என் மலர்
நீங்கள் தேடியது "சமயபுரம்"
- பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார்.
- ஸ்ரீகந்தபுரீஸ்வரரை வணங்கினால், சகல நலனும் பெறலாம்.
'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்பது சத்தியமான வார்த்தை! நம் தீவினை நமக்குள்ளேயேதான் உள்ளது. அது... கர்வம்! 'நான்' என்பதை அழிக்க, முனிவர்களும் ஞானிகளும் தெளிவுற வலியுறுத்தியுள்ளனர்.
கர்வத்தால் துயரத்தைச் சந்தித்த இன்னொருவரும், 'கர்வம் கூடாது, தலைக்கனம் வேண்டாம்' என அறிவுறுத்தியுள்ளார், கர்வத்தால் தன் தலையையே இழந்த அவர்- பிரம்மா! தலையை இழந்தார், பதவியை இழந்தார்; பணியை இழந்தார். வெறுமனே இருந்தார்.
'சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து, எனக்கும் ஐந்து தலைகள்' என்று ஆணவம் கொண்டிருக்க... பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான். இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார்! பிரம்மா வணங்கியதால் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது! ஆனால், வரம் கொடுத்த சிவனார், கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தார்.
'இழந்த ஆற்றலையும் தேஜசையும் வழங்குங்கள் ஸ்வாமி' என சிவனாரை நோக்கி கடும் தவம் இருந்த பிரம்மாவின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், 'நீ இழந்தவற்றை திரும்பப் பெற வேண்டுமெனில், 'கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்த தலத்துக்கு வரும் வேளையில், 'விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!' என்றார்.
அதாவது முன்பு எழுதிய விதியைத் திருத்தி, செம்மையாகவும் சிறப்பாகவும் விதியை மாற்றி எழுதச் சொன்னார் சிவபெருமான்! பிரம்மாவும் ஏற்றார், வரம் பெற்றார். இழந்த ஆற்றலைப் பெற்றார். பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா!
திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். இந்த ஊரில், பிரமாண்ட ஆலயத்தில், பிரம்மா தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... பிரம்ம புரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயு மானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணா சலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திர நாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திரு மேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். எனவே இங்கே வந்து தரிசித்தால், 12 தலங்களை தரிசித்த புண்ணியம் கிட்டுமாம்!
தலத்தின் நாயகி- கருணைக் கடலான ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி! சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளிய தால், பிரம்ம சம்பத் கௌரி எனும் திருநாமம் இவளுக்கு! பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், சிவனாரின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப் பாதங்களிலும் விழுமாம்!
குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மகேஸ்வர: குருசாட்சாத் பர பிரம்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்பதற்கு ஏற்ப, ஆலயத்துள்... சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி, அடுத்து அருகில் தனிச்சந்நிதியில் ஸ்ரீபிரம்மா, கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணு, அடுத்து மூலவரான ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என காட்சி தருவது விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.
ஆரம்பத்தில், திருப்படையூர் என அழைக்கப்பட்டதாம்! முருகப்பெருமான், அசுரர்களை அழிப்பதற்காக இங்கே... சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பிறகு படை திரட்டிச் சென்றாராம். இதனால் இந்த ஊர் திருப்படையூர் எனப்பட்டு திருப்பட்டூர் என்றானதாகச் சொல்கிறது தல வரலாறு! இங்குள்ள ஸ்ரீகந்தபுரீஸ்வரரை வணங்கினால், சகல நலனும் பெறலாம்.
இன்னொரு விஷயம்... பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான... அதாவது முக்தி அடைந்த தலங்களாக, ராமேஸ்வரம் முதலான பத்து தலங்களைச் சொல்வர். இவற்றுள், திருப்பட்டூர் தலமும் ஒன்று! இங்கு, சிவபெருமானுடன் பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான இடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். சித்தர் பாடலில் 'பதஞ்சலி பிடவூர்' என இந்தத் தலம் சிறப்பிக்கப்படுகிறது.
இப்போது இந்தப் பகுதியையே தியான மண்டபமாக அமைத்துள்ளனர். யோக நிலையை அடைய விரும்புபவர்கள், மனதில் அமைதி இன்றி தவிப்பவர்கள், இங்கே வந்து பதஞ்சலி மகரிஷி சமாதிக்கு எதிரே அமர்ந்து தியானம் செய்து வழிபட்டால், நன்மை உண்டு என்கின்றனர் பக்தர்கள்! வைகாசி சதய நாளில், குரு பூஜை விசேஷம். தவிர, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணற்ற பக்தர்கள், மகரிஷியை வணங்குகின்றனர்.
இதோ... ஆங்கிலப் புத்தாண்டு நெருங்கி விட்டது; 2010-ஆம் வருடத்தை வரவேற்கவும் உறவுகளுக்கும் தோழமைகளுக்கும் வாழ்த்துகளைப் பரிமாறவும் தயாராகி விட்டோம். இந்த வேளையில்... நம் புத்தியில் அகந்தை அகன்று, புதுவாழ்க்கை மலர, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து, பிரம்மாவை தலை வணங்கி வேண்டுங்கள்; நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார், பிரம்மா!
மஞ்சள் காப்பு... புளியோதரை!
வாழ்வில் துன்பம், கடன் தொல்லை, நிலையான வேலையின்மை, குழந்தை பாக்கியம் ஆகியன கிடைக்கப் பெறாதவர்கள், இங்கே வந்து பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபட, விரைவில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்; தொட்டில் சத்தம் கேட்கும்! வியாழக்கிழமை காலை 6 மணி; மற்ற நாளில் 8 மணிக்கு பிரம்மாவுக்கு அபிஷேகம் நடைபெறும்!