துள்ளது.
- குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும், நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடுகளை கண்டித்தும் புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு, ஊழல், பித்தலாட்டம் நடந்துள்ளது. பீகாரில் நீட் தேர்வு கேள்வி தாள்களை கசியவிட்டு ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.30 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளனர். குஜராத் மாநிலத்திலும் நீட் தேர்வில் ரூ.3 கோடி வரை லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ளனர். இப்படி நீட் தேர்வில் பலதரப்பட்ட ஊழல் நடந்துள்ளது. நீட் தேர்வு முகமை தான் இந்த ஊழல்களுக்கு முக்கிய காரணம்.
நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இது சம்மந்தமான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீட் தேர்வு முறைகேடு சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பிரதமர் மோடி ஆட்சியில் எந்த தேர்வும் முறையாக நடைபெறவில்லை. எல்லாவற்றிலும் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சம்பந்தப் பட்டவர்களுக்கு கிடைக்கிறது. மோடி ஆட்சியில், ஒட்டுமொத்தமாக அரசு நடத்தும் தேர்வுகள் மோசமாக கையாளப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடந்தது இல்லை. மோடி ஆட்சியில் சர்வசாதாரணமாக முறைகேடுகள் நடக்கிறது. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இது சகஜமாக நடக்கிறது. ஆகையால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுவாக வந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.