search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலிபான்"

    • அமைச்சக வளாகத்திற்குள்ளேயே தற்கொலை படைதாக்குதல்.
    • தலிபான் அதிகாரத்தை கைப்பற்றிய பின் கேபினட் மந்திரி கொல்லப்படுவது இதுவே முதல்முறை.

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், அந்நாட்டின் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மற்றும் இருவர் கொல்லப்பட்டனர்.

    தலிபான் ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று வருடத்திற்கு முன் ஆட்சியை பிடித்தது. அதன்பின் தலிபான் வட்டாரத்தில் உள்ள தலைவர் மீது நடைபெற்ற மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல் இதுவாகும்.

    அகதிகள் அமைச்சக வளாகத்திற்குள் நடைபெற்ற தாக்குதலில் மந்திரி கலில் ஹக்கானி கொல்லப்பட்டார். இவர் உள்துறை பொறுப்பு மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மாமனார் ஆவார். சிராஜுதீன் ஹக்கானி தலிபான் நெட்வொர்க்கில் அதிகாரமிக்க தலைவராக உள்ளார்.

    தலிபான் பதவி ஏற்ற பிறகு கேபினட்டில் உள்ள ஒரு தலைவர் கொல்லப்படுவது இதுதான் முதல்முறையாகும். குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.

    • தீய சக்தியின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டார்.
    • ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்.

    தலிபான் அமைப்பின் தலைவர் மேற்கத்திய கலாசாரத்திற்கு எதிராக போர் அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அந்நாட்டு தொலைகாட்சியில் ஆடியோ வெளியிட்ட தலிபான் தலைவர் மேற்கத்திய மனித உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் தீய சக்தியின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அவர்களை கற்களால் அடித்து சாகடிப்பதை நீங்கள் பெண்களுக்கு எதிரான உரிமை மீறல் எனலாம். ஆனால், விரைவில் நாங்கள் விபசாரத்திற்கு எதிரான தண்டனையாக இதனை அமல்படுத்த இருக்கிறோம். நாங்கள் பெண்களை பொது வெளியில் அடிப்போம். இவை உங்களது ஜனநாயகத்திற்கு எதிரானவை, ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்," என்று தெரிவித்தார்.

    தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசு தொலைகாட்சியில் அடிக்கடி முகம் தெரியாதவரின் குரல் செய்திகளை ஒளிபரப்புகிறது. அந்த வகையில், வெளியான ஆடியோவில் தான் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர தண்டனை குறித்த அறிவிப்பு இடம்பெற்று இருந்தது.

    • இந்து குஷ் மலைத்தொடர் 800 கிலோமீட்டர் நீளம் உள்ளது
    • தலிபான்களால் தங்கள் வாழ்வாதாரம் சீர்குலைவதாக கலாஷ் மக்கள் அச்சப்படுகின்றனர்

    இமயமலைக்கு மேற்கே, மத்திய மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வடகிழக்கு பாகிஸ்தான் வழியாக தென்கிழக்கு டஜிகிஸ்தான் வரை நீண்டு செல்வது இந்து குஷ் (Hindu Kush) மலைத்தொடர்.

    சுமார் 800 கிலோமீட்டர் நீளம் உள்ள இந்த மலைத்தொடரில் மலையேறுதலுக்காகவும் இங்குள்ள பள்ளத்தாக்கு பகுதிகளில் சுற்றுலாவிற்கும் அயல்நாட்டினர் வருவது வழக்கம்.

    பாகிஸ்தானுக்கு உட்பட்ட இந்த மலைத்தொடரின் இயற்கை அழகு மிகுந்த பள்ளத்தாக்கு பகுதி, கலாஷ் (Kalash).


    கலாஷ் பள்ளத்தாக்கை சேர்ந்த பழங்குடி இன மக்கள் ஆடு வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகிய தொழில்களில் ஈடுபடுகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருவாய் ஈட்டுகின்றனர்.

    கலாஷ் பள்ளத்தாக்கு பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.

    சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த பாகிஸ்தானி தலிபான் (Tehrik-e Taliban Pakistan) எனும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சுமார் 200 பேருக்கும் மேல் அந்த பகுதியை ஆக்ரமிக்க முனைந்து அதிகாலையில் ஆயுதங்களுடன் வந்தனர். அப்பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மரங்கள் பின்னால் ஒளிந்து கொண்டு பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த தயாராகினர்.

