என் மலர்
புதுச்சேரி
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நுழைக்க கவர்னர் ரவி முயற்சிக்கிறார்- நாராயணசாமி குற்றச்சாட்டு
- அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜக கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.
- புதுவையில் முன்பு இருந்த கவர்னர்கள் போல சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்கட்ட தேர்தல் முதல் 6-ம் கட்ட தேர்தல் வரை மோடி 10 ஆண்டு பிரதமராக என்ன செய்தார்? என பிரசாரத்தில் பேசவில்லை.
பிரதமர், அமித் ஷா, பா.ஜனதா தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களை வசைபாடுவதும், காங்கிரஸ் கட்சியை தரம்தாழ்ந்து பேசுவதும், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை சிறையில் தள்ளும் வேலையைத்தான் செய்கின்றனர்.
அயோத்தி கோவிலை இடிக்கும் கட்சி காங்கிரஸ் என பிரதமர் பொய் பிரசாரம் செய்கிறார். பிரதமர் தன்னை அவதார புருஷன் என பேசி வருகிறார். அவரது பேச்சில் இருந்து பா.ஜ.க. படுதோல்வி அடையும் என தெரிகிறது. இந்தியா கூட்டணி மிகப்பெரும் அளவில் எம்.பி. தொகுதிகளை கைப்பற்றும்.
பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் 200 இடங்களை தாண்டாது. இந்தியா கூட்டணி 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும். புதுவையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கம் அமோக வெற்றி பெறுவார். தமிழகம், புதுவையில் 40 தொகுதியிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஒரு இடத்தில்கூட பா.ஜனதா வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.வும் படுதோல்வி அடையும்.
தமிழ்நாடு கவர்னராக ரவி பொறுப்பேற்றது முதல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார். அவர் அதிகார மீறல், ஜனநாயகத்தை மதிக்கவில்லை என சுப்ரீம்கோர்ட் சாடியும் திருந்தவில்லை. தமிழக தி.மு.க. ஆட்சிக்கு தொல்லை கொடுப்பது, கோப்புகளை நிராகரிப்பது, திருப்பி அனுப்புவது என அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார்.
தமிழக கவர்னர் ரவி திருவள்ளுவர் விழாவை கவர்னர் மாளிகையில் கொண்டாடியுள்ளார். திருவள்ளுவர் எந்த காலத்திலும் காவி உடை அணிந்தது இல்லை. அவர் படங்கள், சிலைகளில் வெள்ளை உடையுடன் இருப்பார். வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்க, தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கொச்சைப்படுத்த, தமிழக அரசுக்கு தொல்லை கொடுக்க சர்ச்சை வேலையை கவர்னர் செய்துள்ளார்.
இதற்கு கவர்னர் மட்டும் பொறுப்பல்ல, அவரை ஊக்குவிக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடியும்தான் பொறுப்பு.
கவர்னர் மூலம் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வெகு விரைவில் வரும்.
கவர்னர் தமிழக மக்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தனது ஆர்.எஸ்.எஸ். சித்தாந்ததை படிப்படியாக தமிழ்நாட்டில் நுழைக்கும் வேலையை பார்க்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி எந்த கட்சியும் சாராமல் இருக்க வேண்டிய கவர்னர் பாஜக கைக்கூலியாக செயல்படுவது வேதனை தருகிறது.
புதுவையில் முன்பு இருந்த கவர்னர்கள் போல சி.பி.ராதாகிருஷ்ணனும் புதுவை அரசு நிர்வாகத்தில் தலையிடுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.