search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "admk figure murder"

    சீர்காழியில் கொல்லப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக சேலம் கோர்ட்டில் சரணடைந்த 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல்கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 47). இவர் கொள்ளிடம் ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளராக இருந்து வந்தார். மேலும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆதரவாளராகவும் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ரமேஷ் பாபுவை கடந்த 23-ந் தேதி பிடாரி வடக்கு வீதியில் 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

    அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் ஆதரவாளராகவும், நாகை மாவட்ட அ.தி.மு.க.வில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய வந்த ரமேஷ் பாபு, கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கொலை பற்றி விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார், திருக்கடையூர் பகுதியில் அனாதையாக நின்றது. இதை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வந்தனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் ரமேஷ்பாபு குறுகிய காலத்திலேயே பல்வேறு காண்டிராக்ட் பணிகளை எடுத்தார். இதன்மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். அமைச்சரின் ஆதரவாளராகவும், செல்வாக்குமிக்கவராகவும் கட்சியில் விளங்கினார். இதனால் அவருக்கு தொழில் போட்டி, அரசியல் போட்டிகள் அதிகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதை உணர்ந்த அவர் எப்போதும் தனது பாதுகாப்புக்கு துப்பாக்கியை வைத்திருந்தார். ஆனால் அவர் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவிக்கவில்லை. இதுவே கூலிப்படைக்கு அவரை கொலை செய்ய வசதியாக போய்விட்டது.

    ரமேஷ்பாபுவை கொலை செய்ய திட்டம் தீட்டிய கொலை கும்பல், கடந்த 20-ந் தேதியே நாகை மாவட்டத்தில் திருக்கடையூர், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் கார்களில் சுற்றி வந்துள்ளனர். ரமேஷ் பாபுவை தீவிரமாக நோட்டமிட்டே இந்த கொலை அரங்கேற்றியுள்ளனர்.

    இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை, பகுதியை சேர்ந்த 3 ரவுடிகளிடம் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ரமேஷ்பாபு கொலை தொடர்பாக சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எண்.2-ல் நீதிபதி முன்னிலையில் சீர்காழி மதுத்துறை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பார்த்திபன் (வயது 28), திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பாலு மகன் அருண்பிரபு(34) மற்றும் புதுச்சேரி, மேல்காத்த மங்கலம் தேனீநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் பிரேம்குமார் (22) ஆகிய 3 பேர் சரண் அடைந்தனர். சரண் அடைந்த அவர்கள் 3 பேரையும் சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே கோர்ட்டில் சரண் அடைந்த பார்த்திபன் உள்பட 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அவர்கள் நேற்று இரவே சேலத்தில் புறப்பட்டு சென்றனர்.

    சேலம் சிறையில் உள்ள 3 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் தான் ரமேஷ்பாபுவின் கொலைக்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணியில் யார் இருந்தனர் என்றும் தெரிய வரும் என தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
    ×