    இதையறிந்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உடனடியாக ஒரு படையை அனுப்பி தலிபான்களின் திட்டத்தை முறியடித்தனர். இதில் பாகிஸ்தான் தரப்பில் 5 பேரும், தலிபான் தரப்பில் 20 பேரும் உயிரிழந்தனர்.

    2021லிருந்து தங்கள் நாட்டின் மீது ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதை அந்நாடு தடுக்க தவறி விட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், ஆப்கானிஸ்தானின் ஆளும் தலிபான் அரசு இதனை மறுத்து வருகிறது. கலாஷ் பள்ளத்தாக்கை தலிபான் கைப்பற்றினால், பாகிஸ்தான் மீது அடுத்தடுத்த தாக்குதல் நடத்துவது எளிதாக இருக்கும் என்பதால் இதனை கைப்பற்ற தொடர்ந்து தலிபான் முயன்று வருகிறது.

    இந்நிலையில், கலாஷ் பள்ளத்தாக்கில் வசிக்கும் பூர்வகுடி மக்கள் இத்தனை நாட்கள் அமைதியாக வாழ்ந்து வந்த தங்கள் வாழ்க்கை குறித்து அச்சப்பட துவங்கியுள்ளனர்.


    கிரேக்க பேரரசரான அலெக்ஸாண்டரின் வம்சமாக தங்களை அடையாளப்படுத்தி வரும் கலாஷ் மக்களின் கலாச்சாரம், பாகிஸ்தானிய கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டது. பல பெயர்களிலும் வடிவங்களிலும் ஆண், பெண் தெய்வங்களை வழிபட்டு, விவசாயத்தை போற்றும் விதமாக பண்டிகைகள் கொண்டாடும் இந்த அமைதியான மக்கள், தலிபானால் மதமாற்ற அச்சுறுத்தல்களுக்கு ஆளாவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

    அங்குள்ள பண்ணை வேலைகள், விவசாயம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அவர்களின் வாழ்வாதார பணிகள், தலிபான்களின் தாக்குதல்களால் சீர்குலைந்து வருவதால் தங்கள் எதிர்காலம் குறித்து அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

    தலிபான் தாக்குதல்கள் இனியும் நடந்தால், அதை வெற்றிகரமாக முறியடிப்போம் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தானில் தற்போது காபந்து அரசு நடந்து வருகிறது
    • எங்கள் மண்ணை ஆப்கன் பயங்கரவாதிகள் பயன்படுத்துகிறார்கள்

    கடந்த 2018ல் பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கான தேர்தலில் பெரும்பான்மைக்கு குறைவான எண்ணிக்கையில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்தார் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான்.

    கடந்த 2022ல் இம்ரான்கான் மீது கூட்டணி கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அடுத்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது.

    இதையடுத்து, 2022 ஏப்ரல் மாதம், ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    கடந்த 2023 ஆகஸ்ட் மாதம், பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஷாபாஸ் ஷெரீப், அதிபர் ஆரிப் ஆல்விக்கு சிபாரிசு செய்தார். அதை ஆல்வி ஏற்று கொண்டதை அடுத்து அந்நாட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

    காபந்து பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் (Anwar Ul Haq Kakar) ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்றார். அங்கு தற்போது காபந்து அரசு நடைபெற்று வருகிறது.

    2024 பிப்ரவரி 8 அன்று அங்கு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே சமீப சில மாதங்களாக பாகிஸ்தானில் ஆங்காங்கே குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    இது குறித்து அந்நாட்டின் காபந்து பிரதமர் அன்வர் கருத்து தெரிவித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    எங்கள் அண்டை நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் 2021ல் தலிபான்கள் பதவியேற்றது முதல் எங்கள் நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. முன்பை விட 60 சதவீதம் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்கொலைப்படை தாக்குதல்களில் 500 சதவீத அதிகரிப்பை பார்க்கிறோம். எங்கள் மண்ணை பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தும் போக்கை ஆப்கானிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (TTP) போன்ற பாகிஸ்தானுக்கு எதிரான அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 வருடங்களில் 2,267 பாகிஸ்தானியர்கள், அந்த அமைப்பினரால் இங்கு நடத்தப்பட்ட தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்; 15 ஆப்கான் தற்கொலைபடையினரும் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக இங்கு குடியேறியவர்களை வெளியேற்றுவது உள்நாட்டு அமைதிக்கான நடவடிக்கை. இதை செய்வதற்கு எங்களுக்கு முழு உரிமை உள்ளது.

