search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Adambakkam"

    ஆதம்பாக்கம் பகுதியில் சாக்கடை தேங்குவதால் கழிவுநீர் அகற்றும் நிலையத்தை அமைக்க தரவேண்டும் என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    ஆலந்தூர் தொகுதியில் உள்ள நிலமங்கை நகர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க அரசு ஆவன செய்யுமா? என்று சட்டசபையில் தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அமைசர் எஸ்.பி. வேலுமணி பதில் அளித்ததாவது:- நிலமங்கை நகரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சீரமைக்க முதல்- அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்.

    தா.மோ.அன்பரசன்:- 1996-2001-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் ஆலந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, ஆதம்பாக்கம், நிலமங்கை நகரில் 24 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கப்பட்டது.

    தற்போது ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் புதிய குடியிருப்புகள் அதிகரித்ததால் கழிவுநீர் அகற்றும் நிலையம் போதிய திறன் சக்தி இல்லாததால் மழைக்காலத்தில் ஆதம்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதியில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் கழிவுநீர் தேங்குகிறது.

    இந்த நிலையை போக்க இதே திறன் கொண்ட மேலும் ஒரு கழிவுநீர் அகற்றும் நிலையத்தை அதே பகுதியில் அமைத்து தர வேண்டும். இதை மழை காலத்திற்குள் அமைத்து தர வேண்டும்.

    அமைச்சர் எஸ்.பி.வேலு மணி:- நிலமங்கை நகர் கழிவுநீர் அகற்றும் நிலையத்தின் உட்பகுதியில் 150 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள காலியிடத்தில் கூடுதலாக தினமும் 10 மில்லியன் லிட்டர் உந்து திறன் கொண்ட கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்க ரூ. 26 கோடியே 10 லட்சம் மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி பெற்று பணிகள் துவங்கும்.

    தா.மோ.அன்பரசன்:- கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் ஆலந்தூர் பகுதிக்கு ரூ. 66 கோடி செலவில் கொண்டு வரப்பட்ட மெட்ரோ குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படாததால் ஆலந்தூர் பகுதியில் பல இடங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள்.

    ஆலந்தூரில் 82 தெருக்களில் குடிநீர் குழாய்கள் மாற்றுவதற்காக ரூ. 13.71 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை வேகமாக செயல்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.

    வேலுமணி:- பணிகள் வேகமாக முடித்து தரப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ஆதம்பாக்கத்தில் பழ வியாபாரி வீட்டில் ரூ.7½ லட்சம், 15 பவுன் நகையை கொள்ளையடித்த வாலிபவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் வருமான வரி துறை காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (29). இவர் தள்ளுவண்டியில் வைத்து பழ வியாபாரம் செய்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    எனவே ஒரு வீட்டில் தனியாக வாழ்கிறார். வீட்டை கவனித்துக் கொள்ள உதவியாளராக செஞ்சியை சேர்ந்த ஏழுமலை (50) என்பவரை தங்க வைத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏழுமலையின் மகன் கார்த்தி (30) என்பவர் தனது தந்தையை பார்க்க வந்தார். பின்னர் இங்கேயே தங்கிவிட்டார்.

    இந்த நிலையில், தர்மராஜ் நேற்று பழ வியாபாரத்துக்கு வெளியே சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பினார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து உள்ளே பார்த்த போது அங்கு வைத்திருந்த ரூ.7½ லட்சம் ரொக்க பணத்தை காணவில்லை.

    மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளும் ‘அபேஸ்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

    அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவின் வீடியோ பதிவுகளை பார்வையிட்டனர். அதில் ஏழுமலையின் மகன் கார்த்தி தனது லுங்கிக்குள் பணம் மற்றும் நகைகளை மடித்து எடுத்து சென்றது தெரியவந்தது. எனவே அவற்றை கொள்ளையடித்தது இவர்தான் என கண்டு பிடிக்கப்பட்டது.

    அவரை பல இடங்களிலும் போலீசார் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. எனவே அவரது தந்தை ஏழுமலையை பிடித்து போலீசார் செஞ்சிக்கு அழைத்து சென்றனர். அங்கும் கார்த்தி வரவில்லை. ஆகவே தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆதம்பாக்கத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மனைவியை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம் அம்பேத்கார் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை. அ.தி.மு.க. பிரமுகர். இவரது மனைவி கவிதா (வயது40). இவர் வட்டி தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராபின் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு கவிதா அதே பகுதியில் உள்ள தனது கடை முன் நின்றிருந்தார். அப்போது ஆட்டோ- மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்தபடி 8 பேர் வந்தனர்.

    திடீர் என்று அவர்கள் கவிதாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவருக்கு கழுத்து, தலை ஆகிய இடங்களில் வெட்டு விழுந்தது. உடனே அவர் அலறியபடி தப்பி ஓடினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    இதற்குள் 8 பேரும் மோட்டார்சைக்கிள்களில் தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த கவிதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபின், சசி என்ற மணிகண்டன், கார்த்திக், குணா, விஜி, மற்றொரு கார்த்திக் ஆகிய 6 பேரை கைது செய்தனர். ராபின் போலீசாரிடம் கூறுகையில், தனது தந்தை கொலைக்கு பழிக்கு பழி வாங்கவே தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

    இதில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். #Tamilnews
    ×