search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரங்கசாமிக்கு எதிராக பா.ஜனதா போர்க்கொடி- புதுவை அரசுக்கு நெருக்கடி
    X

    ரங்கசாமிக்கு எதிராக பா.ஜனதா போர்க்கொடி- புதுவை அரசுக்கு நெருக்கடி

    • இந்தியா முழுவதும் மதுவுக்கு எதிரான கொள்கைதான் பா.ஜனதாவின் கொள்கை.
    • புதுவை மாநில பா.ஜனதாவும் அதே கொள்கையோடுதான் செயல்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் கலால்துறை சார்பில் விடுதிகளில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபார்கள் அமைக்க கடந்த காலத்தில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    தற்போது விதிமுறைகள் அகற்றப்பட்டு, மதுபார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் புதிது, புதிதாக நகர பகுதியில் பார்கள் உருவாகி வருகிறது. கோவில், குடியிருப்பு, பள்ளி, மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பார்கள் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில பகுதிகளில் பொதுமக்கள் திரண்டு போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

    புதுவை அரசு புதிதாக 5 மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்க உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே புதுவை மாநிலத்தில் 5 மதுபான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் கூடுதலாக மதுபான தொழிற்சாலைகள் அமைவது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதோடு, குடிநீர் தட்டுப்பாடை உருவாக்கும் என அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மதுபான ஆலை, மதுபார் திறக்க திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்தித்தது. எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ. சிவசங்கர் ஆகியோர், சில நாட்களுக்கு முன்பு கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து என்னை சந்தித்து கடிதம் அளித்தனர்.

    அதில் மதுபான கொள்கையில் புதுவை பா.ஜனதாவின் நிலைப்பாடு என்ன? என வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என கோரியிருந்தனர். இந்தியா முழுவதும் மதுவுக்கு எதிரான கொள்கைதான் பா.ஜனதாவின் கொள்கை. புதுவை மாநில பா.ஜனதாவும் அதே கொள்கையோடுதான் செயல்பட்டு வருகிறது. கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் 12 பா.ஜனதா, ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நிலைப்பாடும் இதுதான்.

    மக்களின் மன நிலையும் மதுவுக்கு எதிராகத்தான் உள்ளது. இதனால்தான் மக்கள் திரண்டு போரட்டம் நடத்துகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பா.ஜனதா சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

    தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, மக்களின் எண்ணங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட 5 மதுபான தொழிற்சாலைகள், 250-க்கும் மேற்பட்ட சுற்றுலா மதுபான உரிமங்களுக்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்யும் உத்தரவை கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறப்பிக்க வேண்டும் என பா.ஜனதா சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

    விரைவில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முதல்-அமைச்சர் சுமூகமான தீர்வு காண வேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜனதா அரசின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளது ரங்கசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×