    இவ்வாறு அன்வர் தெரிவித்தார்.

    • பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 17 லட்சம் அகதிகள் வசிப்பதாக கூறப்படுகிறது.
    • புலம் பெயர்ந்தோர் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது ஏராளமானோர் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடியேறினர். அந்தவகையில் பாகிஸ்தானில் மட்டும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுமார் 17 லட்சம் அகதிகள் வசிப்பதாக கூறப்படுகிறது. இதனால் புலம் பெயர்ந்தோர் பிரச்சினை குறித்து ஆப்கானிஸ்தானுடன் பாகிஸ்தான் அரசாங்கம் நீண்ட காலமாக விவாதித்து வருகிறது. எனினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

    இந்தநிலையில் சட்ட விரோதமாக பாகிஸ்தானில் குடியேறி உள்ள அனைவரும் வருகிற 31-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும். இல்லையெனில் அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந்தேதி முதல் கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள் என பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஜலீல் அப்பாஸ் ஜிலானி கூறினார். பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.

    • ஒரு அமெரிக்க பெண் உட்பட குறைந்தது 18 ஊழியர்களைக் தலிபான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இக்குகுழுவை கண்காணித்து வருவதாக மாகாணத்தின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ஹமாஸ் கோரி தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை பிடித்ததில் இருந்து இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கடுமையான விளக்கத்திற்கு ஏற்ப என்ஜிஓக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பெண்கள் பணியாற்றுவதைத் தடுப்பது உட்பட மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

    இளம் பெண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பொது சமூக வாழ்க்கையின் பல முன்னாள் நபர்களிடமிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 18 பணியாளர்களை தலிபான் கைது செய்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் கிறிஸ்தவ மிஷனரிப் பணிகளை மேற்கொள்வதாகக் குற்றம் சாட்டி, ஒரு அமெரிக்க பெண் உட்பட குறைந்தது 18 ஊழியர்களைக் தலிபான் கைது செய்துள்ளதாக அந்நாட்டுத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மத்திய ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் உள்ள அதன் அலுவலகத்திலிருந்து அதன் பணியாளர்கள் தலைநகர் காபூலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதை சர்வதேச உதவித் திட்டம் உறுதிப்படுத்தியது.

    பாதுகாப்பு மற்றும் உளவுப் படைகள் இக்குகுழுவை கண்காணித்து வருவதாக மாகாணத்தின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் அப்துல் வாஹித் ஹமாஸ் கோரி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," கிறிஸ்தவ மதத்தில் சேர மக்களை அழைப்பதாகக் காட்டும் ஆவணங்களும் ஆடியோக்களும் பெறப்பட்டன. வெளிநாட்டவர் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளின் தன்மை குறித்து தன்னிடம் எந்த தகவலும் இல்லை" என்றார்.

    • கிறிஸ்தவத்தை பரப்புதல், ஊக்குவித்ததாக குற்றச்சாட்டு
    • இதுகுறித்து என்.ஜி.ஓ. அமைப்பு கருத்து தெரிவிக்கவில்லை

    ஆப்கானிஸ்தானில் தலிபான், ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பெண்களுக்கான சுதந்திரத்தில் தலையிட்டு கல்லூரிக்கு பெண்கள் செல்லக் கூடாது, அழகு நிலையத்தில் பணிபுரியக்கூடாது உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்தது.

    மேலும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் 18 ஊழியர்களை பிடித்து வைத்துள்ளதாக சர்வதேச உதவி பணி என்ற அமைப்பு, "தங்களுடைய 18 ஸ்டாஃப்களை தலிபான் பிடித்து வைத்துள்ளது. மத்திய கோர் மாகாணத்தில் உள்ள இரண்டு என்.ஜி.ஓ. அலுவலகத்தில் பணிபுரிந்தவர்களை தலிபான் பிடித்துள்ளது. அவர்கள் காபுல் சென்று கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஸ்டாஃப்களை பிடித்துச் செல்லவதற்கான காரணம் குறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளது.

    ஆப்கான் அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.

    கிறிஸ்தவத்தை பரப்புதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டதால் அமெரிக்காவைச் சேர்ந்தவர் உள்ளிட்ட ஸ்டாஃப்கள் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர் என மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக உள்ளூர் மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

    இந்த குற்ற்சாட்டுக்கு அமெரிக்கா, என்.ஜி.ஓ. ஆகியவை பதில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த என்.ஜி.ஓ. சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் மட்டும் பணியாற்றி வருகிறது.

    • பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
    • பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன.

    ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள்.

    உயர்நிலை கல்வி பயில பெண்களுக்கு தடை விதித்தனர். பல்கலைக்கழகங்கள், அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய பூங்காக்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் மேலும் ஒரு தடை விதித்துள்ளனர்.

    இதுகுறித்து தலிபான் அரசின் நல்லொழுக்கம் துறை துணை மந்திரி காலித் ஹனாபி கூறும்போது, 'பூங்காவுக்கு செல்லும்போது பெண்கள் ஹிஜாப் அணிவதில் சரியான முறையை கடைபிடிப்பதில்லை. பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன. அதுவரை பெண்கள் பூங்காவுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது என்றார்.

    • ஆப்கானானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார்.
    • ஆப்கனில் இதுவரை 218 பேர் நீதிக்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.

    பயங்கரவாத பரவலை அழிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) நாடுகளின் துருப்புகள், 2001-ல் ஆப்கானிஸ்தானில் தங்களை நிலைநிறுத்தி கொண்டு, அங்கிருந்த தலிபான் அமைப்பினரை விரட்டியடித்தது.

    ஆனால், கடந்த 2021ம் வருடம் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. இதனையடுத்து, சுமார் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர்.

    தனது உயிருக்கு ஆபத்து நேரலாம் என அஞ்சி, அங்கு அதுவரை ஆட்சி செய்து வந்த அஷ்ரப் கானி, அந்நாட்டை விட்டே வெளியேறினார்.

    அதற்கு பிறகு தற்போது வரை நடைபெறும் தலிபான்கள் ஆட்சியில் மனித உரிமைகளை கண்டு கொள்ளாமல் பல கடுமையான சட்டங்களை அந்த அரசாங்கம் போட்டிருக்கிறது. இவற்றை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.

    இந்நிலையில் உனாமா (UNAMA) எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்கானிஸ்தானுக்கான உதவும் அமைப்பு, அங்கு நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை குறித்தும், தலிபான்களின் ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் குறித்தும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

    அந்த அறிக்கையில், "ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவம், சட்டம் மற்றும் அரசாங்க அமைப்பை சேர்ந்த சுமார் 200 பேரை தலிபான் கொன்றிருக்கிறது. தலிபானின் பழைய எதிரிகள் என கருதப்படும் ஆப்கானிஸ்தானின் முந்தைய அரசாங்கத்தின் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என தலிபான் வாக்குறுதி கொடுத்தது. ஆனால், இதை மீறும் விதமாக இவை அனைத்தும் சட்ட விரோதமாக நடைபெற்றுள்ளன."

    "சுமார் 218 பேர் நீதிக்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் பாதிக்கும் மேல் தலிபான் ஆட்சி பொறுப்பேற்ற 4 மாதங்களுக்காகவே நடைபெற்றிருக்கிறது. அனேக குற்ற செயல்களுக்கு குற்றவாளிகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விளைவுகளை பற்றி கவலைப்படாமல் முன்னாள் அரசாங்க அதிகாரிகள் அழிக்கப்படுவது தொடர்ந்து வருவது கவலைக்குரிய ஒன்று."

    "முன் அறிவிப்பின்றி கைது செய்தல், சித்தரவதை செய்தல் உட்பட பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் சம்பந்தமான 800-க்கும் மேற்பட்ட சம்பவங்களை பதிவு செய்திருக்கிறோம். காபுல், காந்தகர் மற்றும் பால்க் பிராந்தியங்களில் இவை அதிகமாக நடைபெற்று இருந்தாலும், 34 பிராந்தியங்களிலும் இவை பதிவாகியுள்ளன," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

    ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள தலிபான் அமைப்பு, "முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த அரசாங்க மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது என மூத்த தலிபான் தலைவர்கள் முடிவு செய்தனர். இது மீறப்பட்டதாக எங்கும் புகார்கள் வரவில்லை. முன்னாள் அரசாங்கத்தை சேர்ந்த யாரும் முறையற்ற வழியிலோ, நீதிக்கு புறம்பாகவோ கைது செய்யப்படவோ, காவலில் வைக்கப்படவோ, சித்தரவதை செய்யப்படவோ இல்லை," என்று தெரிவித்துள்ளது.

