search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 wayroad"

    ஊத்துக்கோட்டை அருகே 6 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ. 3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், தும்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம், பாலவாக்கம், சென்னங்காரணை, ஆலபாக்கம், பனபாக்கம், ஈன்றம்பாளையம், பேரண்டூர், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை செல்கிறது.

    இந்த கிராமங்கள்வழியாக 6 வழி சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அளவிடும் பணிகளில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சாலை பணியால் ஆயிரக்கனக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள், நூற்றுக்கனக்கான வீடுகள், கிணறுகள், பம்ப் செட்டுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் 6 வழிச்சாலை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

    இந்தநிலையில் தொளவேடு, காக்கவாக்கம், பருத்திமேனிகுப்பம் ஆகிய கிராமங்களில் நிலம் அளவிட அதிகாரிகள் வந்தனர்.

    இதனை அறிந்த 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தொளவேடு கிராமத்தில் ஒன்று திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர். தங்கள் கிராமங்களின் வழியாக 6 வழி சாலை அமைக்க விடமாட்டோம் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் திடீரென அவர்கள் பாலவாக்கம்- தொளவேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் நிலம் அளவிடும் பணியை நிறுத்தி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    கடந்த 8-ந் தேதி சென்னங்காரணை, ஆலபாக்கம் கிராமங்களில் அதிகாரிகள் இரவு நேரங்களில் அளவு கற்கள் நட்டியதை கண்டித்து கிராம மக்கள் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடதக்கது. #tamilnews
    ×