என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி இந்தியா கூட்டணியில் விரிசலா?
- இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கம், தொ.மு.ச. தனியாக ஊர்வலம் நடத்தினர்.
- புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து இன்று ஊர்வலம், மறியல், ஆர்ப்பாட்டம், பந்த் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடந்தது.
புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் இன்று நடந்தது. இந்த போராட்டம் 2 பிரிவாக நடந்தது. இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கம், தொ.மு.ச. தனியாக ஊர்வலம் நடத்தினர்.
தாவரவியல் பூங்கா அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்றம் பின்புறத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதேநேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யூ.சி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ., எல்.எல்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து தனியாக போராட்டம் நடத்தினர்.
நகர பகுதியில் 3 மணி நேர பந்த், கிராமப்புற பகுதிகளில் கடையடைப்புடன் போராட்டமும் நடத்தினர்.
நகர பகுதியில் சுப்பையா சிலை அருகிலிருந்து ஊர்வலமாக வந்து மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை பெறுவதில் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை தொழிற்சங்கங்களின் பிளவு வெளிப்படுத்தி உள்ளது.