search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "action hero"

    • ஆக்‌ஷன் ஹீரோவாக பல வெற்றி படங்களில் நடித்தவர் சுரேஷ் கோபி
    • பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சரும் பங்கேற்கலாம் என தெரிகிறது

    மலையாள திரையுலக முன்னணி நடிகர்களாக பல தசாப்தங்களாக இருப்பவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால்.

    ஆனால், 90களில் அவர்கள் இருவருக்கும் இணையாக பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்ற முன்னணி ஹீரோ சுரேஷ் கோபி. ஆக்ஷன் ஹீரோவாக பல படங்களிலும், குணசித்திர வேடங்களில் பல படங்களிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் சுரேஷ் கோபி.

    65 வயதாகும் அவர், சில வருடங்களாக நடிப்பதை குறைத்து கொண்டு அரசியலில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

    2016ல் ராஜ்ய சபா நியமன எம்.பி.யாக பாராளுமன்றம் சென்றார்.

    பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேரளாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் சுரேஷ் கோபி, பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளர்.

    சுரேஷ் கோபியின் மகளான பாக்யாவிற்கும் தொழிலதிபர் ஸ்ரேயஸ் மோகன் என்பவருக்கும் கேரளாவின் புகழ் பெற்ற இந்து கோயிலான குருவாயூரில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் வரும் 17 அன்று திருமணம் நடைபெற உள்ளது.

    திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருவனந்தபுரம் க்ரீன்ஃபீல்டு மைதானத்தில் (Greenfield Stadium) ஜனவரி 20 அன்று நடைபெறும்.

    இந்நிலையில், தங்கள் இல்ல திருமண விழாவில் பங்கேற்குமாறு சுரேஷ் கோபி தனது குடும்பத்தினருடன் சென்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பிதழ் வைத்தார்.

    இதையடுத்து, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த பிரதமர் மோடி வருகை தர உள்ளார்.

    முன்னதாக மோடி, காலை 08:00 மணியளவில் குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்ய உள்ளார். பிறகு, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு கொச்சி செல்கிறார்.

    பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திருமணத்தில் பங்கேற்பார் என தெரிகிறது.

    திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகர் சுரேஷ் கோபி களமிறக்கப்படலாம் என சில நாட்களாக செய்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.

    அஜித் நடித்த "தீனா", சரத்குமார் நடித்த "சமஸ்தானம்", விக்ரம் நடித்த "ஐ" உட்பட பல தமிழ் படங்களிலும் நடித்தவர் சுரேஷ் கோபி.

    ×