என் மலர்
புதுச்சேரி
மது போதையால் பைக் திருடனாக மாறிய கோடீஸ்வரரின் மகன்
- பிடிபட்டவர் பிரபல பைக் திருட்டு கும்பலின் தலைவன் புறா ஆனந்த் என்பது தெரியவந்தது.
- தமிழக மற்றும் புதுவையில் எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆலந்தூரை சேர்ந்தவர் ஆனந்த் என்கிற புறா ஆனந்த்(28).
இவர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு மோட்டார் சைக்கிள் திருடும் கோஷ்டியாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். புதுவையில் ஒருமுறையும், தமிழகப் பகுதியில் ஒரு முறையும் என மாற்றி மாற்றி இவர்கள் பைக்குத் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவர்கள் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்தப் பகுதியிலும் சிக்காத இவர்கள் தற்பொழுது. புதுவை உருளையன்பேட்டையில் சிக்கி உள்ளனர்.
எங்கு திருட வேண்டும் என்று திட்டமிட்டு இவர்கள் செல்போன்களை கொண்டு செல்லாமல் எந்த ஒரு ஆதாரங்களும் இன்றி பைக்கை திருடி வந்துள்ளனர்.
அப்படி திருடும் பைக் நம்பர் பிளேட் மாற்றி வண்ணத்தை மாற்றி ஒன்றரை லட்ச ரூபாய் வரை மதிப்பிலான பைக்கை ரூ.2 ஆயிரத்து 500-க்கு விற்றுள்ளனர். மது போதைக்கும் கஞ்சா போதைக்கும் அடிமையான இவர்கள் வாகனங்களை திருடி குறைந்த விலைக்கு விற்பதையே முக்கிய வேலையாக வைத்திருந்தனர்.
உருளையன்பேட்டை மங்கலட்சுமி நகரை சேர்ந்த ஒருவரின் ரூ. 1 ½ லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த பைக் திருடப்பட்டதாக சி.சி.டி.வி. காட்சிகளுடன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான உருவத்தை வைத்து போலீசார் மேலும் சில இடங்களில் தேடினார்கள். அப்பொழுது ஆட்டுப்பட்டி என்ற பகுதியில் சிறுவன் ஒருவனிடம் வாகனத்தை திருடியவர் செல்போனை வாங்கி பேசுவது பதிவாகி இருந்தது.
அந்தப் பகுதிக்கு சென்று அந்த சிறுவனை கேட்ட பொழுது, பைக் திருடன் அவனது அம்மாவிடம் பேச வேண்டும் என கூறி போனை வாங்கியதாக கூறினார்.
அதில் தனது அம்மாவுக்கு போன் செய்து உடல்நிலை எப்படி இருக்கு என்று கேட்டு நாளை வீட்டுக்கு வந்து சாப்பிடுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த செல்போன் எண்ணை பதிவு செய்த போலீசார் அதை கொண்டு மரக்காணம் வரை சென்று குற்றவாளியை பிடித்தனர். பிடிபட்டவர் பிரபல பைக் திருட்டு கும்பலின் தலைவன் புறா ஆனந்த் என்பது தெரியவந்தது.
இவரது தந்தை விசுவநாதன் அப்பகுதியில் தொழிலதிபராக உள்ளார். பல கோடிக்கு சொத்து உள்ளது.
இருப்பினும் மகன் பைக்குகளை திருடி கஞ்சா மற்றும் மது போதைக்கு செலவிட்டு வந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பைக்கை பறிமுதல் செய்த உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான குழு ஆனந்தின் கூட்டாளி புதுப்பாக்கம் அருண்(19) என்பவரையும் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பலை சேர்ந்த 6 பேர் ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் பைக் உடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மற்றும் புதுவையில் எத்தனை வாகனங்கள் திருடப்பட்டுள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.