என் மலர்
புதுச்சேரி
சுற்றுலா பயணிகளை கவரும் பாண்டி மெரினா- விடுமுறை நாட்களில் திக்குமுக்காடும் போக்குவரத்து நெரிசல்
- புதுவை அருகே நோணாங்குப்பத்தில் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் உள்ளது.
- வார இறுதி நாட்களில் புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை ஆன்மீக நகரமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.
இங்கு அரவிந்தர் ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவில் உள்ளிட்டவைகள் உள்ளது. மேலும் புதுவை அருகே ஆரோவில்லில் மாத்ரி மந்திர் உள்ளது. இதனை காண வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மேலும் கடற்கரையை கண்டு ரசிக்க தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
நவநாகரீக உடையணிந்து நகரை சுற்றிவரும் சுற்றுலா பயணிகள் மூலம் ஓட்டல்கள், மதுக்கடைகள், தங்கும் விடுதிகள், நிரம்பி வழிகின்றன. இதனால் புதுவை அரசுக்கு வருமானமும் கிடைக்கிறது.
கடற்கரை மட்டுமின்றி புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பாண்டி மெரினா கடற்கரையையும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
முன்பு இந்த கடற்கரை புதர்கள் மண்டி இருந்தது. தற்போது அவை சீரமைக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கான பூங்கா உள்ளது. மேலும் ஏராளமான குடில்களும் தனியார் பங்களிப்புடன் பல்வேறு கடைகளும் நடத்தப்பட்டு வருகிறது.
நகரப்பகுதிகளில் இருந்து இங்கு செல்ல சாலைகள் தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதே போல் சின்ன வீராம்பட்டினத்தில் நீல கடற்கரை உருவாக்கப்பட்டுள்ளது. அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
புதுவை அருகே நோணாங்குப்பத்தில் சுண்ணாம்பு ஆறு படகு குழாம் உள்ளது.
இங்கும் சுற்றுலா பயணிகள் சென்று படகில் பயணம் செய்து கடற்கரையில் உள்ள பேரடைஸ் பீச்சை ரசித்து வருகிறார்கள்.
வார இறுதி நாட்களில் புதுவைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் இருந்து வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவு குவிந்து வருகிறார்கள். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நகரின் மையப்பகுதிகளில் நவநாகரீக உடையுடன் வலம் வருகிறார்கள்.
இதனால் வார இறுதி நாட்களில் புதுவையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்திராகாந்தி சிலை, ராஜூவ் காந்தி சிலை, வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை, கொக்கு பார்க் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை இருப்பதால் சட்டம்-ஒழுங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து விடுமுறை நாட்களில் அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
இன்று இரவு முதல் புதுவையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கத்தொடங்கும்.