search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agricultural schemes"

    • 20 சென்ட் நிலம் சொந்தம் என்ற வகையில் வலைதளம் தானாகவே எடுத்துக் கொள்கிறது.
    • பட்டாவில் சப் டிவிஷன், பெயர் மாற்றம் செய்த விவசாயிகளின் விவரங்கள் உள்ளீடு செய்வதில் சிக்கல் உள்ளது.

    தாராபுரம் :

    மாநில அரசின் வேளாண்மை அடுக்கு திட்டத்தின் கீழ் கிரெய்ன்ஸ் (Grains) வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய், வேளாண் பொறியியல், பட்டு வளர்ச்சி உள்ளிட்ட 13 துறைகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- 'கிரெய்ன்ஸ்' ஒற்றை சாளர முறை அனைத்து விவசாயிகளுக்கும் பலன் தரக்கூடியது. முதற்கட்டமாக, விவசாயிகளின் நில விவரங்கள், அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வாயிலாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. விவசாய நிலங்கள் பெரும்பாலும் கூட்டுப்பட்டாவாக தான் இருக்கிறது. கூட்டுப்பட்டாவில் எத்தனை பேர் இருந்தாலும் மொத்த பரப்பளவு கூட்டுப்பட்டாவில் உள்ள அனைவருக்கும் சமமாக பிரித்து எடுத்துக்கொள்ளும் வகையில் தானியங்கி பதிவேற்றம் செய்யும் முறை உள்ளது.உதாரணமாக ஒரு ஏக்கர் பரப்பளவு (100 சென்ட்) கொண்ட நில பட்டாவில் 5 பேரின் பெயர் இருந்தால் ஒருவருக்கு தலா 20 சென்ட் நிலம் சொந்தம் என்ற வகையில் வலைதளம் தானாகவே எடுத்துக் கொள்கிறது.

    கூட்டுப்பட்டாவில் உள்ள அனைவருக்கும் சமமான நிலம் இருக்கும் என்ற உத்தேச கணக்கு தவறானது.ஒரு விவசாயிக்கு எவ்வளவு நிலம், சொந்தம் என்பது, கிரய பத்திரம் வாயிலாக மட்டுமே தெரிய வரும். கூட்டுப்பட்டாவில் பெயர் இருந்தும் பலர் விவசாயத் தொழிலில் ஈடுபடுவதில்லை. குடும்ப சொத்து கைநழுவிவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே பெயரை நீக்காமல் வைத்திருப்பர். அத்துடன் நிலங்களை விற்பனை செய்த பலரின் பெயர், பட்டாவில் இருந்து தங்கள் நீக்கப்படாமல் உள்ளது. இதன் வாயிலாக விவசாய நிலம் இல்லாதவர்கள் கூட, அரசின் சலுகை மானிய உதவிகளை பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

    கடந்த 6 மாதங்களுக்குள் பட்டாக்களில் ஏற்படுத்தப்பட்ட புதிய உட்பிரிவுகள் மற்றும் பெயர் மாற்றம் தான் கிரெய்ன்ஸ் வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் பட்டாவில் சப் டிவிஷன், பெயர் மாற்றம் செய்த விவசாயிகளின் விவரங்கள் உள்ளீடு செய்வதில் சிக்கல் உள்ளது.

    இதுதவிர ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் பலர், விவசாயிகளிடம் இருந்து வாங்கிய நிலத்தை தங்கள் பெயரில் பட்டா மாறுதல் செய்யாமல் உள்ளனர். பெயர் மாற்றம் செய்தாலும், பல ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை விற்பனைக்கு தயாராக வைத்துள்ளனர். ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தங்கள் வசமுள்ள நில விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய முன்வருவதில்லை. இத்தகைய குறைபாடுகளை களைந்தால் மட்டுமே இதன் நோக்கம் உண்மையான பலன் தரும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    • அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் :

    விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டத்தின் கீழ் கிரைன்ஸ் என்ற இணையதளம் அரசின் திட்டங்கள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் வேளாண்மை அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கிரைன்ஸ் என்ற இணையதளம் மூலமாக அரசின் நன்மைகள் சரியான பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் வருவாய்த்துறை, வேளாண்மை- உழவர்நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பேரிடர்மேலாண்மை, கூட்டுறவுத் துறை, பட்டு வளர்ச்சிதுறை, வேளாண் பொறியியல் துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் விற்பனை, கால்நடை பராமரிப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, விதைச் சான்றளிப்பு மற்றும் சர்க்கரைத் துறைகள் இணைக்கப்பட உள்ளது.

    விவசாயிகளின் விபரங்களை ஒற்றை சாளர முறையில் பதிவு செய்வதால், வெவ்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கும் போது தனித்தனியாக ஆவணங்களை சமர்ப்பிக்காமல் எளிதில் விவசாயிகள் விண்ணப்பிக்கும் வகையில் கிரைன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய ஆவணங்கள் வருமாறு:-ஆதார் அடையாள அட்டை,அலைபேசி எண்,புகைப்படம்,வங்கி கணக்கு விபரம்,நில விபரங்கள்.இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட ஆவணங்களுடன் தங்களது கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்-உதவி வேளாண்மை அலுவலர்-உதவி தோட்டக்கலை அலுவலர்களை அணுகி கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×