என் மலர்
புதுச்சேரி
புதுவை மக்கள் பணத்திற்கு அடிபணியமாட்டார்கள்- நாராயணசாமி ஆவேசம்
- இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும்.
- இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி.
புதுச்சேரி:
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை மிஷன் வீதியில் உள்ள பசுமை வாக்குச்சாவடியான வ.உ.சி. அரசு பள்ளி மையத்தில் தனது வாக்கை செலுத்தினார்.
சுமார் ½ மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் நின்று தனது மகளுடன் அவர் வாக்கை செலுத்தினார். இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியர்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டும். இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், மக்கள் சக்திக்கும் இடையில் நடைபெறும் தேர்தல். மோடியின் பணபலமும், ராகுல் காந்தியின் மக்கள் சக்தியும் களத்தில் இருக்கின்றன. எப்போதும் மக்கள் சக்திதான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரியும்.
பிரதமர் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருக்கும் வேலைவாய்ப்பு, நாட்டின் அமைதி, பொதுசொத்தை பாதுகாப்பது, எல்லை பாதுகாப்பு போன்ற வாக்குறுதிகளை கொடுத்தார். 10 ஆண்டுகளாக அவர் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அதை பற்றி பேசுவதும் இல்லை.
காங்கிரஸ் கட்சியை வசைப்பாடி, வாரிசு அரசியல் என பேசி வாக்கு சேகரித்தார். மோடியின் ஆட்சி ஒட்டுமொத்த ஊழல் ஆட்சி, வருமான வரித்துறை வழக்கு போன்ற வழக்குகளில் உள்ளவர்கள் தேர்தல் பத்திரங்களை கொடுத்துள்ளனர். முதலமைச்சர் ரங்கசாமி 3 ஆண்டுகளில் எந்த சாதனையையும் செய்யவில்லை. புதுவையில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா போதை பொருட்கள் அதிகரித்துள்ளன.
தேர்தல் அறிக்கையில் கூறிய எதனையும் அவர் நிறைவேற்றவில்லை. வேட்பாளர் நமச்சிவாயம் அவரது துறையில் எதையும் செய்யவில்லை. வெளிநாட்டிலேயே அவர் இருக்கிறார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
மின்சார துறையை தனியாருக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளார். சொத்து குவித்து வைத்துள்ளார். பா.ஜனதா பணத்தை வாரி இறைத்து வருகிறது. இந்தியா கூட்டணி மக்கள் பலமுள்ள கூட்டணி. புதுவை மக்கள் பணத்திற்கு அடிபணியமாட்டார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.