    • இத்தகைய தாக்குதல்களை பாகிஸ்தான் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது
    • பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் ஏன் பாகிஸ்தான் வெற்றி பெற முடியவில்லை

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பொதுமக்களும், ராணுவத்தினரும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

    சென்ற மாதம் நடைபெற்ற ஒரு தாக்குதலில் 12 பாகிஸ்தான் நாட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான் அமைப்பின் ஒரு பிரிவான தெஹ்ரிக்-யே-தலிபான் பாகிஸ்தான் எனும் தீவிரவாத குழு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானுக்கெதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    "ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்; ஆனால் போதுமான நடவடிக்கைகளை அது எடுக்கவில்லை. இத்தகைய தாக்குதல்களை பாகிஸ்தான் ஒரு போதும் சகித்துக் கொள்ளாது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்" என பாகிஸ்தான் எச்சரித்தது.

    இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் விமர்சித்துள்ளது.

    தலிபான் அரசாங்க செய்தித்தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் இது குறித்து கூறியதாவது:

    "எங்கள் மண்ணை ஒரு போதும் நாங்கள் பயங்கரவாதத்திற்காக பயன்படுத்தவில்லை; பயன்படுத்த அனுமதிப்பதுமில்லை. பாகிஸ்தானில் மட்டும் ஏன் பயங்கரவாதம் வளர்கிறது? பட்ஜெட்டில் பெரும் பகுதியை பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த செலவு செய்தும் ஏன் பாகிஸ்தானால் அதில் வெற்றி பெற முடியவில்லை? எங்கள் மீது குற்றம் சாட்டாமல் விடையை பாகிஸ்தான் தங்கள் நாட்டிற்குள்ளேயேதான் தேட வேண்டும்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும் அதை தலிபான்கள் கண்டு கொள்வது இல்லை.
    • மாணவிகள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாது, வெளியில் காரில் பெண்கள் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும் என பல்வேறு விதிகளை விதித்து வருகின்றனர். இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த போதிலும் அதை தலிபான்கள் கண்டு கொள்வது இல்லை.

    இந்த நிலையில் பெண்குழந்தைகள் 3-ம் வகுப்புக்கு மேல் படிக்க கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளை உடனே வீட்டுக்கு அனுப்புமாறு பள்ளிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். இது அங்குள்ள மாணவிகள் மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • எந்த மேற்கத்திய நாடும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை
    • மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டை விளக்கினர்

    2021-ம் வருடம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டது.

    இதனையடுத்து மத அடிப்படைவாத தலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிலிருந்தே தலிபான் அரசாங்கம் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

    குறிப்பாக மத ரீதியான காரணங்களை வலியுறுத்தி பெண்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை தடை செய்திருக்கிறது. இதுவரை எந்த மேற்கத்திய நாடும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆட்சியமைத்த 2 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க பிரதிநிதிகள், தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களை கத்தார் நாட்டில் சந்தித்தனர்.

    தலிபான் தரப்பில் இருந்து அவர்கள் நாட்டிற்கு அமெரிக்கர்கள் வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள சுற்றுபயண தடை உட்பட பல தடைகளை நீக்குவது குறித்தும், வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்கு சொந்தமான சொத்துக்களை திரும்ப பெறுவது குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    அமெரிக்க தரப்பில் ஆப்கானிஸ்தானில் நிலவும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து முக்கியமாக அலசப்பட்டது.

    இந்த சந்திப்பில் சிறப்பு அமெரிக்க பிரதிநிதி தாமஸ் வெஸ்ட் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான தூதர் ரீனா அமிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தலிபானின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டை விளக்கினர். ஆப்கானிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக வேண்டிய உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    பெண் குழந்தைகளின் கல்வி தடை, பெண்கள் வேலைக்கு செல்வதற்கான தடை, ஊடகங்களுக்கான தடை மற்றும் பிற மத வழிபாட்டு தடை உட்பட தாலிபான் விதித்திருக்கும் பல தடைகளை நீக்க கோரும் அமெரிக்க நிலைப்பாடு விளக்கப்பட்டது.

    உலகின் மிகப்பெரிய ஓபியம் பயிரிடும் நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்ததும், ஓபியம் பயிரிடுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.

    தலிபான் அரசு ஆட்சியை கைப்பற்றிய உடன் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு மத்திய வங்கியின் பணம் ரூ.57 ஆயிரம் கோடியை ($7 பில்லியன்) நியூயார்க் வங்கியில் முடக்கி வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    ×