search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alappuzha"

    • மணப்பெண் ஹரிதா ஏரியின் நடுவில் தனது திருமணத்தை நடத்த விரும்பினார்.
    • திருமணத்தின்போது கேரள பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட படகில் மணமக்கள் அழைத்து வரப்பட்டனர்.

    திருவனந்தபுரம்:

    சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்க பூமியாக கேரளா விளங்குகிறது என்றே கூறலாம். இங்கு அரசுக்கு அதிக அளவில் வருவாயை ஈட்டி தருவதில் மலைவாசஸ் தலங்களும், நீர்நிலைகளும் முக்கிய பங்காற்றி வருகின்றன. குறிப்பாக ஏரிகளில் நடத்தப்படும் படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

    அதுவும் ஹவுஸ் போட் எனப்படும் மேற்கூரையுடன் கூடிய குடும்ப படகு பயணத்தையும் விரும்புவார்கள். அந்த வகையில் ஹவுஸ் போட் சுற்றுலா கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்தில் கொடி கட்டி பறக்கிறது. இங்குள்ள ஏரிகளில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட படகுகள் சுற்றுலா பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், ஹவுஸ் போட்களில் சில நேரங்களில் கேளிக்கை விருந்துகள் நடத்துவதும் உண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஆலப்புழை கைநகரி ஏரியில் நடந்த ஆடம்பர திருமணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதுகுறித்து சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ் புகைப்படங்களுடன் அது தொடர்பான தகவல்களை முகநூலில் பதிவிட்டுள்ளார். அந்த திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    அதாவது டெல்லி போலீசில் தடயவியல் நிபுணராக பணி செய்து வருபவர் ஹரிதா (வயது 25). இவர் ஆலப்புழை புன்னமடை காயலில் ஆண்டுதோறும் நடைபெறும் படகு போட்டியில் பெண்கள் அணியின் கேப்டன் என்ற முறையில் பங்கேற்று வருகிறார். இவருக்கும், சாலக்குடியை சேர்ந்த ஹரிநாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதில் மணப்பெண் ஹரிதா ஏரியின் நடுவில் தனது திருமணத்தை நடத்த விரும்பினார். இதற்காக மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெற்றார்.

    பின்னர் பிரத்யேகமாக திருமணம் நடத்த மண்டபம் மற்றும் கலைநிகழ்ச்சி, விருந்துகளை தடபுடலாக நடத்த ஒரு சிறிய மண்டபம் போன்று ஏரியில் செட் அமைக்கப்பட்டிருந்தது. திருமணத்தின்போது கேரள பாரம்பரிய முறைப்படி அலங்கரிக்கப்பட்ட படகில் மணமக்கள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்ட மண்டபத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட 700-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஏரியின் நடுவில் நடந்த திருமணம் அனைவரையும் கவர்ந்தது.

    • காரின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
    • 3 பேரும் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் சஞ்சு டெக்கி. பிரபல யூடியூபரான இவர் தனது சேனலில் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வந்தார். அதன் மூலமாக மிகவும் பிரபலமா னார். அவரது யூ-டியூப் சேனலை 1.6 மில்லியன் சந்தாதாரர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் சஞ்சு டெக்கி, நடிகர் பஹத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியான ஆவேசம் படத்தை போன்று தனது காரில் நீச்சல் குளம் அமைத்தார். அதில் தண்ணீரை நிரப்பி தனது நண்பர்களுடன் குளித்தபடியே காரை சாலையில் ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவர்களது காரில் பிரச்சினை ஏற்பட்டதால் காரில் இருந்த தண்ணீரை சாலையில் வெளியேற்றினர்.

    அவர்களின் இந்த நடவடிக்கையால் பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சஞ்சு டெக்கி இந்த காட்சிகளை யூடியூப்பில் நேரலையில் பதிவிட்டதால் அவர் நண்பர்களுடன் காருக்குள் குளித்தது, தண்ணீரை சாலையில் திறந்துவிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு அனைத்தும் யூ-டியூப் நேரலையில் வெளியானது.

