என் மலர்
புதுச்சேரி
13 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொடூர கொலை
- சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த நிரவி பகுதியை சேர்ந்த, திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே ஒயிட் ஹவுஸ் காலனி உள்ளது. இங்கு தச்சுவேலை செய்யும் சிங்காரவேலு, தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ் (வயது 13), இவன் தனது நண்பர்களோடு வீட்டின் அருகே நேற்று மதியம் விளையாடிக் கொண்டிருந்தார்.
மாலை வெகுநேரமாகியும் சந்தோஷ் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தோஷ் பெற்றோர்கள் அவனை பல இடங்களில் தேடினர். அப்போது வீட்டின் அருகே சந்தோஷின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பின்னர் இது குறித்து நிரவி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட சிறுவனின் கழுத்து, கை, கால், மார்பு என 17 இடங்களில் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் கொலை குறித்து, அவனுடன் விளையாடியவர்களுடனும், அப்பகுதியிலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவன் சந்தோசை கொலை செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அதன்படி அந்த சிறுவனின் வீட்டிற்கு போலீசார் சென்றபோது, வீட்டில் யாரும் இல்லை. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு ரத்தத்துடன் கத்தி ஒன்று கிடைத்தது. சிறுவனை கொலை செய்ய பயன்படுத்திய கத்தியாக இருக்கலாம் என்று சந்தேகமடைந்த போலீசார், இது குறித்து அந்த குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர். ஆனால், அந்த குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
பக்கத்துவீட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் மயிலாடுதுறையில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைந்தது. அங்கு விரைந்த போலீசார் அந்த சிறுவனை மடக்கி பிடித்தனர். இவர் தனது தாயாரின் உதவியுடன் சிறுவன் சந்தோஷை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து சிறுவனை கைது செய்த போலீசார், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரை தேடி வருகின்றனர்.
வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.