search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "21 MLAs அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்"

    டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் என 21 பேர் குற்றாலத்தில் இன்னும் 2 நாட்கள் தங்கி இருக்க திட்டமிட்டுள்ளனர். #MLAsDisqualificationCase #18MLAs #TTVDhinakaran
    தென்காசி:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் திடீரென முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.

    அவர்கள் அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை ஆகஸ்டு 22-ந்தேதி சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுகிறோம்” என்று கூறி இருந்தனர்.

    இதையடுத்து 19 எம்.எல்.ஏ.க்களிடமும் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பிறகு 19 எம்.எல்.ஏ.க்களின் செயல், தானாக முன் வந்து அ.தி.மு.க.வின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து வெளியேறியதற்கு சமம். எனவே 19 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் ஆகஸ்டு 24-ந்தேதி பரிந்துரை செய்தார்.

    இதற்கிடையே 19 எம்.எல்.ஏ.க்களில் எஸ்.டி.கே.ஜக்கையன் மட்டும் செப்டம்பர் 17-ந்தேதி சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார். இதையடுத்து 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி அறிவித்தார்.

    இதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி சுந்தரும் மாறுபட்ட கருத்தை தீர்ப்பாக வழங்கினார்கள்.

    இதைத்தொடர்ந்து 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்திய நாராயணன் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி முதல் இந்த வழக்கை விசாரணை நடத்தி வந்தார். கடந்த ஆகஸ்டு 31-ந்தேதியுடன் விசாரணை முடிவடைந்தது.

    தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் நீதிபதி சத்திய நாராயணன் ஒத்தி வைத்துள்ளார். இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இந்த வாரம் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

    இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 18 எம்.எல்.ஏ.க்களுக்கும் சாதகமாக தீர்ப்பு வந்தால், தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் அனைத்து தரப்பினரும் இந்த தீர்ப்பின் முடிவை ஆவலுடன் எதிர் பார்த்து உள்ளனர்.

    இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களையும் தொடர்ந்து தங்கள் அணியில் பாதுகாப்பாக வைக்க தினகரன் அணி மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை நெல்லை மாவட்டம் குற்றாலத்துக்கு நேற்று அழைத்து சென்றனர். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கிமுத்துவுக்கு சொந்தமான சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


    தங்க தமிழ்செல்வன் (ஆண்டிப்பட்டி), செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), பழனியப்பன் (பாப்பிரெட்டி பட்டி), கதிர்காமு (பெரிய குளம்), ஏழுமலை (பூந்தமல்லி), முருகன் (அரூர்), மாரியப்பன் கென்னடி (மானாமதுரை), பார்த்திபன் (சோழிங்கர்), கோதண்டபாணி (திருப் போரூர்), சுந்தர்ராஜ் (ஓட்டப்பிடாரம்), ரெங்கசாமி (தஞ்சாவூர்), பாலசுப்பிரமணி (ஆம்பூர்), சுப்பிரமணியன் (சாத்தூர்), ஜெயந்தி பத்ம நாபன் (குடியாத்தம்), உமா மகேஸ்வரி (விளாத்திகுளம்) ஆகிய 15 பேர் நேற்று இரவே பழைய குற்றாலத்தில் உள்ள சொகுசு விடுதிக்கு சென்று தங்கினர்.

    அவர்களுடன் பிரபு எம்.எல்.ஏ.வும் தங்கினார். இன்று காலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல். ஏ.க்களான முத்தையா (பரமக்குடி), தங்கதுரை (நிலக்கோட்டை) ஆகியோரும், எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகியோரும் குற்றாலம் சொகுசு விடுதிக்கு வந்தனர்.

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல் (பெரம்பூர்) இன்று பிற்பகல் குற்றாலம் சொகுசு விடுதிக்கு வருகிறார். இதனால் குற்றாலத்தில் 21 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

    இன்று காலை குற்றாலத்தில் தங்கியுள்ள தங்க தமிழ்செல்வன் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பலர் பழைய குற்றாலம் ரோட்டில் நடைபயிற்சி சென்றனர். பின்பு விடுதிக்கு சென்று தங்கினர்.

    தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் நீராடிய காட்சி.

    சிறிது நேரத்திற்கு பிறகு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும், பதவியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்களும் தாமிரபரணி மகா புஷ்கர விழாவை முன்னிட்டு பாபநாசத்திற்கு சென்றனர். அங்கு அனைவரும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினார்கள். பின்னர் அங்கிருந்து மீண்டும் குற்றாலம் சொகுசு விடுதிக்கு திரும்பினார்கள். இன்னும் 2 நாட்களுக்கு அவர்கள் குற்றாலத்தில் தங்கி இருக்க திட்டமிட்டுள்ளனர்.

    டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் குற்றாலத்தில் தங்கி இருப்பதை தொடர்ந்து அங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் சென்று குவிந்துள்ளனர்.

    அந்த தனியார் விடுதிக்கு வெளியாட்கள் யாரும் உள்ளே செல்ல முடியாதவாறு பலத்த பாதுகாப்பு போட்டுள்ளார்கள். #MLAsDisqualificationCase #18MLAs #TTVDhinakaran
    ×