    இந்த வீடியோ காட்சியை லட்சக்கணக்கானோர் நேரலையில் பார்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலப்புழா போக்குவரத்து துறை அதிகாரிகள் சஞ்சு டெக்கியின் காரை நடுவழியில் நிறுத்தி பறிமுதல் செய்தனர். போக்குவரத்து விதிகளை மீறியதாக சஞ்சு டெக்கி மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    மேலும் சஞ்சு டெக்கியின் ஓட்டுனர் உரிமம் மற்றும் காரின் வாகன பதிவு சான்றிதழை போக்குவரத்து அதிகாரிகள் ரத்து செய்தனர். இந்நிலையில் சஞ்சு டெக்கி, அவரது நண்பர்கள் சூர்யநாராயணன், அபிலாஷ், ஸ்டான்லி கிறிஸ்டோபர் ஆகிய 3 பேரும் ஒரு வாரம் சமூகசேவை செய்ய வேண்டும் என்று போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    அவர்கள் 3 பேரும் வருகிற 3-ந்தேதி முதல் மலப்புரம் எடப்பால் பகுதியில் உள்ள மோட்டார் வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கட்டாய பயிற்சியில் பங்கேற்க வேண்டும், ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரம் சமூகவேலை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    ஆலப்புழா அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் பெண் டாக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் பிரசன்னகுமார். இவரது மகள் பார்வதி (வயது 25). அங்குள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றினார். இவரது நண்பர் நிதிஷ்பாபு (26). இருவரும் ஆலப்புழாவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர்.

    திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அதே காரில் கோழிக்கோடு புறப்பட்டனர். கார் ஆலப்புழாவில் உள்ள பல்லாதுருத்தி என்ற இடத்தில் கார் வந்தது. அப்போது கோழிக்கோட்டில் இருந்து திருவனந்தபுரத்திற்கு திருமண கோஷ்டியுடன் பஸ் வந்தது. திடீரென கார் மீது பஸ் மோதியது. இதில் கார் நெறுங்கி தீ பிடித்தது.

    காரில் சிக்கிய டாக்டர் பார்வதியும் அவரது நண்பரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று 2 பேரையும் மீட்டனர். பின்னர் கார் முற்றிலும் எரிந்தது.

    மீட்கப்பட்ட டாக்டர் பார்வதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் நிதிஷ்பாபு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆலப்புழா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கேரள மாநிலத்தையே புரட்டி போட்ட மழை வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க உதவிய மீனவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். #KeralaFloods #Congress #RahulGandhi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 8-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 11 நாட்கள் பெய்த பேய் மழை காரணமாக மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசு அமைத்து இருந்த மீட்பு குழுக்கள் மற்றும் இராணுவ படையினர் மிகவும் கடுமையாக போராடினர்.

    இந்த போராட்டத்தில்,கேரள மீனவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. தங்களது படகுகள் போன்ற பல்வேறு வழிகளில் மீனவர்கள் தங்களது மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தனர். இதையடுத்து கேரளாவில் மழை விடுத்த நிலையில், தற்போது சீரமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், கேரள மழை வெள்ள சேதங்களை பார்வையிட  இன்று கேரளா வந்தடைந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ஹெலிகாப்டர் மூலம் செங்கனூர் பகுதிக்கு சென்றார். அங்குள்ள ஒரு முகாமுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, அங்கு தங்கியிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.



    செங்கனூர் பகுதியை பார்வையிட்ட பின்பு, ராகுல்காந்தி ஆலப்புழா சென்றார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், கேரள வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது உதவிய மீனவர்களுக்கு கேடயங்களை வழங்கி, வாழ்த்து கூறி கவுரவித்தார்.

    இதேபோல், நாளை கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தலைமையில் மீனவர்களுக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நிசாகாந்தி அரங்கத்தில் நடைபெற உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மந்திரி மெர்சி குட்டி அம்மா, சுற்றுலாத்துறை மந்திரி கடகம்பள்ளி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #Congress #RahulGandhi
    ×