என் மலர்
நீங்கள் தேடியது "காங்கயம்"
- முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
- மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாலுகா கணபதிபாளையம் ஊராட்சி ஒட்டப்பாளையம் கிராமத்தில் ரோஸ் கார்டன் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில், இப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் உள்ளது.
ஆனால் இந்துக்கள் வழிபாடு செய்ய கோவில் இல்லாத நிலையில் கோவில் ஒன்று கட்ட வேண்டும் என எண்ணிய மக்கள் அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் நிலம் தேடி வந்தனர்.
இதையறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் ஆர்.எம்.ஜே. ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 சென்ட் நிலத்தை கோவில் கட்ட தானமாக வழங்கினர். அனைவரும் மனிதர்கள், எல்லோரும் சமம், எல்லோரும் சகோதரர்கள் என சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் உணர்த்தும் விதமாக முஸ்லிம்கள் தங்களது நிலத்தை தானமாக வழங்கியது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
இதையடுத்து அந்த இடத்தில் கோவில் கட்டும் பணி நிறைவடைந்து கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இருந்து 7 தட்டுகளில் சீர்வரிசை எடுத்துக் கொண்டு மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் முஸ்லிம்கள் சார்பில் அன்னதான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் விதத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் கவர்ந்தது.
- திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன.
- காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காங்கயம்:
காங்கயம் நகரின் பிரதான சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து பாரதிய கிசான் சங்க மாவட்ட துணைத் தலைவா் மு.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- காங்கயம் நகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக காங்கயம் பேருந்து நிலையம் அருகில், திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் சாலையை ஆக்கிரமித்து பிரமாண்ட முறையில் கடைகளை அமைத்துள்ளன.இதனால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், பாதசாரிகளும் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, திருப்பூா் சாலை பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களின் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, சாலையை ஆக்கிரமித்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.
- பல்நோக்கு ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது.
திருப்பூர் :
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குண்டடம், காங்கயத்தில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி நடக்கிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் வருகிற 24-ந் தேதி இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கயம் கார்மல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இணை இயக்குனர் நலப்பணிகள், துணை இயக்குனர் பொது சுகாதாரம், திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள்.
இந்த முகாமில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்களுக்கு மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் தேவையான மேல்சிகிச்சைகள் அளிக்கப்படும். எனவே பொதுமக்கள் தவறாமல் பங்கேற்கலாம். தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் இந்த முகாமில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் சோதனை, முழு ரத்த பரிசோதனைகள், பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம், மனநல மருத்துவம் உள்ளிட்ட பல்நோக்கு ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்களால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்பட உள்ளது. சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.
இந்த முகாமில் அனைத்து சிறப்பு மருத்துவ பிரிவுகளும், பங்கேற்கும் வகையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் பொறுப்பேற்று சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- 12 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்தது.
- திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், அங்கிருந்து வருவதற்கும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தென் மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூரில் இருந்து நல்லூர், படியூர், காங்கயம், ஊதியூர், தாராபுரம், தொப்பம்பட்டி, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை வழியாக திருச்செந்தூருக்கு அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது. 12 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்த இந்த பஸ் மூலம் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தென் மாவட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் பயன்பெற்று வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள், தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் காங்கயம் வழி திருப்பூர்-திருச்செந்தூர் பஸ்சை இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது.
- தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் :
காங்கயம் வாரச் சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டது. காங்கயம் பேருந்து நிலையம் அருகே வாரம்தோறும் திங்கள்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வாரச் சந்தையில் முதல் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.50க்கும், இரண்டாம் தரமான சின்ன வெங்காயம் கிலோ ரூ.30க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தக்காளி கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோ ரூ.15 அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் வரும் நாள்களில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
- மின் பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது.
காங்கயம் :
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூா், மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை 16-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் இடங்கள்: ஊதியூா் துணை மின் நிலையம் - வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம். மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் - அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம்.
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா். மின் தடை செய்யப்படும் இடங்கள்: ராசாத்தாவலசு துணை மின் நிலையம் - மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.
வெள்ளக்கோவில் துணை மின் நிலையம் - வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா். நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி. நகா், கே.பி.சி. நகா், சேரன் நகா், காமராஜபுரம். தாசவநாய்க்கன்பட்டி துணை மின் நிலையம் - தாசவநாய்க்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளி பாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.
- கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர்.
- சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும்.
காங்கயம் :
காங்கயம் அருகே நாட்டார்பாளையம் பகுதியில் உள்ள பெரியசாமி என்பவரது விவசாய தோட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கட்டியிருந்த கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. எனவே ஊதியூர் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் சிறுத்தைதான் கன்று குட்டியை கொன்று இருக்கலாம் என்று பொதுமக்களும், விவசாயிகளும் சந்தேகம் அடைந்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்றுக்குட்டியின் உரிமையாளர் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கன்றுக்குட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:- கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர். மேலும் கன்றுக்குட்டியின் உடல் பகுதியில் சிறுத்தையின் கால் நகங்களோ அல்லது பற்களின் தடயங்கள் ஏதும் இல்லை. அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடங்களும் இல்லை. மேலும் கன்றுக்குட்டியின் கால் பகுதியில் சிறிய அளவிலான பற்களின் தாரைகள் உள்ளது.இது நாய்களின் பற்கள் போல் உள்ளது. இது வெறி நாய்கள் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் அல்லது நோய்வாய் பட்டு உயிரிழந்து அதை கன்றுக்குட்டியின் உரிமையாளர் 3 அல்லது 4 நாட்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம். எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும். கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதாக இருந்தால் அங்கு இருந்து வேறு பகுதிக்கு கன்று குட்டியை சிறுத்தை கடித்து இழுத்து சென்று இருக்கும். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. எனவே வெறிநாய்கள் கடித்துதான் கன்றுக்குட்டி இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- காங்கயம் நகராட்சி நிர்வாகம் சார்பில் உலக பூமி தின விழா அனுசரிக்கப்பட்டது.
- சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சி நிர்வாகம் சார்பில் உலக பூமி தின விழா அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நகராட்சியின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், காங்கயம்-சென்னிமலை சாலை பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வைத்து உலக பூமி தினம் குறித்தும், மண் வள பாதுகாப்பு குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஷ்வரன், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசு ஆதார விலையில் விற்பனை செய்ய ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
- உலர் கொப்பரை ஒரு கிலோ 85 - 88 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
உடுமலை :
தமிழகம் முழுவதும் கொப்பரை சீசன் துவங்கியு ள்ளதால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. இங்கு இருந்து கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கொப்பரை அனுப்ப ப்படுகின்றன.உடுமலை,பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசா யிகளிடம் கொப்பரை உற்பத்தி செய்ய உலர்களம் வசதி அதிகளவில் இல்லை. இதனால் 6 சதவீதம் ஈரப்பதத்துக்குள் இருக்கும் உலர் கொப்பரை (அரவை கொப்பரை) வாங்க காங்கேயம், வெள்ள கோவில், ஊத்துக்குளிக்கு விவசாயிகள் செல்கி ன்றனர். காங்கேயம் பகுதியில் கொப்பரை வாங்கி வந்து அரசு ஆதார விலையில் விற்பனை செய்ய ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- கேரள மாநிலத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக தமிழகத்துக்கு தேங்காய் வரத்து இல்லை. தமிழகத்தில் இருந்து தான் கேரளாவுக்கு அனுப்பப்படுகின்றன.உலர் கொப்பரை இங்கு பற்றாக்குறையாக உள்ளதால் காங்கேயத்துக்கு செல்ல வேண்டியதுள்ளது.
தற்போது மார்க்கெட்டில் உலர் கொப்பரை ஒரு கிலோ 85 - 88 ரூபாய் வரை வி ற்பனை செய்யப்படுகிறது. அந்த விலைக்கு கொப்பரை வாங்கி வந்து அரசு ஆதார விலையில் கொள்முதல் மையங்களில் கிலோ 108.60 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.தற்போது உலர் கொப்பரைக்கு தேவை அதிகரித்துள்ளதால் இதே விலை நீடிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. அரசு கூடுதல் கொள்முதல் மையங்களை திறந்து விவசாயிகள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
- இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.44 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.
இதன்படி ஞாயிற்று க்கிழமை நடைபெற்ற சந்தையில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.மொத்தம் 82 காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 40 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.
சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கயம் இன மயிலை பசுமாடு ரூ.66 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.44 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.17 லட்–சத்–திற்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- பல்லடத்தில் இருந்து கரூர் நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது.
- சரக்கு வேனும்-லாரியும் மோதியதில் 4பேர் பலியாகினர்.
காங்கயம் :
கரூரில் இருந்து நேற்று காலை அரசு பஸ் ஒன்று கோவை நோக்கி காங்கயம் வழியாக வந்து கொண்டிருந்தது. பஸ்சை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணபவன் (வயது 57) என்பவர் ஓட்டி வந்தார். இதேபோல் பல்லடத்தில் இருந்து கரூர் நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேனை பல்லடம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (35) என்பவர் ஓட்டிச்சென்றார்.
இந்த நிலையில் நேற்று மதியம் காங்கயம்- கரூர் சாலை, வீரணம்பாளையம் பிரிவு அருகே அரசு பஸ் வந்தபோது, எதிரே வந்த லாரியை முந்திக்கொண்டு வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. அப்போது வேனுக்கு பின்னால் வந்த காரும் வேனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் மற்றும் அரசு பஸ்ஸின் முன் பகுதிகள் சேதமடைந்தன.
இந்த விபத்தில் வேன் டிரைவர் விக்னேசுக்கு இடது கால் துண்டானது. அரசு பஸ் டிரைவர் சரவணபவன், கண்டக்டர் முருகேசன், பயணிகள் ரிதன்யா, தினேஷ், கணேஷ், சின்னதுரை உள்பட பயணிகள் 4 பேருக்கு படுகாயங்களும், 25-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூர், ஈரோடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட வேன் டிரைவர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் காங்கயம் அருகே சரக்கு வேனும்-லாரியும் மோதியதில் 4பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர். நேற்று மற்றொரு விபத்தில் வேன் டிரைவர் பலியான நிலையில், பஸ்பயணிகள் 25 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- விபத்து பகுதிகளில் சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
காங்கயம் :
சாலை விபத்துகளை தடுக்க போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக பதிவேட்டின்படி காங்கயம் தாலுகா பகுதியில் கடந்த 6 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் 981 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2017-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் 155 பேரும், 2018-ம் ஆண்டில் 174 பேரும், 2019-ம் ஆண்டில் 182 பேரும், 2020-ம் ஆண்டில் 163 பேரும், 2021-ம் ஆண்டில் 147 பேரும், 2022-ம் ஆண்டில் 160 பேரும் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்திலேயே கடந்த 6 ஆண்டுகளில் நடந்த சாலை விபத்துகளில் காங்கயம் தாலுகா பகுதியில் 981 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.காங்கயம் பகுதியில் விபத்துகளை தடுக்கும் விதமாக அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் அபாயகரமான வளைவுகள் மற்றும் விபத்து பகுதிகளில் சோலார் சிக்னல் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவு, பகல் நேரங்களில் விட்டு விட்டு ஒளிர்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இரவு மற்றும் பகல் நேரங்களில் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்கி வருகின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்பட்டு வருகிறது.