என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் வாலிபர் தற்கொலை
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை.
- அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
புதுச்சேரி:
புதுவை சஞ்சீவி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). கொத்தனார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் போதை மறுவாழ்வு மையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றும் குடிப்பழக்கத்தை கைவிடவில்லையாம்.
இந்த நிலையில் அவரது அண்ணன் கோபி சர்க்கரை நோய்க்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக ராஜ்குமார் இருந்து கவனித்து வந்தார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமாரை திடீரென காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்கவில்லை.
இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரியின் 2-வது தளத்தில் உள்ள கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது ராஜ்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோரிமேடு போலீசார் அழுகிய நிலையில் இருந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.