search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "against sellers"

    18 வயதுக்குட்பட்டோருக்கு புகையிலை பொருட்கள் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    விருதுநகர்:

    கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின்கீழ் பதிவு பெற்று அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கீழ் 31 குழந்தைகள் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. சுமார் 1,300 குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். மாவட்ட பதிவு பெறாமல் செயல்படும் இல்லங்கள் மற்றும் இதர விடுதிகள் அனைத்தும் இளைஞர் நீதி சட்டம் மற்றும் விடுதிகள் சட்டத்தின்கீழ் பதிவு பெற்று செயல்படவேண்டும். குழந்தைகள் இல்லங்களில் சேர்க்கை மற்றும் நீக்கம் செய்யும்போது குழந்தைகள் நலக்குழுவின் ஆணை உரிய படிவத்தில் பெறவேண்டும்.

    குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளிடம் சட்ட விதிகளுக்கு முரணாக எவ்வித கட்டணங்களும் வசூலிக்கக்கூடாது. வெளி மாநில, மாவட்ட குழந்தைகளை சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட மாநில, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் ஆணை பெற வேண்டும். குழந்தைகள் இல்லங்களை ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட மாவட்ட ஆய்வுக்குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டு, குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, இல்லங்கள் சிறப்பாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையினை எய்திட தொடர் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மீட்கும் குழந்தைகளை குழந்தைகள் நலக்குழு முன் முன்னிலைப்படுத்த வேண்டும். பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் கைவிடப்படும் ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்க அனைத்து குழந்தைகள் இல்லங்கள், மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை தொட்டில் வைக்க வேண்டும்.

    பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான ஆலோசனைப்பெட்டி வைக்க வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மதுபானம், புகையிலை பொருட்கள், போதை தரும் பொருட்கள் வழங்குவதோ, விற்பனை செய்யவோ கூடாது. அந்த செயலில் ஈடுபடுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கணேசன், நன்னடத்தை அலுவலர் முருகன், சமூக நல அலுவலர் ராஜம், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆரோக்கியசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
    ×